1 சாமுவேல்: 9:2 அவனுக்கு சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான். இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை. எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்.
இஸ்ரவேல் மக்கள் ராஜா தான் வேண்டும் என்று கேட்டனர்! கர்த்தர் அவர்கள் கேட்டதற்கு அதிகமாகவே அவர்களுக்கு அருளிச் செய்தார்! ஆம்! அதிகமாகவே என்பதற்கு அர்த்தம் அவர்களுக்கு கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த முதல் ராஜாவான சவுலைக் குறித்துதான் சொல்கிறேன்!. கர்த்தர் சாமுவேலை அனுப்பி மகா சவுந்தரியவனாகிய சவுலை ராஜாவாக அபிஷேகம் செய்தார்!
அநேகமாயிரம் பேர் கூடி எங்களுக்கு ராஜா வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கர்த்தர் இரங்கி, மிகவும் உயரமான, அழகான, கம்பீரமான, எல்லோர் பார்வையயும் கவரும் ஒரு வாலிபனை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார் என்று பார்க்கிறோம். 1 சாமுவேல் 9 ம் அதிகாரத்தில் உள்ள முதல் பகுதி, சவுலின் சவுந்தரியத்தைப் பற்றிப் பேசுகிறது. சவுலைப் பற்றி மட்டும் அல்ல, வேதாகமம் அவ்விதமாகவே தாவீதைப் பற்றியும், சாலோமோனைப் பற்றியும் கூறுகிறது! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா! ஆம்! இஸ்ரவேல் மக்கள் அவர்களை ஆண்ட தேவனாகிய கர்த்தரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டவுடனே எல்லாமே மாறி விட்டது!
நீ யார்?, உன்னிடம் எவ்வளவு செல்வாக்கு உள்ளது?, நீ எவ்வளவு பலசாலி?, நீ பார்வைக்கு எப்படி இருக்கிறாய்? இந்த வெளிப்புற அளவு கோல் ஒவ்வொரு மனிதனையும் அளக்க உபயோகப்படுத்தப் பட்டது.
இத்தனை சவுந்தரியவான் ராஜாவானவுடன் அவன் தேவனாகிய கர்த்தர் விரும்பியவிதம் நடந்து கொள்வான் என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பாக இருந்திருக்கும்! ஆனால் அப்படியா நடந்தது? நாம் சவுலைப் பற்றிதான் தொடர்ந்து படிக்கப் போகிறோம்!
அவனுடைய வெளியரங்கமான சவுந்தரியம் பெண்களைக் கவர்ந்த வேளையில், அவனுடைய உட்புறம் அசுத்த ஆவியின் குடியிருப்பாக இருந்தது என்பது நாம் படிக்கும் போது தெரிய வரும்!
சவுலின் அழகிய வெளியரங்கம் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தது போல நாமும் எத்தனை முறை வெளிப்புறத்தைக் கண்டு ஏமாந்திருக்கிறோம்! பார்க்க அழகாக இருந்தாள், நல்ல பிள்ளையாக இருப்பாள் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று கண்ணீர் விடும் குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்! ஆனால் மகனுக்குப் பெண் தேடிய போது அவர்கள் அந்தப் பெண் கர்த்தரை அறிந்தவளா, அவளது உள்ளான வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமாக உள்ளதா என்று சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை! அதைப் போலத்தான் மாப்பிள்ளையைத் தேடும் பெற்றோரும் செல்வாக்கையும், படிப்பையும், நல்ல வேலையையும் தேடுகிறார்களேத் தவிர கர்த்தரை அறிந்த அறிவைத் தேடுவதில்லை! பின்னர் கண்ணீர் வடித்து என்ன பிரயோஜனம்?
இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் தன்னுடைய சவுந்தரியத்தால் இஸ்ரவேல் மக்களைக் கவர்ந்தான் ஆனால் அவனுடைய அசுத்த ஆவி நிறைந்த இருதயத்தால் அவர்களை ஏமாற்றி விட்டான்!
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் ஆனால் கர்த்தரோ நம்முடைய இருதயத்தையும் அதின் நினைவுகளையும் பார்க்கிறார்! நீ எந்த அளவு கோலைக் கொண்டு அளந்து கொண்டிருக்கிறாய்?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
What a gentle reminder to honour the Lord with our INNER BEAUTY!! Our inner beauty is the expression of Trusting God in our lives and Honouring Him in all the matters!!!! King Saul is the outcome of people’s adament attitude against God and His ways!!!!!