ஆதி: 30: 25,26 “ ராகேல் யோசேப்பை பெற்ற பின் , யாக்கோபு லாபானை நோக்கி ; நான் என் ஸ்தானத்திற்க்கும், என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.
நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும், என் பிள்ளைகளையும் எனக்கு தாரும், நான் போவேன்; நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.”
நான் இப்பொழுது வாழும் இடத்தில் அட்டைப் பூச்சிகள் அதிகம். அது நம் இரத்தத்தை உறிஞ்சி கீழே விழும் வரைக்கும், எங்கு,எப்பொழுது நம்மை ஒட்டிக் கொண்டது என்று நமக்குத் தெரியாது! ஆனால் அட்டையைப் போல மற்றவர்களுடைய இரத்தத்தை உறியும் மனிதர்களும் உள்ளனர் அல்லவா?
புத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனை, தன் இரண்டு குமாரத்திகளையும் மணமுடிக்க செய்ததுமல்லாமல், பதினான்கு வருடங்கள் தனக்கு கடினமாக ஊழியம் செய்ய வைத்தான்.
இந்த பதினான்கு வருடங்களும், யாக்கோபின் குடும்பம் தொடர்ந்து பல அல்லல்களுக்கு உள்ளாகியது. ராகேலுக்கு பதிலாய் லேயாளை மணந்தது, லேயாளுக்கு ஒன்று பின்னால் ஒன்றாய் குழந்தைகள் பிறந்த போது, அவன் அருமை மனைவி ராகேல் மலடியாயிருந்ததது, இவற்றினால் குடும்பத்தில் ஏற்பட்ட மன வேதனைகள், சகோதரிகளுக்குள் ஏற்பட்ட பொறாமை இவை யாக்கோபை தன் தகப்பனின் ஊருக்கு திரும்ப விடாமல் தடுத்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் ராகேல் மேல் இரக்கம் காட்டினார். அவள் கர்ப்பம் தரித்து யோசேப்பை பெற்றதால், யாக்கோபின் வாழ்வில் ஓர் திருப்பம் ஏற்ப்பட்டது. அவளிடமிருந்த தாழ்வு மனப்பான்மை மறைந்து அவள் சகோதரி மேலிருந்த பொறாமையும் மறைந்து போயிற்று. குடும்ப சூழ்நிலை கர்த்தருடைய கிருபையால் மாறவே, யோசேப்பு தன் நாட்டுக்கு திரும்ப நினைத்தான்.
யோசேப்பு லாபானிடம் தன் ஆவலைத் தெரிவிக்கும் போது மறுபடியும், பேராசை பிடித்த லாபானைப் பார்க்கிறோம். இத்தனை வருடங்கள் ஒரு அடிமையைப் போல யாக்கோபை நடத்தி வந்த லாபான், இப்பொழுது அவனை இழக்க தயாராக இல்லை. வேதத்தில் பார்ப்போம் லாபான் என்ன கூறுகிறான் என்று. ஆதி:30:27 அப்பொழுது லாபான்; உன் கண்களில் எனக்கு தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசிர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.” என்றான்.
என்ன ஆச்சரியம்! தன் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பிரிகிறோம் என்ற வருத்தத்தைக் கொஞ்சம் கூட காணோம். யாக்கோபு போய் விட்டால் தனக்கு வந்த வருமானம் குறைந்து விடுமே என்ற கவலையும், நீ வந்த பின்னர் தானே எனக்கு வியாபாரம் நன்றாக நடந்தது, நீ போய் விட்டால் நான் என்ன செய்வேன்? என்ற ஆதங்கமும் அவன் குரலில் தெரிந்தது. லாபான் என்கிற அட்டை பூச்சி, யாக்கோபின் இரத்தத்தை உறிஞ்சிய பின்னரும் விட மனதில்லை.
அருமையானவர்களே, லாபான் என்னும் அட்டைப் பூச்சியைப் பற்றி யோசிக்கும் இந்த வேளையில், நம்முடைய வாழ்க்கையை பற்றி சிறிது சிந்திப்போம். எத்தனை முறை நாம் மற்றவர்களை அட்டை போல ஒட்டி கொண்டு நம்முடைய காரியத்தை சாதித்திருக்கிறோம்! சில பழக்க வழக்கங்கள் நமக்கு சிற்றின்பம் கொடுப்பதால் அதை நாம் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறோமல்லவா? நம்மில் எத்தனை பேர் பதவியை, அதிகாரத்தை விட்டு கொடுக்காமல் அட்டையை போல ஓட்டிக் கொண்டிருக்கிறோம்? மற்றவர்களை உறிஞ்சி வாழும் குணம் நமக்கு மட்டும் இல்லையா என்ன?
கடைசியில், லாபான் என்ற பேராசைக்காரனின் பிடியிலிருந்து தப்பிக்க, யாக்கோபின் குடும்பம் இராத்திரியிலே அந்த ஊரை விட்டு ஓட வேண்டியிருந்தது. பேராசைக்காரனின் பிடியில் வாழ்நாளைக் கழிப்பதைவிட தான் செய்த குற்றத்துக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பதே மேல் என்று எண்ணியவனாய், கர்த்தர் தன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் வாக்குத்தத்தம் பண்ணின கானானை நோக்கி தன் குடும்பத்தோடு பிரயாணம் பண்ணினான் யாக்கோபு.
ஜெபம்: நல்ல ஆண்டவரே! எந்த சூழ்நிலையிலும் நான் என் சுய நலத்துக்காக மற்றவர்களை பணயமாக வைக்காதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்!
When we try to induce others, and make them slaves to our selfish motives, we become like Laban! Let God forbid not to have a attitude like Laban!! In all dark circumstances, problems, sticky issues, let us bring Jesus over all our problems!!! He would relieve us from all situations!!! What a beautiful lesson we have today from Labans life!!!! Let us fix our eyes towards Jesus!!!! God Bless!!!!