நியாதிபதிகள்: 14:6 “ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.”
தன்னுடைய பிள்ளையை நல்லமுறையில் கர்த்தருடைய பிள்ளைகளாக வளர்க்க எல்லாத் தியாகங்களையும் பண்னுகிற ஒவ்வொரு தகப்பனுக்கும் தாய்க்கும் இன்றைய தியானத்தை அர்ப்பணிக்கிறேன்.
நாம் சிம்சோனின் வாழ்க்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். சிம்சோனின் தகப்பனாகிய மனோவாவும் அவனுடைய உத்தம மனைவியும் , நசரேயனாக வாழக் கர்த்தரால் அழைக்கப்பட்ட தங்கள் மகன் படிப்படியாக கர்த்தரைவிட்டு, அவருடைய சித்தத்தைவிட்டு வழி தவறி செல்வதை கவனித்துக்கொண்டுதான் இருந்தனர்.
இன்று அநேகப் பெற்றோர் தங்களைக் கேட்பதைப்போல ‘ நாங்கள் இவனை வளர்ப்பதில் எங்கே தவறு செய்து விட்டோம்?’ என்று ஒருவேளை அவர்களும் தங்களையே கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம்!
நம்மில் யாரிடமும் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கவேண்டும் என்ற விதிமுறைகளை யாரும் எழுதிக்கொடுக்கவில்லை.அப்படியே எழுதியிருந்தாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அதை திருத்தி எழுத வேண்டியதிருக்கும் ஏனெனில் உலகில் எந்த ஒரு பிள்ளையும் மற்றப் பிள்ளை போல இருப்பதில்லை.
மனோவாவும் அவனுடைய உத்தம மனைவியும் தங்களுக்கு பிள்ளை பிறக்கப்போவதாக கர்த்தருடையதூதனானவர் மூலமாய்க் கேள்விபட்டவுடனே தங்களை பரிசுத்தப்படுத்த ஆரம்பித்தனர். மனோவாவின் மனைவி நசரேய விரதத்தை தானே எடுத்து தீட்டான எதையும் புசிக்கவில்லை. அதுமட்டுமல்ல அவர்கள் கர்த்தருடைய தூதனானவரிடம் பிள்ளையை கர்த்தருடைய வழியில் எப்படி வளர்க்க என்று கற்றுத்தாரும் காத்திருக்கிறோம் என்று வேண்டியதையும் பார்த்தோம்.இந்த தம்பதியினர் தங்களுடைய பிள்ளையை தேவனுடைய வழியில் வள்ர்க்க ஆவலாக இருந்ததைப் பார்க்கிறோம்.
அவர்கள் இருவரும் சிம்சோனை வளர்க்கும் நாட்களில் கர்த்தரை விட்டு விலகிப்போனதாக வேதம் எங்குமே கூறவில்லை. அப்படியிருந்தும் அவன் தன்னுடைய சுய இச்சையின்படி, சுய விருப்பத்தின்படி வாழத் துவங்கினான்.
வாலிபப்பிராயத்துக்குள் வருமுன்னரே எனக்கு இவள்தான் வேண்டும் என்று கேட்கும் பக்குவதுக்கு வந்துவிட்டான் அவன். அவனுடைய தாய் தகப்பன் இஸ்ரவேலில் பெண் எடுத்து அவனுடைய திருமணத்தை ஒழுங்கு பண்ணுவதாக எவ்வளவோ கூறியும் அவன் பிடித்ததை விடவேயில்லை. கடைசியாக அவர்கள் திம்னாத்துக்கு சென்று அந்தப் பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஒருவேளை கர்த்தர் அவர்களுடைய சாட்சி மூலமாக அந்தப் பெண்ணைத் தம்மிடம் கொண்டுவரலாம் என்று கூட நினைத்திருக்கலாம்.
சிறுவயதில் கர்த்தரை ஏற்றுக்கொள்ளாத பிள்ளைகள் அவர்களுடைய வாலிப பருவத்தில் கர்த்தரிடம் வரமாட்டார்கள் என்று யாரும் கூற முடியாது ஆனாலும் வாலிப வயது மிகவும் சீர்கெடச் செய்யும் வயது. சிம்சோனுக்கு கர்த்தருடைய பிள்ளையாக வளர எல்லாவித சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அவன் பெலிஸ்தரின் எல்லையில் கால் எடுத்து வைத்த நாள் முதற்கொண்டு அவன் கண்கள் பார்க்கக்கூடாதவற்றைப் பார்த்தன, கால்கள் போகக்கூடாத இடத்திற்கு சென்றன.
ஒரே குடும்பத்தில் நல்ல கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டதை நான் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன்.இன்று அது உங்களுடைய குடும்பத்தில் கூட நடந்து கொண்டிருக்கலாம்.
ஆனால் சிம்சோனின் வாழ்க்கையைப் படிக்கும்போது என்னை உற்சாகப்படுத்துகிற காரியத்தை நாம் நாளை படிக்கப்போகிறோம். படுகுழியில் விழுந்த அவன் தன் சிறுவயதின் தேவனை ஒருநாள் நோக்கிப்பார்த்தான். கர்த்தரும் அவன் குரலைக் கேட்டு அவனை கைத்தூக்கினார்.
உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் ஜெபம் ஒருநாளும் வீண்போகாது என்பதற்கு சிம்சோனே ஒரு சாட்சி. ஒருவேளை இன்று உங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையைப் பார்த்து நீங்கள் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கலாம். கர்த்தருடைய வழியில்தானே வளர்த்தோம், நாங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லையே, ஏன் இப்படி வளருகிறான் என்று மனவேதனையோடு இருக்கலாம்.
ஒன்று மாத்திரம் நிச்சயம்! சிறு வயதிலேயே கர்த்தரைப் பற்றி அறிந்த உங்கள் மகனின் வாழ்க்கையில், கர்த்தர் நிச்சயமாக ஒருநாள் கிரியை செய்வார்.அவர்களுக்காக ஜெபிப்பதை மட்டும் விட்டு விடாதீர்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்