உபாகமம்: 28:15 ” இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில் இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”
கதைப் புத்தகங்களில் மந்திரவாதியின் சாபத்தினால் மனிதன் பூனையாவதைப் பற்றி படித்திருக்கிறேன்! ஏழை எளிய மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொள்ளும்போது நீ மண்ணாய் போவாய், நீ விளங்காமல் போவாய், என்று சாபமிடுவதையும் கண்களால் பார்த்திருக்கிறேன். என்னுடைய சொந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் தொடர்ந்து ஊனமாய், குருடாய்ப் பிறந்தபோது, அவர்கள் யாருக்கோ அநியாயம் செய்ததால் சபிக்கப்பட்டதாக ஊர் மக்கள் சொன்னார்கள்!
கடந்த சில நாட்களாக நாம் உபாகமம் புத்தகத்தில் தேவனாகிய கர்த்தர் தம் தாசனாகிய மோசே மூலம் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களைப் பற்றிப் பார்த்தோம். நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால் எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம், கர்த்தருடைய பிரசன்னமானது கர்ப்பத்தின் கனியாகிய நம்முடைய பிள்ளைகளையும், நமக்கு சொந்தமான எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கும்! அவர் நம்மைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்! நம்மை வாலாக்காமல் தலையாக்குவார்! இதுதான் அவர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம்!
இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் சாபம் என்ற வார்த்தையைப் படிக்கும்போது கர்த்தரை ஒரு` மந்திரவாதியாகவோ அல்லது மண்ணைவாரி கொட்டி சாபம்போடும் ஒரு கொடிய மனிதனாகவோ நம் மனது கற்பனை செய்யக்கூடும். கர்த்தர் நம்மை சபித்துவிட்டால் அது கடுமையாக இருக்குமே என்று நம்மை பயப்பட செய்யும் ஏனெனில் சபிக்கப்படுதல் என்பது நாம் யாரும் விரும்பாத ஒன்று!
எபிரேய மொழியில் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும் என்ற வார்த்தைக்கு உன்னைக் கிட்டி சேர்ந்து பற்றிகொள்ளும் என்று அர்த்தம் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம்.
உபாகமம்:28:13 ல் மோசேயின் வார்த்தைகள் கடும் எச்சரிக்கையோடு வந்தன!
“ இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படிக்கு நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்” என்று. கர்த்தர் தம் பிள்ளைகளிடம் நிலையான, நிரந்தர அனபை எதிர்பார்த்தார். பின்னர் உபாக:28:15 ம் வசனத்தில் நாம் அவருடைய கட்டளைகளை கூர்ந்து கவனித்து, அவருடைய வழிகளில் நடவாமல் போனால் சாபம் நம்மைக் கிட்டி சேர்ந்து பற்றிக்கொள்ளும் என்று கூறுகிறார்.
அப்படியானால் என்ன? கர்த்தாராகிய ஆண்டவர் நம் மேல் ஏதாவது மந்திரத்தை ஏவி விடுவாரா? அவர் அவ்வளவு கொடியவரா? தமக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சாபம் போட்டு விடுவாரா?
நிச்சயமாக இல்லை! அவருடைய வழிகளில் நடவாமல், நாமுடைய சொந்த வழிகளைத் தெரிந்து கொள்வோமானால் சாபம் நம்மைத் தொடரும் என்று கர்த்தர் சொல்லுவதின் கருத்து என்ன என்று பார்ப்போம்!
எபிரேய மொழியில் சாபம் என்ற வார்த்தைக்கு ’கழிவு அல்லது அசுத்தம்’ என்று அர்த்தம்.
நாம் ஆசீர்வாதங்கள் என்ற வார்த்தையின் அர்த்தத்தை பார்த்திருக்கிறோம். ஆசீர்வாதங்கள் என்பது தேவனை எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் ஆராதிக்கும் பரிசுத்தமான வாழ்க்கை. சாபங்கள் என்பது அதற்கு நேர்மாறான அசுத்தமான வாழ்க்கை. சாபம் எனபது நாம் கர்த்தருடைய வழிகளை பின்பற்றாமல் போவதால் கர்த்தர் நம் மேல் கோபப்பட்டு, பழிவாங்க ஏவிவிடும் மந்திரம் அல்ல. அது நாம் பரிசுத்தரான கர்த்தரை நம்முடைய வாழ்வின் மையத்தில் வைக்கத் தவறியதால் நம்மை சூழ்ந்து கொள்ளும் அசுத்தங்கள். இப்பொழுது ஆசீர்வாதங்கள், சாபங்கள் என்ற வார்த்தைகள் தெளிவாக புரிகின்றன அல்லவா?
கர்த்தராகிய தேவன், உன்னுடைய வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் பரிசுத்த ஆராதனையையும், அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும், தலைமைத்துவ ஊழியத்தையும், வளர்த்து, உன் மூலமாக உன் பிள்ளைகளும், உன்னை சுற்றிலும் உள்ளவர்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார்! இதுவே கர்த்தர் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களாம்!
ஆனால் நீயோ அவருடைய சத்தத்துக்கு செவிகொடுக்காமல், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போவாயானால், உன் வாழ்க்கையில் அசுத்தம் என்கிற களைகள் வளர்ந்து பூந்தோட்டமாய் பூத்து குலுங்க வேண்டிய உன் வாழ்க்கையை நெருப்புக்கு இரையாகும் வாழ்க்கையாக மாற்றிவிடும்! இதுவே கர்த்தர் நமக்கு கொடுக்கும் சாபங்களாம்!
ஆசீர்வாதமா? சாபமா? முடிவு செய்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!