நியாதிபதிகள்: 16: 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
தெலீலாளின் மடியில் நித்திரை அடைந்த சிம்சோன் தூக்கத்திலிருந்து எழுந்த போது , நம் வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை நாம் நம் கண்களின் இச்சையின்படி எடுப்போமானால் என்ன நடக்கும் என்று மட்டும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது!
அவன் தெலீலாளின் பிடியில் இருந்தபோது மூன்று காரியங்கள் நடந்தது என்று நாம் இன்றைய வேதாகமப்பகுதியில் காண்கிறோம்.
முதலாவது அவன் கண்கள் பிடுங்கப்பட்டன.
அவன் தன் கண்களுக்குப் பிரியமானவைகளை இச்சித்ததாலேயே அவன் தேவனுடைய சித்தத்தைவிட்டு விலகி திம்னாத்தின் பெண்ணை மணந்தான் என்று நாம் பார்த்தோம். கண்கள் இச்சித்ததை நோக்கி அவன் கால்கள் பின்சென்றன. அவன் வாழ்க்கையே அவன் கண்களை திருப்தி படுத்துவதாகவே அமைந்தது. அவனுடைய ஆவிக்குரிய கண்கள் குருடாயிருந்ததால், அவன் தன் சரீர கண்கள் போன போக்கிலே கர்த்தரால் தடை செய்யப்பட்ட சோரேக் பள்ளத்தாக்கில் தெலீலாளின் மடியில் வந்து சேர்ந்தான். இப்பொழுது தெலீலாளின் மடியில் அவனுடைய ஆவிக்குரிய கண்கள் மட்டுமல்ல சரீரக்கண்கள் கூட பிடுங்கப்பட்டன!
இரண்டாவது அவன் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டான்.
நியா:16:1 ல் சிம்சோன் காசாவுக்கு தன் சுய இஷ்டமாகச் சென்று அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான் என்று வாசிக்கிறோம். ஆனால் அதே அதிகாரம் 21 ம் வசனத்தில் பலமிழந்த, கண்களை இழந்த சிம்சோனை பெலிஸ்தர் காசாவுக்குள் கொண்டு சென்றனர் என்று வாசிக்கிறோம். போனதடவை காசாவிலிருந்து புறப்பட்டபோது பட்டணத்து வாசல் கதவுகளையும், அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடே கூடப் பேர்த்து, தன் தோளின்மேல் வைத்து எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிவரை கொண்டுசென்றான் என்று பார்த்தோம் அல்லவா? ஆனால் இப்பொழுது கர்த்தர் தனக்கு கொடுத்த அந்த வல்லமையை இழக்க தானே காரணமான சிம்சோன் பெலிஸ்தரால் காசாவுக்குள் கொண்டு செல்லப்படுகிறான்.
மூன்றாவதாக, அவனை இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
எத்தனை சுதந்தரமாக அலைந்தவன்! எத்தனை பெண்களுடன் இச்சையென்னும் கட்டுகளால் கட்டப்பட்டவன்! இன்று மாவரைக்கும் இயந்திரத்துடன் சங்கிலிகளால் கட்டப் பட்டிருக்கிறான். அவனுடைய சுதந்தரம் பறிபோய் விட்டது! தன்னை அழைத்த தன் தேவனாகிய கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றும் சுதந்தரம் கூட இல்லை!
நம்மில் அநேகரைப் போல வாழ்க்கையின் தரை மட்டத்துக்கே வந்தபின்னர் சிம்சோன் தன் வாழ்வில் தான் இழந்துபோன சுதந்தரத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.
அடுத்தவனுடைய மனைவிமேல் தன் கண்களை திருப்பியதால் கர்த்தருடைய வழிகளில் நடக்கும்போது கிடைக்கும் சுதந்தரத்தை இழந்துபோன தாவீது சங்கீதம் 119: 44,45 ல்
” நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.”
என்பதைப் பார்க்கிறோம்.
கலாத்தியர்: 5: 1 ல், பவுல் “ ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்” என்றார்.
சிம்சோன் தான் பெலிஸ்தரின் அடிமைத்தனமாகிய நுகத்தடியின் அடியில் தன் கண்களை மாத்திரம் அல்ல தன் இருதயத்தையும் திறந்து தேவனாகிய கர்த்தரை நோக்கினான்.
இன்று நீ பெலிஸ்தரின் அடிமைத்தனமாகிய நுகத்தடியின் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பாயானால் , கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உனக்கு கொடுக்கும் சுதந்தர வாழ்க்கைக்கு உன்னை அழைக்கிறேன்!
‘ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.(யோவான்: 8:36)
அடிமைத்தனமில்லை! சங்கிலிகள் இல்லை! நுகத்தடி இல்லை! குருட்டுத்தனம் இல்லை!
ஒருநாள் நான் தொலைந்த ஆட்டைப்போல் இருந்தேன்! இயேசு கிறிஸ்து என்னைத் தேடி கண்டுப்பிடித்தார்!
ஒருநாள் நான் குருடாயிருந்தேன்! கர்த்தராகிய இயேசு எனக்குப் பார்வையளித்தார்.
நான் பெற்ற சுதந்தர வாழ்க்கைக்கு கிறிஸ்து இயேசு உங்களையும் அழைக்கிறார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்