நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது.
இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர், உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக புலப்பட்டது.
நான் தச்சனான நோவாவைக் கண்டேன்! ஆடுகளை மேய்த்த மோசேயைக் கண்டேன்! பாடல்களோடு ஆராதனை நடத்திய மிரியத்தைப் பார்த்தேன்! தற்போது பேரீச்சமரத்தண்டை அமர்ந்த குடும்பத்தலைவி தெபோராளையும், சேனைத் தலைவன் பாராக்கையும், கூடாரவாசி யாகேலையும் சந்திக்க கர்த்தர் கிருபையளித்துள்ளார்.
வேதாகமத்தின் ஒவ்வொரு சம்பவத்தின் மூலமும் தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற்றப் படுவதையும், அந்தப் பணிக்கு கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளை அழைத்து உபயோகப்படுத்தினாலும், கர்த்தர் என்றுமே ஒரு தனி மனிதனைப் பார்த்து உனக்கு தான் எல்லாம் தெரியும், நீ மாத்திரம் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. எப்பொழுதுமே கர்த்தர் தம்முடைய பணிக்கென்று ஒரு குழுவை ஏற்ப்படுத்தியிருந்தார்.
நோவாவுக்கு அவன் மனைவியும், அவன் மூன்று மகன்களும், மருமகள்மாரும் துணையாக இருந்தனர். அவன் பேழையைக் கட்டின 120 வருடங்கள் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? மோசேக்கு உதவி செய்ய கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும், அவன் மாமனார் யெத்ரோவையும் கூட வைத்திருந்தார்.
இங்கு 20 வருடங்கள் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீனின் சேனாதிபதியான சிசெராவை அழிக்க கர்த்தர் தாலந்து மிக்க ஒரு குழுவை உபயோகப்படுத்துவதைக் காண்கிறோம். கர்த்தர் இஸ்ரவேலின் தாயான தெபோராளை இந்தப் பணிக்காக அழைத்தாலும், யுத்தத்தை முன் நடத்த பாராக்கும் தேவைப்பட்டான்.
பாராக் சேனைத் தலைவன் மாத்திரம் அல்ல, உறுதியான மனப்பான்மை கொண்டவனும் கூட.இஸ்ரவேலின் சேனைக்கும், சிசெராவின் சேனைக்கும் யுத்தம் நடந்த இடம் யாபீனுடைய கூடாரத்திலிருந்து குறைந்தது 30 மைல்கள் தூரமாவது இருந்திருக்கும். ஆனால் பாராக் விடவில்லை! சிசெராவைத் தொடர்ந்து பிடிக்க முடிவு செய்து பின் தொடருகிறான்.
ஆனால் கர்த்தர் தம்முடைய சொந்த ஜனமான இஸ்ரவேலில் தெரிந்துகொள்ளப்பட்ட தெபோராளையும், பாராக்கையும் மாத்திரமா இந்தப் பணிக்கு உபயோகப்படுத்தினார்? இல்லை! ஒரு சாதாரண கூடார வாசியான ,கேனியப் பெண்ணான, யாகேலையும் கூட உபயோகப்படுத்தினார்! அவளும் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தேவைபட்டாள்!
இதில் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு பெரிய பாடம் இருக்கிறது.
இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், {1 கொரி: 12: 4 – 6 } ” வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.” என்றார்.
பவுல் இந்த வசனங்களை எழுதியபோது, ஒருவேளை தெபோராளையும், பாராக்கையும், யாகேலையும் மனதில் கொண்டுதான் எழுதினாரோ என்னமோ! மூன்று வித்தியாசமான மனிதர்கள், தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற, தேவனால் உபயோகப்படுத்தப்பட்டனர்.
யாரிடமுமே எல்லாத் தாலந்துகளும் இல்லை, எல்லா வரங்களும் இல்லை. என்னிடம் எந்த வரமுமே இல்லை என்றுதான் எப்பொழுதுமே எண்ணுவேன். என்னையும் என்னுடைய நேரத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்தேன், உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்கின்ற உங்களுக்கு ஆசீர்வாதமான இந்த மலர்த்தோட்டம் உருவாகியது.
தீர்க்கதரிசி தெபோராள், சேனைத்தலைவன் பாராக், சாதாரண கூடாரவாசி யாகேல், இவர்கள் மூவரின் தாலந்துகளையும் ஒன்றிணைத்து தமக்கென்று உபயோகப்படுத்தின தேவன் உன்னையும் உபயோகப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறார்.
மிகவும் சாதாரணமான நீதான் அவருக்குத் தேவை!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
Very useful and challenging Word. God is not looking for our Abilities, but looking for our Availabilities!! God wants each and everyone of us for His Ministry. Are we willing to heed His Voice!?