நியா: 6: 12 “கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”
கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றக் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்ட தெபோராள், பாராக், யாகேல் என்ற மூவரைப் பற்றி நாம் படித்தோம். தெபோராளின் வாழ்க்கையிலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக்கொண்டோம்.
இன்று நியாதிபதிகள் 6 ம் அதிகாரத்தில் நாம் கிதியோனின் வாழ்க்கைக்கு கடந்து வருவோம். நாம் படிக்கும்போது கிதியோன் எப்படியொரு சிக்கலான மனிதன் என்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.
நியாதிபதிகளின் புத்தகம் ஆறாவது அதிகாரம் “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் “என்று ஆரம்பிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் சிசெராவின் கொடுமையையும், ராஜா யாபீனின் 900 இருப்பு ரதங்களையும் மறந்து போனார்கள். அதை மட்டுமா மறந்தார்கள்! தேவனுடைய பலத்த கரம் அவர்களை விடுவித்ததையும், தெபோராளும், பாராக்கும் , யாகேலும், கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட்டதையும் கூட மறந்தார்கள்!
இப்பொழுது மறுபடியும் அவர்கள் வதைக்கப்பட்டார்கள். இந்தமுறை கானானியரால் அல்ல, மீதியானியரால் கஷ்டத்துக்குள்ளானார்கள். நியாதி: 6: 2 ல் வேதம் கூறுகிறது, மீதியானியரின் கை, இஸ்ரவேலின் மேல் பலத்ததால், அவர்கள் தங்களுக்கு, மலைகளிலுள்ள கெபிகளையும், குகைகளையும், அரணான ஸ்தலங்களையும், அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள் என்று. பயத்தினால் அவர்கள் ஒளிந்து வாழ்ந்தனர். தங்களுக்கு இனி விடுதலையே இல்லை என்று நம்பிக்கையிழந்து காணப்பட்டனர்.
ஆனால் தேவனாகிய கர்த்தரோ அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருந்தது. தம்முடைய மக்களை விடுவிக்கத் திறமைசாலியான ஒரு மனிதனைத் தேடினார்.
நியா: 6: 11 கூறுகிறது, கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்கு சமீபமாக அதைப் போரடித்தான் என்று. தேவனாகிய கர்த்தர் அவனிடம் தம்முடைய தூதரை அனுப்பி “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”
ஒரு நிமிடம்! நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது!
உயிருக்கு பயந்து மலைகளிலும் கெபிகளிலும் வாழ்ந்த கிதியோனைப் பார்த்து, கோதுமையை நல்ல வெளிச்சத்தில் போரடிக்க பயந்து, ஆலையின் மறைவில் போரடித்த கிதியோனைப் பார்த்து, கர்த்தர் பராக்கிரமசாலியே என்று அழைக்கிறார். தொடை நடுங்கிக் கொண்டு கோதுமையை போரடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து கர்த்தர், வீர தீரனே! தைரியசாலியே! வலிமையானவனே! துணிவுள்ளவனே! என்று அழைப்பதைப் போல் உள்ளது அல்லவா! ஆம்! நான் உபயோகப்படுத்தின இத்தனை வார்த்தைகளும் பராக்கிரமசாலி என்ற ஒரே வார்த்தையில் அடங்கும்!
நாம் அருகதையற்றவன் என்று நினைப்பவரிடம் கர்த்தர் திறமையைப் பார்க்கிறார். நாம் பயந்தவன் என்று நகைப்பவரிடம் கர்த்தர் தைரியத்தைப் பார்க்கிறார்.
அன்பு சகோதரனே! சகோதரியே! உன்னிடம் நீ காணாத ஒன்றைக் கர்த்தர் காண்கிறார். என்னிடம் ஒரு திறமையும் இல்லையே நான் என்ன செய்ய முடியும்? எதை சாதிக்க முடியும்? நான் ஒரு சாதாரணமானவன் என்று நினைப்பவரிடம் கர்த்தர் ஒரு சிறந்த ஊழியக்காரரைப் பார்க்கிறார்.
இன்று கர்த்தர் உன்னை ஒரு பராக்கிரமசாலியாகக் காண்கிறார்! சாக்கு போக்கு சொல்லாதே! உன்னையும் தேவனால் வல்லமையாக உபயோகப்படுத்த முடியும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
God uses ordinary people for His extraordinary purposes. We should be available to His ministry at all odds. God Bless.