Bible Study, Call of Prayer, To the Tamil Christian community

சோதனையென்னும் என்னும் தேன்கூடு!

யோசுவா: 7:21 ”கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய  சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும், நான் கண்டு அவைகளை இச்சித்து, எடுத்துக்கொண்டேன்.

சமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் கடையில் போய் மளிகை சாமான் வாங்குவோரில் ஒருவர் எந்த சமயத்தில் கடைக்கு போனால் அதிகம் செலவிடுகின்றனர் என்று கணக்கெடுத்திருந்தனர். அவர்கள் கணிப்புப்படி, ஒருவர் சாப்பிடுமுன்னர் பசியாயிருக்கும்போது கடைக்கு சென்றால் அதிகம் செலவிடுவதாகவும், சாப்பிட்ட பின்னர் சென்றால் குறைவாய் செலவிடுவதாகவும் சொல்லியிருந்தனர். நம்முடைய பசி, உணவை உண்ணவேண்டும் என்ற ஆசை இவை நம்முடைய வாங்கும் செயலில் காட்டப்படுகிறது. நம்முடைய உள்ளத்தின் வாஞ்சை நம் செயலில் வெளிப்படும் என்பதே இவர்களுடைய கணக்கெடுப்பின் ஆதாரம்!

இது நமக்குத் தெரிந்த உண்மைதானே! எத்தனைமுறை நாம் மனதில் தோன்றும் ஆசைகளை செயலில் வெளிப்படுத்தி விடுகிறோம். இந்த உண்மையை நாம் படித்துக்கொண்டிருக்கிற ஆகானின் வாழ்க்கையில் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

ஆகான் இஸ்ரவேலின் போர்சேவகனாய் கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றும் பணியில் எரிகோவுக்கு அனுப்பப்பட்டான். இதுவரை அவனைப்பற்றிய எந்த குற்றச்சாட்டும் இல்லை, அவன் துன்மார்க்கனும் இல்லை. அவன் கர்த்தருடைய பிள்ளை தான் என்பதற்கு, ஆகான் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டபோது நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன் என்ற வாக்குமூலமே சாட்சியாகும். வெளிப்புறமாகப் பார்க்கும்போது ஆகான் எல்லாவிதத்திலும் ஒரு நல்ல இஸ்ரவேலனாகத் தான் தெரிகிறான்.

எங்கேயோ ஆகானின் உள்ளத்தில் ஒரு சிறிய பொருளாசை என்ற விதை ஊன்றப்பட்டுவிட்டது. சீனாயின் வனாந்தரத்தில் வாலிபனாக அலைந்து திரிந்த அவன், இப்பொழுது பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும்போது, தன் குடும்பத்தாருக்கு இந்த பொன்னும் வெள்ளியும் இருந்தால் உதவியாக இருக்குமே என்ற  எண்ணியிருக்கலாம்.

நாம் ஒருதடவை ஒரு பொய்யை சொல்லும்போது, ஒரு நல்ல காரியம் நடக்கத்தானே சொன்னேன், நான் ஒன்றும் மற்றவர்கள் போல பெரிய தப்பு செய்யவில்லை என்று நம்மைத் தேற்றிக்கொள்வோமானால், பின்னர் எவ்வளவு பெரிய பொய் சொன்னாலும் அது தவறாகவேத் தெரியாது. நல்ல நோக்கத்தினால் சொல்லும் பொய்யும் பொய்தான்.

அதேவிதமாகத்தான் ஆகான் செய்த குற்றமும். ஒருவேளை சீனாய் வனாந்தரத்தில் வெறுமையாய் அலைந்த தன் குடும்பம் சற்று வசதியாக கானானில் குடியேறட்டுமே என்று அவன் நினைத்து அவன் கர்த்தரால் சாபத்தீடானவைகள் என்று தடை செய்யப்பட்டவைகளில் சிலதை எடுத்திருக்கலாம். நல்ல நோக்கத்தோடு செய்யப்பட்டாலும் அது தேவனுடைய கட்டளையை மீறியதே ஆகும்.

கர்த்தரை அறிந்தவனாய், தேவனுடைய சேனையில் ஒருவனாய் , அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும்படியாய் எரிகோவுக்கு சென்றவன், தன் உள்ளத்தின் வாஞ்சை தூண்டிய இடத்துக்கு கண்களைத் திருப்பினான். அவன் எரிகோவுக்கு வந்த நோக்கத்தை ஒருகணம் மறந்தே விட்டான். அவன் கண்கள் அந்தப் பொருட்களை நோக்க, நோக்க அவன் மனம் தடுமாறியது. கர்த்தருக்கு சேவகமா? அல்லது தனக்கு சேவகமா? இருமனதாய் சற்றுநேரம் நிற்கிறான்.

ஆகான் எரிகோவுக்குள் போகும்போது திருடனாய்ப் போகவில்லை, ஆனால் ஒருகணம் தன் நோக்கத்தை தடுமாறவிட்டதால் எரிகோவிலிருந்து வரும்போது திருடனாய் வெளியே வந்தான்.

இதைத்தான் நம்மில்  அநேகர் செய்து கொண்டிருக்கிறோம்! கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்ட நாம், கர்த்தருடைய ஊழியத்தை செய்துகொண்டிருக்கிற நாம் ஒரு கணம் நம்முடைய நோக்கத்தைத் தடுமாற விடுவோமானால் கூட நாம் ஆகானைப்போலாகி விடுகிறோம்.

ஒருவேளை நாம் ஆகானைப்போல என் குடும்பத்துக்காகத்தான் இதை செய்கிறேன், யார் யாரோ எவ்வளவோ திருடுகிறார்கள், நான் செய்யும் இந்த சிறிய காரியத்தை கர்த்தர் பெரிது பண்ணமாட்டார், நான் கர்த்தருக்குத்தானே ஊழியம் பண்ணுகிறேன் என்று நினைக்கலாம்.

கர்த்தர் உன்னைப்பார்த்து பதவி ஆசையிலிருந்து, பெண்ணாசையிலிருந்து, பொருளாசையிலிருந்து,  உன்னைப் பாதுகாத்துக்கொள் என்கிறார்.

சற்று சிந்தித்துப்பார்! நீ என்றாவது உனக்கு சொந்தமில்லாத எதையோ அல்லது யாரையோ அடைய ஆசைப்பட்டிருக்கிறாயா? ஜாண் பனியன் அவர்கள் எழுதியதுபோல,” சோதனைகள் முதலில் நம்மிடம் கெர்ச்சிக்கிற சிங்கம் போல வரும். நாம் அவற்றை மேற்க்கொண்டு விட்டால் பின்னர் அது தேன் ஒழுகும் தேன்கூடாக வரும்!

உனக்கு சொந்தமில்லாததை நீ அடைந்தபின் அது உனக்கு சந்தோஷமும் நிம்மதியும் கொடுப்பதில்லை என்று ஆகானின் வாழ்க்கையிருந்து தெரிந்துகொள்!

 

உங்கள்சகோதரி,

பிரேமாசுந்தர்ராஜ்

premasunderraj@gmail.com

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s