ரூத்: 1:22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்;
என் கணவருடைய குடும்பத்தில் எந்த நல்ல காரியங்களிலும் எங்களுக்கு அழைப்பு இருந்ததே கிடையாது. காரணம் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்றாலே தாழ்ந்த ஜாதி என்றும், மேற்கத்திய மதத்தினர் என்றும் எண்ணம் உண்டு! எனக்குத் திருமணமானபோது அவர்கள் என்னிடம் பழகியவிதம் ஏதோ ஒரு அயல்நாட்டுப் பெண்ணை நடத்துவதுபோலத் தான் எனக்கு இருக்கும்.
இரண்டு அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு நகோமியின் குமாரர் வந்த போது அவள் அவர்களை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் என்ன நடந்திருக்கும்? நாம் கூட சொல்லலாம், அவர்கள் புற ஜாதியினர் அவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று! தேவனாகிய கர்த்தர் எந்த சம்பந்தமும் கலக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்த மோவாபியப் பெண்களை அவள் வீட்டை விட்டே துரத்தியிருக்கலாம்! அவர்களை திட்டியிருக்கலாம்! தன்னுடைய பரிசுத்தமான யூத குல வீட்டை அவர்கள் தீட்டுப் படுத்துவதாகக் கூறியிருக்கலாம்.
ஆனால் நாம் நகோமியைப் பற்றிப் படிக்கும்போது அவள் தன் மருமக்களைத் தன் இல்லத்தில் மட்டுமல்ல, தன் உள்ளத்திலும் ஏற்றுக்கொண்டாள் என்றுப் பார்க்கிறோம்.
நகோமி ஏற்றுக்கொள்ள முடியாதவைகளை தன்னுடையதாக ஏற்றுக்கொண்டது அவளுடைய விசுவாசத்தையோ, அவள் தேவன் மேல் வைத்திருந்த அன்பையோ குறையச் செய்யவில்லை. அவள் தன் மருமக்கள் முன்பு தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் பிரதிபலித்தது அவர்கள் இருவரும் கர்தருடைய அன்பை ருசிபார்க்க உதவியது.அவர்கள் வழிபட்டு வந்த மோவாபியரின் தேவர்கள் அல்ல, தேவனாகியக் கர்த்தரே பரிசுத்தமுள்ள ஜீவனாகிய தேவன் என்பதை அவர்கள் அனுபவித்து உணர்ந்து கொள்ள முடிந்தது.
நகோமி தன் இரண்டு மோவாபிய மருமக்களையும் அன்று வெறுத்து விரட்டியிருப்பாளானால் , இன்று நாம் ரூத்தின் புத்தகத்தைப் படிக்க இருந்திருக்காது. நகோமி அவர்களை ஏற்றுக்கொண்டு கர்த்தரின் வழியில் நடத்தியதால் தான், பரலோக தேவனை நோக்கிய செவ்வையான பாதையில் அவர்கள் நடந்தனர்.
ஏற்றுக்கொள்ளமுடியாத ஏதோ ஒரு உறவு இன்று உன் வாழ்க்கையையை பாதித்துக்கொண்டிருக்கிறதா? யாருக்காவது உன் உள்ளத்தை திறந்து கொடுக்க முடியாமல் இருக்கிறாயா? என்னுடைய தகுதி என்ன, நாங்கள் எப்பேர்பட்டக்குடும்பம், நாங்கள் என்ன ஜாதி…. நாங்கள் எப்படி இவளை ஏற்றுக்கொள்வது என்று தள்ளி வைக்கிறாயா? உன் வீட்டுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களை கரம் நீட்டி ஏற்றுக்கொள்ள மறுதலிக்கிறாயா?
குடும்ப உறவு மட்டும் அல்ல, நம்மில் பலரால் நம்மிடம் வேலை செய்பவர்களை அன்புடன் ஏற்றுக்கொள்ள முடியாது. கஷ்டப்படுகிற உறவினர்களையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உறவினரில் நம்மைவிட குறைந்த தகுதியுடையவர்களை நாம் ஏதோ கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் போல பார்க்கிறோம்.
சில நேரங்களில் நம் மனதுக்கு நாம் மட்டும்தான் பரிசுத்தமானவர்களாக, உயர்ந்தவர்களாக, தேவ தூதர்களைப்போலத் தெரிவோம். மற்றவர்கள் எல்லோருமே நம்மைவிட குறைவுபட்டுத் தெரிவார்கள்! இது சாத்தான் நமக்கு வைக்கும் கண்ணி!
நகோமியைப் போல நம்மிடம் வந்தவர்களின் குறைவுகளை பெரிதுப்பண்ணாமல் மனதாற ஏற்றுக்கொள்ள பெலன் தருமாறு நாம் இன்று ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
One thing in our lives is to have Christ! Another thing is to reflect Him through our lives !! Naomi, became a living monument before her daughter-in-law!!! The Question and self check we need to have before the Lord is Am I reflecting your love through my life and testimony!!!!?