நியாதிபதிகள் 11: 4 – 6 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.
அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
யெப்தாவை நோக்கி, நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.”
தன்னுடைய பழைய காலத்தை அறவே மறந்துவிட்டு, இன்றைக்கு தனக்குக் கிடைத்திருக்கிற பதவியை அல்லது வசதியை கையில் வைத்துக் கொண்டு தன்னையே மறந்து ஆட்டம் போடுபவர்களைப் பார்த்திருக்கிறீகளா?
யெப்தா என்பவன் கிலெயாத் என்பவன் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பரஸ்திரீயுடன் வாழ்ந்ததால் பிறந்தவன். அவனுடைய தகப்பனின் மரணத்துக்கு பின்னர், அவனுடைய சகோதரர் அவனுக்கு சொத்தில் சுதந்தரம் கொடுக்க மறுத்ததால், அவன் அவர்களை விட்டு தோப்தேசத்தில் குடியிருந்தான் என்று பார்த்தோம். அங்கு வீணரோடு சேர்ந்து ஒரு பட்டாளத்தை உருவாக்கினான். அந்தப் பகுதியிலேயே ஒரு தாதா போல வாழ்ந்து கொண்டிருந்தான்.
சில வருடங்களுக்கு பின்னர், அவனை வெறுத்து ஒதுக்கிய உறவினர் அவனிடம் உதவி கேட்டு வந்தனர். யெப்தாவின் கடந்த காலம் போய் விட்டது, நிகழ் காலத்தில் அவன் தான் தாதா. அதனால் தன்னைத் தேடி வந்து உதவி கேட்டவர்களிடம் , நீங்கள் தானே என்னை விரட்டினீர்கள், இப்பொழுது ஏன் என் பின்னே வருகிறீர்கள் என்று விரட்டினான். அவர்களோ அவன் அம்மோன் புத்திரரோடு யுத்தத்துக்கு வந்தால் அவனை ஊர்த் தலைவனாக்குவதாக சொன்னார்கள்.
இதை வாசிக்கும்போது , யெப்தா தன் கடந்த காலத்தில் இழந்ததை திரும்ப பெற்றான், அவன் குடும்பத்தில் அன்று அவனுக்கு கிடைக்காத மரியாதை இன்று அவனைத்தேடி வந்தது ,அதுதானே நியாயம் என்றுதானே எண்ணுகிறீர்கள்!
நம்முடைய வாழ்க்கையின் கடந்தகாலத்தின் அலைகள் மாறி, காற்று நம் பக்கமாய் வீச ஆரம்பித்தவுடன், நமக்குள் ,” நான்” என்ற கர்வம் தலைத்தூக்குவதில்லையா? நம்முடைய உடை, நடை பாவனை அத்தனையும் மாறிப்போய் நாம் வானத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்துகொள்வதில்லையா?
மலைஜாதி மக்கள் மத்தியில் ஊழியம் செய்த எங்கள் ஊழியர் ஒருவரிடம் நான் , இந்த காடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஊழியம் செய்வதை எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சிறியவனாக இருந்தபோது இதே காடுகளில் ஊழியம் செய்த ஒருவர் எனக்கு இலவசமாக கல்வியும், உணவும் கொடுத்தார், அதையே நான் இன்று இவர்களுக்கு செய்ய விரும்புகிறேன் என்றார்.
கடந்த காலம் கடந்து போய் , நிகழ் காலம் நமக்கு நலமாக அமையும்போது, ஒருநாள் நாம் தாழ்விலிருந்து உயர்த்தப்பட்டதை மறந்துவிடக்கூடாது. கடினமான அனுபவங்களைக் கடந்து நாம் நல்ல நிலைக்கு வரும்போது, அப்படிப்பட்ட கடினமான அனுபவங்களை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் மேல் அனுதாபமும் அன்பும் கூட வேண்டுமேத் தவிர, அதற்கு மாறாக, நான் பட்ட பாடுகளை நீயும் பட வேண்டும் என்று பழிவாங்கலாகாது.
நாம் தற்போது வாழும் வாழ்க்கையைக் குறித்து பெருமை பாராட்டும் பொதெல்லாம் உபாகமம்: 5:15 நமக்குள் எதிரொலிக்கட்டும்.
நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப் பண்ணினார் என்றும் நினைப்பாயாக.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
Very encouraging & relevant message for all of us to look back & to thank the Lord for the present life, God has blessed with! This is what the Lord reminded to Moses!! Deuteronomy 8: 2-4!!!