Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 6 இதழ்: 398 – இயேசுவின் நாமமே பலத்த துருகம்!

  உபாகமம்: 4: 41, 43 ”முற்பகையின்றிக் கைப்பிசகாய்ப் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய் பிழைத்திருக்கும்படியாக,..

மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் ஏற்படுத்தினான்.

நான் அதிகமாக சரித்திர புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். சரித்திரப்பூர்வமான இடங்களைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளிக்கூட நாட்களில் போன உல்லாசப்பயணங்களில், ராஜாக்கள் தம்முடைய நாட்டைப் பாதுகாக்கக் கட்டிய கோட்டைகள் தான் எப்பொழுதும் என் மனதில் நிற்கும். அந்தக் கோட்டைகளைப் பார்க்கும்போது அந்த நாட்டின் ஜனங்கள் எப்படியாக பாதுகாப்பாய் இருந்திருப்பார்கள் என்று யோசிப்பேன். இன்று நமக்கு அவை சரித்திரமாக இருந்தாலும், அந்தநாட்களில் அவர்களுக்கு அதுவே இரட்சிப்பு. எதிரிகள் அணுகும்போது அவர்கள் அந்தக் கோட்டைக்குள் தஞ்சம் புகுவார்கள்.

இஸ்ரவேல் நாட்டில் பிரயாணம் பண்ணினபோது ஏரோது ராஜாவினால் கட்டப்பட்ட “மசாடா” (கோட்டை) என்ற மலைக்கோட்டையைப் பார்க்க சென்றோம். அங்கே அவர்கள் எதிரிகள் அந்த மலையின்மேல் ஏறினால் அவர்கள்மேல் உருட்டிவிட பெரிய கற்களை அடுக்கி வைத்திருந்தார்கள். எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் கொடுத்தவை இப்படிப்பட்ட கோட்டைகள் தான்.

வேதாகமத்தில் கர்த்தர் மோசேயிடம் இப்படிப்பட்ட மூன்று அடைக்கலப்பட்டணங்களை ஏற்படுத்துமாறு கட்டளைக் கொடுக்கிறார். இவை தெரியாத்தனமாக மகா பெரிய குற்றத்தில் மாட்டிகொண்ட மக்களை, மற்றவர்களுடைய பழிவாங்குதலிருந்து காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கவே கர்த்தர் எடுத்த முடிவு. அப்படிப்பட்டவர்கள் ஓடி அந்தப் பட்டணங்களில் புகுந்துகொண்டால் அவர்கள்மேல் யாரும் கைவைக்க முடியாது. தேவனாகிய கர்த்தர் பூமியில் வாழும் ஜனங்கள்மேல் எவ்வளவு அக்கறையுள்ளவர் என்று நமக்கு இதன்மூலம் விளங்கும்.

இதைப்பற்றி வாசிக்கும்போது, நீதிமொழிகளில் சாலொமோன் ராஜா சொன்ன இந்த வசனம் என்னை ஆழமாக சிந்திக்க வைத்தது, ”கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதி: 18:10). இது நமக்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கிற  அடைக்கலப்பட்டணம்.  கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு எதிரியாகிய சாத்தானிடமிருந்து தாக்குதல்கள் ஒவ்வொருநாளும் வெவ்வேறு திசைகளிலிருந்தும் வரும். அந்த நேரத்தில் கர்த்தர் , ”நான் உனக்கு அடைக்கலமும், அரணான கோட்டையுமாயிருக்கிறேன். என்னிடம் வந்து அடைக்கலம் பெற்றுகொள்” என்று சொல்லுகிறார். அவருடைய செட்டைகளுக்குள் நமக்கு பாதுகாப்பு உண்டு.

ஆனால் நம்மில்  அநேகருக்கு கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாயிருப்பதற்கு பதிலாய் ஆஸ்தியும் அந்தஸ்தும்தான் நமது துருகமாயிருக்கிறது! நீதிமொழிகள் 18 ம் அதிகாரம் 11 வது வசனத்தை நாம் தொடர்ந்து வாசித்தால் சாலொமோன் ராஜா   ”ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில் போலிருக்கும்” என்று சொல்லுகிறான்.

எப்படிங்க! இன்றைக்கு பணம் இல்லையானால் எப்படி வாழமுடியும்? ஒரு சுகமான வாழ்க்கை வேணும்னா பணம் இல்லைனா எப்படிங்க? ஒரு ஆபத்துன்னா உதவுகிறது பணம்தானே! ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு போகணும்னா பணம் வேணும்! ஒரு நல்ல வக்கீலைப் பார்க்கணும்னா பணம் வேணும்! பணம் பத்தும் செய்யும்! என்று நம்மில் பலர் கணக்குபோடுவது தெரிகிறது.

விசேஷமாக இன்று உலகநாடுகளின் பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும்வேளையில் பணத்தை சேர்த்து வைத்திருப்பவர்கள் அதைத் தங்கள் அரணான கோட்டையாக நம்புகிறார்கள்!

இன்று நீ அச்சடிக்கப்பட்ட காகிதத்தையும், பட்டறையில் உருக்கிய வெள்ளியையும், பொன்னையும் அரணான கோட்டையாக எண்ணுகிறாயா? அல்லது சாலொமோன் ராஜாவைப் போல கர்த்தருடைய நாமத்தை பலத்த துருகமாக, அரணான கோட்டையாக எண்ணுகிறாயா?

இயேசு கிறிஸ்து என்ற நாமமே நமக்கு பலத்த துருகம்! நம்பி அவரண்டை வா!

நாம் அதற்குள் எந்த ஆபத்தும் அணுகாமல் சுகமாயிருப்போம் என்பது தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.

ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி!  இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s