மலர் 7 இதழ்: 489 நேரத்தையும் ஆறுதலையும் கொடுத்த நட்பு!

நியாதிபதிகள்: 11:38  “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,”

யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம்.

அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே இருண்டு போன வேளையில், அவள் சில மாதங்கள் தன்னுடைய தோழிமார்களுடன் செலவிட விரும்பினாள் என்று பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்! ஒருவேளை, இரண்டு மாதங்களில் மரிக்கப்போகும் ஒரு நண்பர் உங்களிடம் வந்து, அந்த இரண்டு மாதங்களும் நீங்கள் அவரோடு செலவிட வேண்டும் என்று விரும்பினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? எப்படி அதிலிருந்து தப்பலாம் என்றுதானே வழியைத் தேடுவீர்கள். எனக்கு எங்கே லீவு கிடைக்கும்? என் குடும்பத்தை விட்டு விட்டு எப்படி இரண்டு மாதங்கள் வர முடியும்? என்றெல்லாம் பதில் சொல்லுவீர்கள் அல்லவா!

இந்தக் கேள்வியை என்னிடமும் நான் கேட்டேன்! மற்றவர்களுக்காக என்னுடைய வேலையை நான் தள்ளி வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று உணர்ந்தேன். ஐயோ எனக்கு நேரமே இல்லையே, நான் வீட்டுக்கு வரவே லேட் ஆகிவிடுகிறது, இதற்கு பின்னால் யாரைப்போய் பார்ப்பது? எனக்கு உடம்பு சரியில்லை , போன்ற பல பல காரணங்கள் கொடுத்திருக்கிறேன். இவை பொய்யான காரணங்கள் இல்லை! உண்மைகள்தான்! ஆனாலும், மற்றவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய என்னால் நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்பதும் உண்மையே!

யெப்தாவின் மகளின் விஷயத்தில் எந்த தோழியும் என்னால் இரண்டு மாதங்கள் உனக்காக ஒதுக்க முடியாது என்று சொன்னதாக வேதம் கூறவில்லை. அவளுடைய தோழிகள் அவளுடைய துக்கத்தை, பகிர்ந்து கொள்ள முன் வந்தனர் என்று பார்க்கிறோம்.

இதை எழுதும்போது புற்று நோயினால் மரித்துப்போன எங்கள் அன்பு சகோதரி ஜினின் ஞாபகம் தான் வருகிறது. எங்களுடைய ஊழியத்தை அதிகமாக நேசித்த சகோதரி அவர்கள். கலிபோர்னியாவில் எங்களுடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். புற்றுநோய் அதிகமாகி, அவர்கள் வலியில் துடித்த சமயத்தில், எங்கள் நிறுவனத்தின் தலைவரின் மனைவி, தினமும் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களுடைய வேலைகளை செய்து கொடுப்பார்கள். வேலை என்று நான் சொன்னது, வீட்டை சுத்தம் பண்ணுவது, துணிகளை மிஷினில் போட்டு துவைப்பது போன்ற வேலைகளைத்தான். தன்னுடைய குடும்பத்தின் வேலைகளையும் செய்துவிட்டு, தன்னுடைய சரீர பெலவீனத்தையும், தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல், தான் ஜினின் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரின் மனைவி என்று நினைக்காமல், அவர்கள் ஜினின் மரிக்கும் வரை தினமும் உதவி செய்தார்கள்.ஜினின் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தபோதும் அருகிலேயே இருந்தார்கள்.

யெப்தாவின் மகள் தன் தோழிகளிடம் இரண்டு மாதங்கள் கேட்டாள். என்னிடம் யாரும் இதுவரை இரண்டு மாதங்கள் கேட்கவில்லை. ஆனால் நான் ஒருமணி நேரம் யாருக்காவது கொடுத்தால் கூட எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

நீங்கள் எப்படி? இன்று யாருக்காவது போன் பண்ணி நீங்கள் அவர்களுக்காக ஜெபிக்கிறீர்கள் என்று சொல்ல நேரம் எடுப்பீர்களா? ஒருநாள் வந்து எனக்காக ஜெபிக்கக்கூடாதா என்று அடிக்கடி கேட்கும் நண்பரின் வீட்டுக்கு போக இன்று நேரத்தை ஒதுக்குவீர்களா?

நீங்களும் நானும் என்றுமே மற்றவர்களுக்காக நேரத்தை ஒதுக்கத் தயங்கக் கூடாது. அது ஒருமணி நேர ஜெபமாக இருக்கலாம் அல்லது இரண்டு மாத உதவியாக இருக்கலாம், அல்லது நம் வாழ்நாள் முழுவதும் நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்கலாம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s