யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி; நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;”
பல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள கல்யாணி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் (Nurses Training School) பயிற்சி பெறும் பெண்களுக்கு இரண்டு வருடங்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தேன். அப்பொழுது அவர்களுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அயராத சேவைக்கு அர்ப்பணிக்கும் காட்சி என்றும் மனதில் தங்கிய ஒன்று.
தன் வாழ்வை மருத்துவ சேவையில் ஒப்புக்கொடுத்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் அவர்கள், யுத்தத்தில் அடிபட்ட போர்வீரர்களுக்கு அயராது, கையில் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு இரவென்றும் பாராமல் செய்த சேவையை நினைவுகூறவே, மருத்துவ துறையில் செவிலியர் பயிற்சி பட்டமளிப்பு அன்று கையில் விளக்கேந்தி தங்களை அர்ப்பணம் செய்கின்றனர் என்பது ஒருவேளை பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த அம்மையார் தன்னை இந்த பணியில் ஈடுபடுத்தும் முன்னர் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் பலருக்கும் தெரியாத ஒன்று.
தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது அவர்கள் தன்னுடைய முப்பத்தி ஓராவது வயதில் மரணத்தைத் தவிர வேறொன்றையும் தன் மனம் நாடவில்லை என்று கூறுகிறார். வாழ்க்கையின் அடிமட்டத்தில், எதிர்காலமே தனக்கு இல்லை என்று தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்த நாட்களில் கர்த்தர் அவர்களுக்காக மகிமையுள்ள எதிர்காலத்தை வைத்திருந்தார்.
ஆயியின் தோல்விக்கு பின்னர் இவ்வாறுதான் யோசுவாவின் மனநிலையும் இருந்தது. இனி தனக்கு எதிர்காலமே இல்லை என்று எண்ணியவனாய் கர்த்தரின் சமுகத்தில் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டு முகங்குப்புற கிடந்தான். எபிரேய அகராதியில் கலங்குதல் என்ற வார்த்தைக்கு ’நொறுங்கிய மனநிலையில் தரையில் விழுதல்’ என்ற அர்த்தத்தைப் பார்த்தேன்.
கர்த்தர் மனம்நொறுங்கிக் கிடந்த தன் பிள்ளையைப் பார்த்து அப்படியே முகங்குப்புற கிட என்று கடிந்து கொள்ளவில்லை. அதற்குமாறாக கர்த்தர், ஏன் முகங்குப்புற விழுந்து கிடக்கிறாய்? எழுந்திரு! பயப்படாமலும், கலங்காமலும் இரு என்கிறார்.
ஏசாயா 41:10 ல் தேவனாகிய கர்த்தர் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே நான் உன் தேவன்” என்ற வார்த்தைகளை படிக்கும்போது வனத்தையும் பூமியையும் படைத்த தேவன் நம்மோடிருக்கும் போது நாம் ஏன் கலங்க வேண்டும் என்று தோன்றவில்லையா? நான் உன் தேவன்! உன் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எனக்குத் தெரியும்! என்று தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார்!
இன்று தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், பணக்காரர்களும், உலகத்தலைவர்களும், உலகம் தங்கள் கையில் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், முகங்குப்புற கிடக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து கர்த்தர் நான் உன் தேவன், உன் வாழ்க்கை எனது கரத்தில் உள்ளது நீ கலங்காதே என்கிறார்.
கர்த்தர் மனம் நொறுங்கிய யோசுவாவையும், இஸ்ரவேல் மக்களையும் ஆகோர் பள்ளத்தாக்கிலிருந்து, நம்பிக்கையின் வாசலுக்கு அழைத்துவந்தார்.
யோசுவாவைப் போல என்றாவது சூழ்நிலைகளாலும், பிரச்சனைகளாலும் சுமையைத் தாங்க முடியாமல் நொறுங்கிப்போன அனுபவம் உண்டா? நான் சுமைகள் என்று சொல்லுவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கடன் சுமைகளால் நீ நொறுங்கிக் கொண்டிருக்கலாம்! ஓவ்வொருதடவை தொலைபேசி மணி அடிக்கும்போதும் பணம் வசூல் செய்பவரின் அழைப்போ என்று பயந்து கலங்குகிறாயா? அல்லது திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளால் கலங்கிப்போயிருக்கிறாயா? யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத தனிமையின் கொடுமை உன்னை கலங்க செய்கிறதா? ஒருவேளை தற்போது பார்த்த உன்னுடைய மருத்துவ பரிசோதனை உன்னை கலங்க செய்கிறதா?
கர்த்தர் நம்மிடம் கலங்காதே என்று சொல்கிறார். பள்ளத்தாக்கிலும் கர்த்தர் நம்மோடிருக்கிறார். பயப்பட ஒன்றுமில்லை! கலங்கத் தேவையில்லை!
கசக்கி பிழியப்படுகிற திராட்சை தானே அதிக கனிரசத்தைக் கொடுக்கிறது!
உனக்கு மகிமையுள்ள எதிர்காலம் உண்டு! கலங்காதே!
உங்கள்சகோதரி,
பிரேமாசுந்தர்ராஜ்
premasunderraj@gmail.com
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!