மலர் 7 இதழ்: 521 மேக மந்தாரத்திற்கு பின்னால் வரும் வானவில்!

ரூத்: 1: 3 – 5 ” நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்து போனான்;அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்.

இவர்கள் மோவாபியரில் பெண் கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம் பண்ணினார்கள்.

பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள்.

எலிமெலேக்கு என்னும் எப்பிராத்தான், அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது, தன் மனைவியையும், இரு குமாரரையும் கூட்டிக்கொண்டு மோவாபை நோக்கி சென்றான் என்று பார்த்தோம்.

கனவுகளோடு, எதிர்பார்ப்புகளோடு தன் கணவனோடும், இரு பிள்ளைகளோடும் மோவாபை நோக்கி சென்ற நகோமிக்கு அங்கே வரப்போகும் எதிர்பாராத சம்பவங்களைக் குறித்து சற்றுகூடத் தெரியாது.

மோவாபில் நகோமியின் கணவனாகிய எலிமெலேக்கு மரித்தான், பின்னர் அந்த மோவாபிய தேசத்துப் பெண்களைத் திருமணம் செய்திருந்த அவளுடைய இரு குமாரரும் மரித்தார்கள். எத்தனை சோகம் பாருங்கள்! குறுகிய காலத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று விதவைகளைப் பார்க்கிறோம்.

நகோமி தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள் என்று வேதம் கூறுகிறது. இழந்து என்ற வார்த்தையை கவனியுங்கள்! இழப்பு என்பது நம் வாழ்க்கையில் மரணத்தின் மூலம் வரும் பிரிவு மட்டும்  இல்லை. நாம் ஒவ்வொருவரும், வெவ்வேறு காலகட்டத்தில் நாம் விரும்பிய ஏதோ ஒன்றை இழந்திருக்கிறோம்!

நம்மில் அநேகர் பிள்ளைகளின் அன்பை இழந்திருக்கிறோம், பாதுகாப்பை இழந்திருக்கிறோம், திருமண உறவை இழந்திருக்கிறோம், நம்முடைய கனவு வாழ்க்கையை இழந்திருக்கிறோம், சொத்து சுகங்களை இழந்திருக்கிறோம்.

ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல!  பத்து வருடங்கள் சோகமும், துக்கமும், தனிமையும்,  நகோமியின் வாழ்க்கையை வதைத்தது. தன் தகப்பனை விட்டு தூர தேசத்துக்கு சென்ற இளைய குமாரன், எல்லாவற்றையும் இழந்த பின்னர், தன் தகப்பன் வீட்டை நினைவு கூர்ந்தது போல, அயல் நாட்டில் எல்லாவற்றையும் இழந்த பின், அவளுடைய தனிமையான வாழ்க்கை அவளை அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமை நினைவுகூற செய்தது. பெத்லெகேமிலே அவளுக்கு நண்பர்கள் உண்டு, உறவினர் உண்டு! பெத்லெகேமிலே சரீரத்திற்கு அப்பம் மட்டும் அல்ல ஆத்மீக அப்பமும் உண்டு!

தன் இழப்பை நினைத்து கண்ணீர் நகோமியின் கண்களில் பெருக்கெடுத்து ஓடியது. கண்ணீர் மழைபோல  சொரிந்த போது, அந்தக்கண்ணீரின் மத்தியில் ஒரு வானவில்லும் தோன்றிற்று!

தேவனுடைய பிள்ளைகளே இன்று உங்கள் வாழ்க்கையிலும் எதையோ இழந்து நீங்கள் பரிதபித்துக் கொண்டிருக்கலாம். என் கண்ணீரைக் கர்த்தர் பார்க்கிறாரா என்று வேதனையின் மத்தியில் புலம்பிக் கொண்டிருக்கலாம். சங்கீதம் 30: 5 கூறுகிறது, ” சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்தில் களிப்புண்டாகும்” என்று.

இன்று ஒருவேளை உங்களுடைய வாழ்வில் மேகமும், மந்தாரமும் காணப்படலாம், ஆனால் அந்த வாழ்வின் மத்தியில் தான் அழகிய வானவில் உருவாகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s