ஆதி: 33:18“ யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும், சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம் போட்டான்.”
கீழ்படிதலினால் வருகிற கஷ்டங்களை விட கீழ்ப்படியாமையினால் வரும் கஷ்டங்கள் மிகவும் அதிகம் என்று ஒருவர் கூறியிருக்கிறார்.
இது நமக்கும் தெரிந்த உண்மையே, ஆனாலும் நம்மில் பலருக்கு கீழ்ப்படிதல் என்றால் அறவே பிடிக்காது. பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு கீழ்ப்படிய பிடிக்காது, பெரியவர்களுக்கு அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க பிடிக்காது. சிலருக்கு யாரும் புத்தி சொன்னால் கூட பிடிக்காது. பெற்றோர் புத்தி சொன்னால், எனக்கு வீட்டில் சுதந்திரம் இல்லை என்று வாலிபர் எண்ணுகிறார்கள்.
இதே போலத்தான் நாம் தேவனிடமும் நடந்து கொள்கிறோம். கர்த்தர் தமது வார்த்தையின் மூலம் நமக்கு புத்தி சொல்லி, நாம் அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஆனால் நாம், கடவுளுக்கு நாம் ஜாலியாக இருப்பது பிடிக்கவில்லை என்று நினைக்கிறோம். இப்படித்தான் அன்று ஏவாள் நினைத்தாள், இன்று நாமும் நினைக்கிறோம்.
இங்கு யாக்கோபு என்ன செய்கிறான் பாருங்கள்! கர்த்தர் அவனை ஆதி:31:13 ல். பெத்தேலுக்கு போகும்படியாகவும், பின்னர் ஈசாக்கு வாழ்ந்து கொண்டிருந்த (எபிரோன்) இடத்துக்கு போகும்படியாகவும் கட்டளையிடுகிறார். ஆனால் நாம் இன்றைய வசனத்தில் பார்க்கிறோம், அவன் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே கூடாரம் போட்டது மட்டுமல்லாமல், அங்கே ஒரு நிலத்தை விலைக்கும் வாங்குகிறான். அவனும் அவன் குடும்பமும் அந்த ஊரிலே வசதியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.
கர்த்தர் யாக்கோபின் ஜெபத்தை கேட்டு , அவன் வாழ்வையும், அவன் பெயரையும் மாற்றி, அவன் சகோதரன் ஏசாவோடு ஒப்புரவாக்கி , இம்மட்டும் வழிநடத்தி வந்தாரே, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து முப்பது மைல் தூரமே உள்ள பெத்தேலுக்கு போவதில் என்ன தாமதம்?
சீகேமில் ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனுக்கு சாட்சியாக இருந்தானே என்று நாம் நினைக்கலாம். ஆனால் வேதம் கூறுகிறது ( I சாமு 15:22) பலிகளால் நாம் கர்த்தரைப் பிரியப்படுத்த முடியாது, கீழ்ப்படிதலையே அவர் விரும்புகிறார் என்று.
கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல், கீழ்ப்படியாமல் போனதால், இந்த குடும்பம் மறுபடியும் பல இன்னல்களுக்குள்ளாயின. ஆபிரகாமும் சாராளும் கானானுக்கு செல்லாமல் எகிப்துக்கு சென்றதால் பட்ட கஷ்டங்கள் போல, லோத்து, சோதோமுக்கு முன்னால் கூடாரம் போட்டதால் வந்த கஷ்டங்களைப் போல, யாக்கோபின் குடும்பம் சீகேமுக்கு அருகில் கூடாரம் போட்டதால் அனுபவித்தனர்.
யாக்கோபு அங்கே தரித்திருந்ததால் தான் , அவன் மகள் தீனாள், அந்த தேசத்து வாலிபனால் கற்பழிக்கப்படுகிறாள், மற்றும் யாக்கோபின் இரு குமாரர் கொலையாளிகளாகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. என்ன கொடுமை?
தேவனுக்கு கீழ்ப்படியாத இந்த குடும்பத்தில், பிள்ளைகள் தேவ பயமின்றி வளர்ந்தனர். இந்நேரம் யாக்கோபு பெத்தேலுக்கு போய் சேர்ந்து தன் பிள்ளைகளை தேவனுக்குள் வழி நடத்தியிருக்க வேண்டும், அப்படி செய்யாமல் இந்த புறஜாதியினரிடம் ஏன் தங்கியிருக்க வேண்டும்?
நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எங்கே கூடாரமிட்டுக் கொண்டிருக்கிறோம்? யாக்கோபின் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடம் அல்லவா? தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடு! கீழ்ப்படி! கீழ்ப்படிதல் உனக்கு என்றும் நன்மையையும், தேவனுக்கு என்றும் மகிமையையும் கொடுக்கும்!
ஜெபம்:
நல்ல ஆண்டவரே! உம்முடைய சத்தத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, கீழ்ப்படிகிறவர்களாய் எங்களை மாற்றும். ஆமென்!