யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து……”
லூக்கா: 12:15 “பின்பு இயேசு அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.
இன்று எங்களது பகுதியில் தேர்தல் விளம்பரங்கள் உற்சாகமாய் நடந்து கொண்டிருக்கின்றன! ஒலிப்பெருக்கியின் சத்தம் காதுகளைப் பிளந்து கொண்டிருக்கிறது. அதைக் கேட்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களைப் பார்த்துக் கூறிய இந்த பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், என்றவார்த்தைகள் தலைமுறை தோறும் இவ்வாறு ஒலிப்பெருக்கியின் மூலம் கூறப் பட்டால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று எண்ணினேன்.
நாம் வாழும் இந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் பொருளாசை பிடித்துதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த விலைமதிப்பில்லாத வசனம் நம்முடைய தலைமுறையினருக்கு மிகவும் பொருந்துமாதலால், நாம் அந்த வசனத்தின் பின்னணியை சற்று பார்ப்போம்.
முதலில் இயேசு தம்முடைய சீஷரை நோக்கி (லூக்:12:1) நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
இந்த அதிகாரம் முழுவதும் பொருளாசையை பற்றிதான் படிக்கிறோம். அப்படியானால் பரிசேயருடைய புளித்தமாவு சுவிசேஷம் என்ன? நீங்கள் பணக்காரராக, சொத்து சுகத்தோடு இருப்பீர்களானால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஏழைகளாக இருபீர்களானால் கர்த்தருடைய சாபத்தைப் பெற்றவர்கள் என்பதே! இதைத்தான் கர்த்தராகிய இயேசு புளித்தமாவு சுவிசேஷம் என்று நிராகரித்தார்.
தேவனுடைய பிள்ளைகளே இதை வாசிக்கும்போது ஒருவேளை உங்கள் மனது சற்று வேதனையடையலாம். ஏனெனில் கர்த்தரை விசுவாசித்தால் பணமும் வசதியும் தேடி வரும் என்று புளித்தமாவு சுவிசேஷத்தை போதிக்கிற போதகர்கள் இன்று அநேகம்பேர் உண்டு. அவர்கள் போதனையின்படி ஒருவன் கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பதின் அடையாளம்,அவனுடைய வீடும், பணமும், வாகனமும் தான்!
பொருளாசை புளித்தமாவு போன்றது, பொருளாசை பிடித்து அலையாதே! கர்த்தர் உன் தேவைகளை அறிவார், என்று கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தபோது, இவற்றை எதையும் காதிலே போட்டுக்கொள்ளாமல் தன் ஆஸ்தியை மாத்திரம் நினைத்துக்கொண்டிருந்த ஒருவன்,போதகரே ஆஸ்தியை பாகம்பிரித்து என் வீதத்தை எனக்கு தரும்படி என் சகோதரனுக்கு கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.(லூக்:12:13- 15)
நம்மில் எத்தனை பேர் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருக்கும்போதும், திருச்சபையில் அமர்ந்திருக்கும்போதும் கூட நம்முடைய பணம் சம்பாதிக்கும் திட்டங்களைப் பற்றியும், வங்கிக்கணக்கையும் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்! அப்படித்தான் இந்த மனிதனும், கர்த்தருடைய போதனையை கவனிக்காமல் தன் குடும்ப ஆஸ்தியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான் போலும்!
அதற்கு அவர் என்னை உங்களுக்கு நியாதிபதியாகவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தது யார் என்று கேட்டுவிட்டு, அவர்களை நோக்கி, பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்”.
பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்ற இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ’உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ அல்லது ’உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்’ என்ற அர்த்தம் உண்டு.
பொருளாசை! நமக்கு சொந்தமல்லாதவற்றை அடைய ஆசை! இன்னும்வேண்டும் இன்னும்வேண்டும் என்ற பேராசை! அளவுக்கு மீறி சேர்த்துவைக்க ஆசை! ஆகானுடைய வாழ்க்கையில் நாம் பார்த்தவிதமாய் கர்த்தருடைய கட்டளையை மீறி, பார்வைக்கு இன்பமாய் பட்டவைகளை அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை!
ஆகான் கண்டான்! இச்சித்தான்!
நாம் எதிபார்க்காதவேளையில் பொருளாசை என்னும் இச்சையானது நம்முடைய இருதயத்தையும், ஆத்துமாவையும் சங்கிலியால் கட்டி அடிமைப்படுத்தி விடும்! கர்த்தருடைய வார்த்தைகள் நம் செவியில் எட்டாதபடி நம்முடைய நினைவுகளை அடிமைப்படுத்திவிடும்!
ஒவ்வொருநாளும் இதுவரை கர்த்தர் தந்த நன்மைகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, இன்று நாம் வாழும் திருப்தியான வாழ்க்கைக்காக நன்றி செலுத்தி, நம்மைவிட குறைவுபட்டு தேவையில் வாழும் மக்களை நினைவுகூர்ந்து, நமக்காக ஏழ்மையின் ரூபமெடுத்த நம் கிறிஸ்து இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும்போது தான், நாம் பொருளாசை என்னும் புளித்தமாவு நம்மைக் கெடுத்துவிடாதபடி, பாதுகாக்க முடியும்.
உங்கள்சகோதரி,
பிரேமாசுந்தர்ராஜ்
premasunderraj@gmail.com
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!