Bible Study

மலர்:1 இதழ்: 45 அல்லோன்பாகூத் …… ?

ஆதி:  35:8 ரெபேக்காளின் தாதியாகிய  தெபோராள் மரித்து, பெத்தேலுக்கு சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் பண்ணப் பட்டாள், அதற்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று.

 

நாம் நேற்று யாக்கோபை விட்ட போது, அவன் தன் குமாரரிடம் இன் வாசனையை நீங்கள் இந்த இடத்தில் கெடுத்து விட்டீர்களே என்று புலம்பக் கூடிய அளவுக்கு, லேவியும், சிமியோனும் மூர்க்கமாய் நடந்தனர் என்று பார்த்தோம்.

ஆனால் ஆதி: 34 லிருந்து, 35 க்குள் போகும்போது, தேவனை விட்டு விலகி இருந்த இந்த குடும்பம் மறுபடியும், தேவனுடைய திட்டத்துக்குள் வருவதைப் பார்க்கிறோம். ஒரு வனாத்திரத்திலிருந்து, பாலைவனத்துக்குள் வருவது போன்ற அனுபவம்!

இந்த அதிகாரத்தில் கர்த்தர் என்கிற நாமம் பத்து தடவை இடம் பெற்றிருக்கிறது! இங்கு தேவன் தம்மை யாக்கோபுக்கு சர்வ வல்லமையுள்ள தேவனாக (EL SHADDAI) என்ற வல்லமையான நாமத்தோடு வெளிப்படுத்தினார்.

தேவன் யாக்கோபை நோக்கி, அங்கிருந்து புறப்பட்டு பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிடுகிறார். அங்குதான் கர்த்தர் முதன் முதலில் யாக்கோபுக்கு தரிசனமாகி, தன்னை ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும்’ என்று வெளிப்படுத்தினார் அல்லவா? அவனால் மறக்க முடியாத ஒரு இடம்! பெத்தேலுக்கு முப்பது மைல் அப்பால் இந்த குடும்பம் தங்கியதால் பல இன்னல்கள் பட்டன. இப்பொழுது கர்த்தர் அவர்களோடு தம்முடைய உடன்படிக்கையை புதுப்பித்துக் கொள்ளும்படி பெத்தேலுக்கு எழுந்து செல்ல சொல்கிறார்.

மறுபடியும் யாக்கோபு தன் குடும்பத்தின் தலைமையை எடுத்து, அவர்களை சுத்திகரிக்க சொல்லி, அவர்களிடமிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும் விலக்க சொல்கிறான். அவர்கள் அவன் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர்.நம்முடைய விசுவாச பயணத்தில், நாம் பலமுறை தவறி இருந்தாலும், உண்மையாய் மனம் திருந்தி வரும்போது , தேவன் நம்மை பெத்தேலுக்கு வரும்படி அழைக்கிறார். நம்மோடு அவர் ஏற்படுத்தின உடன்படிக்கையை புதுப்பித்து மறுபடியும் நம்மை தன் நேசத்துக்குள் அணைக்க விரும்புகிறார்!

யாக்கோபு பெத்தேலில் ஒரு பலிபீடம் கட்டி, அவன் குடும்பம் முழுவதும், அங்கு தேவனை தொழுது கொண்டனர். இந்த குடும்பம் பெத்தேலில் தேவனை வழிபடும் போது ஒரு துக்கமான சம்பவம் நடை பெற்றது என்று நம்முடைய வேத பகுதி கூறுகிறது.

ரெபெக்காளின் தாதியாகிய தேபோராள் மரித்து போனாள், அவளை பெத்தேல் அருகே  ஒரு கர்வாலி மரத்தின் கீழ் அடக்கம் பண்ணினார்கள், அந்த இடத்துக்கு அல்லோன்பாகூத் என்ற பேர் உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அல்லோன்பாகூத் என்பதற்கு அழுகையின் மரம் என்று அர்த்தமாம். அவர்கள் அந்த இடத்தில் அழுத அழுகை அந்த மரத்துக்கு அழுகையின் மரம்  என்ற பேரைக் கொடுத்தது.

யார் இந்த தாதி? இவள் ரெபெக்காள்  ஈசாக்கை மணக்க புறப்பட்டபோது, அவளோடு தன் தாயின் வீட்டிலிருந்து அழைத்து வந்த பணிப்பெண்ணா?  இவள் எப்படி யாக்கொபிடம் வந்தாள்?

யாக்கோபின் குடும்பம் சீகேமில் தங்கியிருந்த போது ஒருவேளை யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை பார்க்க எபிரோனுக்கு சென்றிருக்க வேண்டும். அங்கு அவன் தன் தாய் ரெபெக்காள் மரித்துவிட்ட செய்தியை கேட்டு விட்டு, அவள் தாதியை தன்னோடு அழைத்து வந்திருக்க வேண்டும். தன் தாயை மறுபடியும் காண முடியவில்லையே என்று அவன் ஏங்கி தவித்தபோது, இந்த வயதான தாதி, அவனை சிறுவயதில் வளர்த்தவள் அவனுக்கு தன் தாயைப் போன்ற உணர்வைக் கொடுத்திருப்பாள். அவளைக் கண்டது யாக்கோபுக்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்? அவன் இழந்து போன தாயே கிடைத்தது போல இருந்திருக்கும்!

இப்பொழுது அவள் மரித்தபோது அந்த குடும்பம் மிகவும் துக்கித்ததைப் பார்க்கிறோம். யாக்கோபு தான் உயிராய் நேசித்த  தாயோடு இருந்த கடைசி தொடர்பு அறுந்துவிட்டது. இது அவனுக்கு எவ்வளவு துக்கத்தைக் கொடுத்திருக்கும்?  இது மட்டுமல்ல யாக்கோபுக்கு இன்னும் ஒரு துக்கம் காத்திருந்தது பெத்தேலில்! அவன் உயிருக்கு உயிராய் நேசித்த அவன் மனைவி  ராகேலையும் இழக்க வேண்டியதிருந்தது! ஆனால் நம் தேவனின் ஆறுதல் அளிக்கும் கரம் அவனை ஆற்றியது, தேற்றியது.

அருமையான தேவனுடைய பிள்ளைகளே! நம் வாழ்க்கையில் குறுக்கிடும் பாவமோ, சோதனையோ, தோல்விகளோ, ஆவிக்குறிய வாழ்க்கையில் காணப்படும் குறைகளோ,  நம்மை தேவனுடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது. அவருடைய நேச கரம் உனக்கு ஆறுதல் அளிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கிறது! ஒரு கணம் அவரை நோக்கி பார்! உன்னை பாச கரத்தினால் அரவணைப்பார்!

ஜெபம்:

தேவனே! யாக்கோபைப் போல பல குறைகள் எங்கள் வாழ்க்கையில் காணப்பட்டாலும், நீர் எங்கள் கண்ணீரை துடைக்கிற தேவனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்.   ஆமென்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s