Bible Study

மலர்:1 இதழ்: 39 தனிமையா? தோல்வியா?

 

ஆதி: 32: 27, 28 அவர் உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.

அப்பொழுது அவர்; இனி உன் பேர் யாக்கோபு  என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும், தேவனோடும், மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

 

யாக்கோபின் குடும்பத்தார் தேவன் காட்டிய புதிய வாழ்வைத் தேடி,தொடர்ந்து நடந்தனர். அவர்கள் எதிர்காலத்தை எதிர்நோக்கி செல்லும்போது இதோ ஏசா 400 பேர் கொண்ட பெரிய படையோடு யாக்கோபை எதிர்கொண்டு வருகிறான் என்று.

யாக்கோபுக்கு தான் ஏசாவை ஏமாற்றி பிறப்புரிமையைப் பறித்தது தான் ஏசாவின் கோபத்துக்கு காரணம் என்று நன்கு தெரியும். அதனால் அதற்கு பரிகாரமாய் தான் சம்பாதித்த சொத்துகளில் ஒரு பங்கை ஏசாவுக்கு பரிசாக அனுப்பி, இதோ உமது அடியானாகிய யாக்கோபின் வெகுமதி என்று சொல்ல சொல்கிறான். வெகுமதி தன் சகோதரனின் கோபத்தை ஆற்றி விடும் என்ற எண்ணத்தில், ஐநூற்று எண்பது விலை உயர்ந்த மிருகங்களை மந்தை மந்தையாக பிரித்து  அனுப்புகிறான்.

நாம் பல நேரங்களில் முறிந்த உறவை புதுப்பிக்க முயற்சி செய்யும்போது, நம்முடைய செல்வாக்கினாலும், பொருளினாலும், உறவை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறோம். இதைவிட ஒரு படி மேலே போனால், நாம் கடவுளைக் கூட அப்படித்தான் நினைக்கிறோம். நாம் கொடுக்கும் காணிக்கையினாலும், நம் நல்ல செயல்களினாலும், நாம் நீதியான காரியங்களை கடைப்பிடிப்பதினாலும் கர்த்தரை நெருங்கிவிட முடியாது.

நம் காணிக்கையோ, நம் செயல்களோ கர்த்தர் நம்மீது காட்டும் அன்புக்கும், இரக்கத்துக்கும் இணையாகாது.  நாம் தேவனை காணிக்கை கொடுத்து வாங்க முடியாது. பலியை அல்ல கீழ்ப்படிதலையே கர்த்தர் விரும்புகிறார் என்று வேதம் சொல்கிறது.

இங்கே யாக்கோபின் இந்த நிலைக்கு காரணம் ஏசா அல்ல, யாக்கொபே தான். கர்த்தர்  யாக்கோபின் இந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

வெகுமதிகளை அனுப்பிவிட்டு, யாக்கோபு தன் இரு மனைவிமாரையும், தன் இரு பணிவிடைக்காரிகளையும், தன் பதினொரு  பிள்ளைகளையும் கூட்டிகொண்டு யாப்போக்கு என்கிற ஆற்றைக் கடந்தான். அங்கு யாக்கோபு  அவர்களை முன் அனுப்பிவிட்டு பின் தங்கி தனியாக தரித்திருந்தான். அங்கே கர்த்தர் அவனை சந்திக்கிறார் என்று பார்க்கிறோம்.

தனிமை என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா உனக்கு? எல்லாராலும் கைவிடப்பட்ட நிலை அல்லது எல்லா முயற்சிகளும் பயனில்லாமல் போன நிலை! இப்படிப்பட்ட நிலைக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாயா? உன் தனிமையில் கர்த்தர் உன்னிடம் வருவார்.

இருபது வருடங்களுக்கு முன்பு கர்த்தர் பெத்தேலிலே யாக்கோபு தன் சகோதரனுக்கு பயந்து தனிமையில் ஓடிய போது  சந்தித்தார் . இப்பொழுது பெனியேலில் அவனை மறுபடியும் சந்திக்க வருகிறார்.

கர்த்தர் அவனோடு போராடினார் என்று வேதம் சொல்கிறது, நடுச்சாமத்தில் அவன் தான் போராடுவது கர்த்தர் என்று அறிந்து நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன்  என்று கெஞ்சுகிறான். அந்த வேளையில் தாமே கர்த்தர் யாக்கோபு என்கிற எத்தனை, ஏமாற்றுக்காரனை, தகப்பனையும் சகோதரனையும் வஞ்சித்தவனை, முற்றிலும் மாற்றி, அவனை இஸ்ரவேல் என்ற இளவரசனாக்கினார்.  அவனுடைய பயம் முற்றிலும் நீங்கிற்று.

வேதம் சொல்கிறது அவனுடைய சகோதரனாகிய ஏசா அவனுக்கு எதிர்கொண்டு வந்து அழுது அவனை முத்தமிட்டு அணைத்தான் என்று. ஏசாவின் ஊழியக்காருக்கு முன்பாகவும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு முன்பாகவும் என்ன அருமையான சாட்சி! இந்த சமாதானம் யாக்கோபு அனுப்பிய வெகுமதிகளால் வந்ததா? அல்லது ஏசா அவனை பயமுறுத்தியதால் வந்ததா? இல்லவே இல்லை.

இந்த சமாதானம், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், உன்னுடைய, என்னுடைய தேவனுமாகிய கர்த்தர் யாக்கோபின் வாழ்வின் கடந்த காலம் என்னும் இருளை நீக்கி, அவருடைய தயவினாலும், கிருபையினாலும் அவனுடைய நிகழ் காலத்தை நிரப்பி, தம்முடைய சித்தத்தின்படியான எதிர்காலத்தை அவனக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்ததினாலே வந்தது.

வாழ்வில் தனிமை என்ற கொடிய சூழ்நிலையில் இருக்கிறாயா? எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டனவா? கடந்த காலத்தில் நடந்த பிரச்சனைகளால் நிம்மதி இல்லாமல் முறிந்து  போன உறவினால் மன வேதனையோடு இருக்கிறாயா? தனித்து தேவனுடைய சமுகத்துக்கு வா!

அவர் உன்னை சந்திக்க வருவார்!

 

ஜெபம்:

ஆண்டவரே! யாக்கோபைப் போல என்னையும் ஆசீர்வதியும். என் வாழ்வில் உள்ள தோல்வி, பயம் எல்லாவற்றையும் நீக்கி, உம்முடைய தயவினாலும், இரக்கத்தினாலும் என்னை நிரப்பும். ஆமென்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s