ஆதி: 38:14,15 “ சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாக கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்த படியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து”
நேற்று நாம் தாமாருக்கு இழைக்கப் பட்ட அநியாயத்தை கர்த்தர் கண்டார் என்று பார்த்தோம். இன்றைய வேத பகுதியில் நான் தாமார் நடந்து கொண்ட விதத்தை படித்தபோது, ஒரு பெண் தன்னை தானே இவ்வளவு கீழ்த்தரமாய் நடத்த முடியுமா என்று நினைத்தேன்.
ஏதோ நாடகத்தில் நடிகர்கள் வேஷம் மாற்றுவதைப் போல தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்துவிட்டு, தன்னை வேசியைப் போல அலங்கரித்துக் கண்டு தாமார் திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமருகிறாள்!
நம்மில் எத்தனை பேர் உள்ளான வாழ்க்கையை மூடி மறைத்துவிட்டு வெளிப்புறமாய் அலங்கரித்துக் கொள்கிறோம்? என்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த ஒரு பெண் கல கலவென்று சிரித்துக் கொண்டே இருப்பாள். அவளை ஒரு நிமிடம் நிறுத்தி எப்படி இருக்கிறாய் என்று கேட்பேனானால், உடனே கண்களில் நீர் பெருக்கெடுத்துவிடும். சிறுகுழந்தை போல சிரிக்கும் இவளுக்குள் இவ்வளவு பெரிய வேதனை மறைந்திருக்கிறதா என்று ஆச்சரியமாயிருக்கும்.
தாமார் தன் முதல் கணவன் ஏரினால் சரியாக நடத்தப்படவில்லை, அவனுடைய சகோதரன் அவளை அவமதித்தான். அவள் மாமனார் யூதா அவளுக்கு மதிப்பு கொடுத்ததாக தெரிய வில்லை. அந்த காலத்தில் இருந்த எல்லா ஆண்களையும் போல பெண்களை பிள்ளைகள் பெற்கும் இயந்திரமாகவே பார்த்தான். அவனுடைய வீட்டு மருமகளான அவளை அன்புடன் நடத்துவதற்கு பதிலாக, இளம் பெண் தாமாரை, அவள் வீட்டில் விதவை கோலத்தில் தன் மகன் பெரியவனாகும் வரை காத்திருக்க அனுப்பினான்.
இப்பொழுது யூதா தன் மனைவி மரித்து போன பின்னர், பெண் ஆசை பிடித்து வேசியை தேடி அலைகிறான் என்று பார்க்கிறோம். அவன் செய்த பெரிய குற்றம் என்னவெனில், அவன் ஆசை வெறியில் அடையாளம் தெரியாமல், அவன் மருமகளாகிய தாமாரை ஒரு வேசி என்று எண்ணி நெருங்கியதுதான்!
யூதா, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உதித்த யூத குலத்தின் தகப்பன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் பிள்ளைகளில் ஒருவன், ஒரு வேசியை தேடி அலைந்து, தான் வேசி என்று நினைத்த தன் மருமகளிடம் சேருகிறான்! என்ன கொடுமையான சாட்சி இது!
கர்த்தர் ஏன் இந்த கதையை வேதத்தில் இடம் பெற செய்தார்? தாமாரின் வாழ்க்கையில் நாம் கற்றுகொள்ள என்ன இருக்கிறது என்று நாம் எண்ணலாம். ஒவ்வொரு மனிதனாலும் அலட்சியமாய் நடத்தப் பட்ட தாமார், தான் வாழ வேண்டிய வீட்டிலிருந்து கைம்பெண்ணாய், தகப்பன் வீட்டுக்கு துரத்தப்பட்ட இவள், திடீரென்று தன் ‘நல்ல பெண்’ வேஷத்தை கலைத்துவிட்டு, முக்காடிட்டு கீழ்த்தரமான வேசியின் வேஷத்தை அணிந்து கொண்டது ஏன்? என்ன ஆயிற்று அவளுக்கு? அவள் தன் கணவன் ஏர் போல கெட்டவள் இல்லை, ஓனான் போல கர்த்தருடைய கட்டளையை அவமதிக்கவில்லை, யூதாவின் வஞ்ச புத்தி கூட இல்லை? பின்னர் ஏன் இப்படி செய்தாள்? ஏன் தன்னை அவமானத்துக்குட்படுத்தினாள்?
தாமார் தன் அவல நிலையை மாற்றுவதாக எண்ணி, தன்னைத்தானே கேவலப் படுத்தினாள்! தன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக எண்ணி, தன்னையே கேள்விக் குறியாக்கினாள் என்று பார்க்கிறோம்.
என்னை நானே மதிக்காத அளவுக்கு என்றாவது நான் நடந்து கொண்டிருக்கிறேனா? நான் செய்த ஏதாவது ஒரு காரியம் என்னை நானே வெறுக்கும் படி இருந்ததா? தாமாரைப் போல முக்காடிட்ட வாழ்க்கையை வாழ்கிறேனா? முகத்திரைக்கு பின்னால் என் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாய் எண்ணி என்னை நானே வெறுக்கும்படி நடந்து கொண்டிருக்கிறேனா? சிந்தித்து பார்ப்போம்!
வேதம் I கொரி:6:20 ல் கூறுகிறது, “ கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே; ஆதலால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்”என்று.
நாம் இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே கிரயத்துக்கு கொள்ளப்பட்டிருக்கிறோம், நம்மை கேவலமாக விற்பதற்கு அல்ல! நம் தாயின் கருவில் நாம் உருவாகும்போதே கர்த்தர் நம்மை அவருடைய சித்தப்படி உபயோகப் படுத்துவதற்காகவே உருவாகியிருக்கிறார். நம்முடைய இஷ்டப்படி, முக்காடிட்டு, வேஷம் மாற்றுவதற்காக அல்ல! எந்தக்காரணத்துக்காகவும் கனவீனப்பட்டு விடாதீர்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
What an excellent, deep, provoking thoughts, to be learned from Tamar’s life! The Bible says, “Our body is the temple of the Holy Spirit, and need to give our body and life into God’s care and protection! Rom 12:1). The evil can come in any form!!! We need to watch and pray, and cast the evil, in the Mighty name of Jesus. Every miniute, when our conscience is fixed with our Lord, there won’t be any way, the devil would dare to touch us!!!!