ஆதி: 35: 19 – 20 “ ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.
அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம்.
ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில் அவள் மலடியாயிருந்து பட்ட நிந்தையை நீக்கி கர்த்தர் ஒரு குமாரனைக் கொடுத்தவுடன் அவனுக்கு அவள் (ஆதி:30:24) ‘இன்னும் ஒரு குமாரனைத் தருவார்’ என்ற அர்த்தத்தில் அவள் ‘யோசேப்பு’ என்று பெயரிடுகிறாள். இன்னும் ஒரு குமாரனை பெற வேண்டும் என்ற அவள் உள்ளத்தின் வாஞ்சையை கர்த்தர் அறிந்து அவளுக்கு பென்யமீனைத் தந்தருளினார். இப்பொழுது யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்கள் ( பன்னிரண்டு கோத்திரங்களின் தகப்பன்மார்கள்) இருந்தனர் என்று பார்க்கிறோம்.
பென்யமீன் பிறந்தவுடன் ராகேல் மரித்தாள். யாக்கோபு ராகேலை எவ்வளவாக நேசித்தான்! அவளை மனைவியாய் அடைய பேராசைக்காரன் லாபானுக்கு பதினான்கு வருடங்கள் அடிமையாய் வேலை செய்தானல்லவா?
நாம் நேசித்த ஒருவரை மரணம் பிரிக்கும் போது வருகிற துக்கம் தாங்க முடியாதது. என் இளம் பிராயத்திலேயே இந்த துக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். முதலில் என் அண்ணனையும், சில வருடங்களுக்கு பின்னால் என் அம்மாவையும் இழந்த வேதனையான அனுபவம் எனக்கு உண்டு. பின்னர் எனக்கு அருமையானவர்கள் பலர் கணவரை அல்லது மனைவியை இழந்து , அல்லது மகனையோ, மகளையோ இழந்து தவித்து நிற்பதைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறேன். மரணம் ஒரு சடுதியில் நம்மை நாம் நேசிக்கிறவர்களிடமிருந்து பிரித்து விடும்.
யாக்கோபு தன அருமை மனைவியை பெத்லேகேமிலே அடக்கம் பண்ணி, அந்த இடத்தில் ஒரு தூணை நிறுத்தினான் என்று வேதம் சொல்கிறது. நான் பெத்லேகேம் ஊருக்கு சென்ற போது, அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் ராகேலின் கல்லறை என்று காட்டினர். ஆனால் எரே:31:15 ராமாவிலே ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள் என்று கூறப்பட்டிருக்கிறது. ராமா என்பது பெத்லேகேமிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு இடம்.
பென்யமீனின் பிறப்பு பெத்லேகேமிலே சந்தோஷத்தையும், ராகேலின் மரணம் துக்கத்தையும் கொண்டு வந்தது. ஆதி:48:7 ல் யாக்கோபு தான் மரிக்கும் தருவாயில் ( ஆதி: 48:7) “ நான் பதானை விட்டு வருகையில் கானான் தேசத்தில் எப்பிராத்தவுக்கு கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்: அவளை பெத்லேகேம் என்னும் எப்பிராத்தவுக்கு போகிற வழியிலே அடக்கம் பண்ணினேன்” என்று நினைவு கூர்ந்தான்.
அன்று யாக்கோபு தன் மனைவியின் மரணத்தினால் பெத்லேகேமை நினைவு கூர்ந்தான், இன்றோ நாம் நம் இரட்சகரின் பிறப்பினால் பெத்லேகேமை நினைவு கூருகிறோம்.
பெத்லேகேம் என்றால் இன்று கண்ணீர் அல்ல, உலகத்துக்கு ஓர் நற்செய்தி கொடுக்கப் பட்ட இடம்!
துற்செய்தியோடு வேதத்தில் முதன் முதலில் இடம் பெற்ற இந்த பெத்லேகேம்,இயேசு கிறிஸ்து உலக மீட்பராய் பெத்லெகேமிலே பிறந்த நற்செய்தியினாலே மிகுந்த சந்தோஷத்தோடு உலகத்தாரால் நினைவு கூறப் படுகிறது!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்