Archive | August 2016

மலர் 7 இதழ்: 446 நீ பேசும்போதே கேட்பார்!

யோசுவா: 15:18 காலேப் (அவளைப்) பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான்.

யோவான்: 5:6 (இயேசு) அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.

இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த போது, தான் சென்ற இடமெல்லாம் நோயாளிகளை சொஸ்தமாக்கினார் என்று நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அப்படிப் பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் பெதஸ்தா குளத்துக்க்கரையில் 38 வருடங்களாகக் காத்திருந்த ஒரு மனிதனை சுகமாக்கியது.

அன்றைய நாட்களில், நோய் என்பது ஒருவனுடைய பாவத்தினால் வரும் தண்டனை என்று மத தலைவர்கள் போதித்து வந்தனர். பெதஸ்தா குளத்தில் தண்ணீர் கலக்கப்படும் போது முதலில் எவன் குளத்துக்குள் இறங்குகிறானோ அவனுக்கு சுகம் கிடைக்கும் என்பது அந்த மக்களின் விசுவாசமாயிருந்தது. ஒருநாள் இயேசுவானவர் அந்தப்பக்கமாய் வரும்போது 38 வருடமாய் நோய்வாய்ப் பட்டிருந்த இந்த மனிதனைக் கண்டு, நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்றார்.

38 வருடமாய் வருந்திக்கொண்டிருந்த ஒரு மனிதனிடம் இந்தக் கேள்வியை கேட்கும்போது, அதற்கு என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்? அவர் அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்பே  என்னுடைய பதில் ” ஆம்” என்றிருக்கும்.

இந்தக் சம்பவத்துடன் நாம் காலேபை எப்படி ஒப்பிட முடியும்? நாம் யோசுவாவிலிருந்து காலேபைப் பற்றி அல்லவா படிக்கிறோம்? என்று நீங்கள் கேட்கலாம்!

இன்று நான் கொடுத்துள்ள வேதாகமப் பகுதியில் உள்ள இரண்டு வசனங்களையும் கவனித்துப் பாருங்கள்!

உனக்கு என்ன வேண்டும் ,  வேண்டுமென்று விரும்புகிறாயா என்ற வார்த்தைகள் இந்தக் கதையை நமக்கு ஒப்பிட்டுக் காண்பிக்கின்றன!

காலேபின் மகளாகிய அக்சாள், காலேபின் சகோதரன் மகனாகிய ஒத்னியேலைத் திருமணம் செய்கிறாள். அவள் புறப்படும்போது தன் தகப்பனிடம் ஒரு வயல் வெளியைக் கேட்பேன் என்று தன் கணவனிடம் கூறிவிட்டுத் தன் கழுதையிலிருந்து இறங்குகிறாள். அவளைக் கண்டதும், அவள் வாயிலிருந்து வார்த்தை புறப்படுமுன்னரே, காலேப் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதைப் பார்க்கிறோம். அதற்கு, உன் உள்ளத்தின் வாஞ்சை என்ன, உன் ஆசை என்ன என்று எனக்கு சொல் என்று அர்த்தமாம்.

அக்சாள் வாய் திறந்து கேட்குமுன்னரே அவள் வாஞ்சையை நிறைவேற்ற ஆசைப் பட்டான் அவள் தகப்பனாகிய காலேப். இதைத்தான் நாம் நம்முடைய பரமத் தகப்பனிலும் கண்கிறோம்.

ஏசாயா 65: 24 ல் நம்முடைய பரம பிதாவானவர் ” அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்பே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்” என்றார்.

அதுமட்டுமல்ல, நாம் கேட்பதற்கு முன்பே நமக்கு பதிலக்க காத்திருக்கும் நம் பரமபிதாவை நமக்கு வெளிப்படுத்தவே, கர்த்தராகிய இயேசுவானவர், இந்த பூமியில் வாழ்ந்தபோது , தன்னுடைய ஊழியக்காலம் முழுவதும், தம்முடைய பிள்ளைகளின் தேவைகளை அறிந்து, அவர்கள் வாய் திறந்து கேட்குமுன்னரே உனக்கு என்ன வேண்டும் என்று அவர்களுடைய வாஞ்சைகளை நிறைவேற்றினார்.

தேவனாகிய கர்த்தருடைய சமுகத்துக்குள் நீ வரும்போதே உனக்கு என்ன வேண்டும் என்று கர்த்தர் உன் உள்ளத்தின் வாஞ்சைகளை நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறார்.

உனக்கு என்ன வேண்டும்! அவரிடம் சொல்! நிறைவேற்றுவார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 7 இதழ்: 445 தயங்காதே! கேள்!

யோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின் மேலிருந்து இறங்கினாள்.

நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து  நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.

இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.

மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.

நான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை!

ஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர்  என்பதை உணர்ந்தோம்.

ஆறாவதாக தன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் கண்டோம்.

காலேபின் மகள் அக்சாள், காலேபின் சகோதரனின்  மகனாகிய ஒத்னியேல் என்பவனைத் திருமணம் செய்தாள் என்று வேதம் சொல்லுகிறது. திருமணத்தன்று இரவு அவன் அக்சாளிடம் அவள் தகப்பனாகிய காலேபிடம் ஒரு வயல்வெளியை கேட்கச் சொன்னான் என்று வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.ஒருவேளை மருமகனாகிய அவன் பண ஆசையில் கேட்கிறான் என்று எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனால் அவன் மனைவியைக் கேட்கும்படி சொன்னான் என்பது அவர்கள் கணிப்பு. அதுமட்டுமல்ல, அவள் கேட்குமுன்னரே அவள் தகப்பன் அவள் கேட்பதற்கு மேலாகக் கொடுப்பார் என்பதும் அவனுக்குத் தெரியும்.

திருமணம்  முடிந்து அவள் புறப்படுகையில் அவள் காலேபிடம் நீர்ப்பாய்ச்சலான நிலத்தை கேட்கிறாள். அவளுக்கு தன் தகப்பனிடம் கேட்க எந்தத் தயக்கமும் இல்லை! இவ்வளவு கொடுத்திருக்கிறாரே, இதை எப்படிக் கேட்பேன் என்று ஒரு துளியும் தயங்கவில்லை. தன் பிள்ளைகள் கேட்பதை சந்தோஷமாகக் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் தன் தகப்பனிடம், கேட்பதை பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசத்துடன் நெருங்கினாள்.

அக்சாள் நீர்ப்பாய்ச்சலான நிலத்தைக் கேட்டவுடன் அவள் தகப்பனாகிய காலேப், அவளுக்கு கீழ்ப்புறத்திலும், மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான் என்றுப் பார்க்கிறோம்.

உலகத்தகப்பனாகிய காலேப் தன் மகள் கேட்டவைகளைத் தயக்கமில்லாமல் கொடுத்தவிதமாய் நம் பரம தகப்பனும் நாம் ஜெபத்தில் அவரிடம் கேட்ப்பவைகளைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இதைத்தான் இன்று நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு, பரம பிதாவின் தயவைப் பற்றிக் கூறும்போது,  (லூக்கா:11:11-13 )” உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால் அவனுக்கு கல்லைக் கொடுப்பானா?மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?   அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உஙகள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்குபோது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

ஒரு தயக்கமும் வேண்டாம்! பரம பிதாவின் சமுகத்துக்கு உன் தேவைகளுடன் நெருங்கு! நீ கேட்கும் முன்னரே உன் தேவைகளை அறிந்த அவர், நீ கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அக்சாளைப் போல அவருடைய சமுகத்தில் சென்று ஆசீர்வாதத்தை தேடு!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 444 மகளின் நலம் விரும்பிய தகப்பன்!

யோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”

நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து  நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.

இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.

மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.

நான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை!

ஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர் என்பதை உணர்ந்தோம்.

இன்று நாம் காலேபின் வாழ்க்கையைத் தொடருகிறோம்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவள். என்றுமே மிஞ்சிய வருமானம் என் பெற்றோருக்கு இருந்ததில்லை. என்னையும், என் அண்ணனையும் படிக்க வைக்க அம்மா அனேகத் தியாகங்களை செய்ய வேண்டியிருந்தது. எல்லா கஷ்டங்களுக்கும் இடையில் அம்மா நாங்கள் விரும்பிய அனைத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள். எதைப் படிக்க ஆசைப்பட்டோமோ அந்த படிப்பைத் தொடர எல்லாவிதத்திலும் முயற்சி செய்தார்கள். எனக்கு கர்த்தர் கொடுத்த அருமையான வாழ்க்கையை பார்க்க முடியாமல் போய்விட்டாலும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருந்தவர்கள் என் அம்மா என்பதை மறக்கவே மாட்டேன்,

இதை எழுதும்போது தன் பிள்ளைகளுக்காக தங்களது வாழ்க்கையையே தியாகம் பண்ணும் பல இலட்சக்கணக்கான பெற்றோருக்கு என் மனமார்ந்த நன்றியுடன் எழுதுகிறேன். என்னுடைய கம்பெனியில் வேலை செய்த பல பெண்கள் தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்பதற்காக உழைத்ததைப் பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எந்த தியாகத்தையும் செய்யத் துணிந்த பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல தகப்பனைத்தான் இன்று நாம் காலேபின் குணாதிசயமாகப் பார்க்கிறோம். தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடித்தர காலேப் விரும்பினான். கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் காண்கிறோம். தன் மகள் ஒரு நல்ல கணவனுக்கு, வீரமுள்ளவனுக்கு, கர்த்தருக்காக எதையும் செய்யத் துணிபவனுக்கு மனைவியாக இருக்க வேண்டுமென்று நினைத்தான்.

தன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் காண்கிறோம்.

எரேமியா 29: 11 ல் நம் பரம தகப்பனானவர் ,” நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” என்று தம்முடைய பிள்ளைகளைப் பார்த்துக் கூறுகிறார்.

பரலோகத் தகப்பனின் பிள்ளையான நான் இந்த வாக்குத்தத்தத்தை என் இதயப் பலகைகளில் எழுதி வைத்து ஒவ்வொரு நாளும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்! காலேப் தன் மகள் அக்சாளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்பியது போல நம் பரம தகப்பனும் நமக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கிறார்.

இன்று நீ அவருடைய பாதத்துக்கு வந்து, இந்த பரலோகத் தகப்பனின் அன்பைப் பெற்றுக் கொள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்