1 சாமுவேல்: 1: 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
அன்னாளிடமிருந்து அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்.
ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம் பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி தியானிக்கப் போகிறோம்.
வேதனை நெஞ்சைப் பிளக்க, கண்ணீர் தாரை தாரையாய் வடிய அன்னாள் தேவனுடைய சமுகத்தில் தன் பாரத்தை ஊற்றினாள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய சமுகத்தில் அவள் கண்ணீரையோ அல்லது வேதனையின் குமுறுதலையோ எதையுமே அடைத்து வைக்கவில்லை. அவளுடைய தகப்பனாகிய கர்த்தர் சர்வலோகத்துக்கும் அதிகாரியாக இருந்தாலும், அவள் சத்தத்தையும் கேட்க வல்லவர் என்று அறிந்திருந்தாள்!
சில நேரங்களில், நாம் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்கும் வேளையில், நம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தி விட்டால் யாரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டர்களோ அல்லது யாராவது நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நாம் அடக்கி விடுவது மட்டும் அன்றி நம்முடைய துக்கத்தையும், கண்ணீரயும் கர்த்தர் கூட அறியார் என்று நினைத்து விடுகிறோம்.
திடுக்கிட செய்யும் பயமும், துக்கமும் நிறைந்த அந்தவேளையில் தாமே கர்த்தருடைய கரம் நம்மை அரவணைத்து நமக்கு ஆறுதலையும், சுகத்தையும் தருகிறது என்பதை நாம் மறந்தே போய் விடுகிறோம்.
இரட்சண்ய சேனை (Salvation Army) என்ற ஸ்தாபனத்தை நிறுவிய வில்லியம் பூத் அவர்கள், தன்னுடைய மனைவி அவர்களுக்கு புற்று நோய் இருப்பதாக வெளிப்படுத்திய நாளைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். ” என்னை அந்த செய்தி திடுக்கிட செய்தது, இந்த உலகமே நின்று விட்டது போல் இருந்தது. எனக்கு முன்னால் இருந்த சுவரில் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் இருந்தது. என்றைக்குமே இல்லாத அளவு அதன் அர்த்தம் எனக்கு தெளிவாய் விளங்கியது போலிருந்தது. அவள் என்னிடம் ஒரு கதாநாயகி போல, ஒரு தேவதை போல பேசினாள், என்னால் அவளோடு முழங்கால் படியிட முடிந்ததே தவிர ஜெபிக்க முடியவில்லை”
துக்கம், கண்ணீர், வேதனை இவைதான் வாழ்க்கை என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? உலகம் நின்று போனது போல உள்ளதா?
அன்னாளின் கணவன் அவள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், பிள்ளையில்லாவிட்டாலென்ன! நானிருக்கிறேன் போதாதா என்றான், அவனுடையனையாட்டியாகிய பென்னினாள், உன் ஜெபத்தைக் கேட்காத உன் கடவுள் எங்கேயிருக்கிறார் என்று கேலி செய்தாள். அன்னாள் தன் கண்ணீரையும், தன் வேதனையும், தன் துக்கத்தையும் , தனக்கு எப்பொழுதும் செவிசாய்க்க வல்லவரான கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றினாள்.
கண்களில் பனித்துளியில்லாவிடில் ஆத்துமாவில் வானவில் எப்படி உதிக்கும்? கர்த்தருடைய சமுகத்துக்கு சென்று மனம் விட்டு அழுது ஜெபியுங்கள்! கண்ணீரைத் துடைக்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
When prayers goes up, blessings comes down! Hannah’s prayers touched the Lord’s heart!! She poured her soul in the His presence and feet of The Lord!!! The effectual prayers of a righteous man availeth much!!!!! “What a friend we have in Jesus; All our sins and griefs to bear; what a previlage to carry; Everything to God in Prayer!!!!!