மலர் 7 இதழ்: 520 உடைந்து போன கனவுகளா?

ரூத்: 1 : 3  ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.”

அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக்குத் தன் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம். அவன் கண்களில் அக்கரை பச்சையாகத் தோன்றியது.

சில வேதாகம வல்லுநர்களின் கணிப்பில் அவர்கள் அங்கேயே குறைந்தது 10 வருடங்கள் தங்கியிருக்கக்கூடும் என்று பார்க்கிறோம். 10 வருடங்கள் என்பது ஒரு குடும்பம் அந்த ஊரில் வசதியாக வாழத்தொடங்க போதுமானது அல்லவா! ஆரம்பகாலத்தில் ஒருவேளை மோவாப் , அவனுடைய எதிர்பார்ப்புக்கும் மேலாக மிகவும் திருப்தி படுத்தியிருக்கலாம்.

ஆனால்….  ஒருநாள்…. நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான். வேதத்தில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் என் மனதைத் தொட்டன!

நகோமி வாழ்ந்த இந்தக்கால கட்டத்தில் எல்லா முடிவுகளும் ஆண்களால் எடுக்கப்பட்டவை என்று நமக்கு நன்கு தெரியும். பெண்களுடைய வார்த்தைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கப்படவில்லை. மோவாபுக்கு செல்லும் முடிவைக்கூட எலிமெலேக்குத்தான் எடுத்திருப்பான்.   எல்லா சொத்து விவரங்களும் ஆண்கள் பெயரிலேயே இருந்தன. நகோமியின்  கணவன் இறந்தவுடன் அவளுக்கு அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது.

ஒரு அழகியத் துணி கிழிந்து போய் ஒரு சிறியத் துண்டு மாத்திரம் மிஞ்சியிருந்ததைப் போல அவளுடைய வாழ்க்கை உருமாறிப்போயிற்று. எஞ்சிய சிறியத் துண்டு போல எலிமெலேக்கின் இரண்டு பிள்ளைகள் மாத்திரம் அவளுக்கு இருந்தனர். பெத்லெகேமை விட்டுப் புறப்பட்ட போது நிச்சயமாக இதை அவள்  எதிர்பார்க்கவில்லை. மற்ற எல்லாப் பெண்களையும் போல வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகளோடுதான் அவள் தன் கணவனோடு புறப்பட்டு வந்தாள்.

ஆனால் நகோமி வெளிநாட்டில் வாழும் ஒரு விதவைப் பெண்ணானாள்.  என்ன ஏமாற்றம்! வாழ்க்கையில் அவளுடைய எதிர்பார்ப்புகள் ஒன்றுமே நிறைவேறவில்லை, அவளுடைய கனவுகள் பொடிபொடியாக நொறுங்கிப்போயின.  கணவனை இழந்தாள், அவள் வாழ்க்கை ஒரு கிழிந்த துணி போல ஆயிற்று! கையிலே இரண்டு பிள்ளைகளைத் தவிர எதுவுமே எஞ்சவில்லை!

என்னுடைய வாழ்விலும் ஒரே ஏமாற்றங்கள்தான்! என் கனவுகள் கனவுகளாகவே போய்விட்டன! என் எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறவில்லை! என்று உன் உள்மனதில் வேதனையின் குரல் கேட்கிறதா?

நகோமித் தன் கணவனை வெளிநாட்டு மண்ணில் புதைத்த அன்றைய தினம் அவளுக்கு  தேவனாகிய கர்த்தர் அவளுடைய வாழ்க்கையில் வைத்திருந்த அற்புதமான திட்டத்தைப்பற்றி எதுவுமேத் தெரியாது.ஏமாற்றம் என்ற திரைக்குப் பின்பு கர்த்தர் கிரியை செய்தார்! அவளுடைய தனிமை அவளை வதைத்தபோது, ஏமாற்றம் என்பது பனியைப் போல வந்து அவள்மேல் பாரமாக இறங்கியபோது, கர்த்தர் அவளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க கிரியை செய்து கொண்டிருந்தார்.

இன்று உன் வாழ்வு மோவாபைப் போல ஏமாற்றங்களையும், தனிமையையும், நொருங்கிப்போன கனவுகளையும், நிறைவேறாத
ஆசைகளையும் கொண்டிருக்கிறதா?

நகோமியை நினைவுகூர்!  ஏமாற்றத்தின் மத்தியில், பொடிப்பொடியானக் கனவுகளுக்கு மத்தியில், கர்த்தர் அவளை அப்பத்தின்வீடாகிய பெத்லெகேமுக்கு கொண்டு செல்ல வழியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்! இந்த மகா பெரிய அற்புதத்தை இன்று உன் வாழ்க்கையிலும் செய்து கொண்டிருக்கிறார்! விசுவாசி!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்
 

Advertisements