ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “
சில நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டை சுத்தம் பண்ண ஆரம்பித்தேன். சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே வீட்டில் தேவையில்லாதவைகள் சேர்ந்துவிடுகின்றன. அடுக்கடுக்கான செய்தி தாள்கள் , அப்புறம் படிக்கலாம் என்று சேர்த்து வைத்த மாத இதழ்கள், முக்கியமானவைகள் என்று சேர்த்து வைத்த பலவிதமான விளம்பரங்கள் என்று கழித்துக்கட்ட வேண்டியவை அநேகம் இருந்தன.
தேவையில்லாத பேப்பர்களை கிழித்துக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட ஒரு சிறிய நாள்குறிப்பில் நான் பல வருடங்களுக்கு முன்பு போட்ட பலத் திட்டங்கள் கண்ணில் பட்டது.
அப்பொழுதெல்லாம் என் வாழ்க்கையைக்குறித்த குறுகிய காலத் திட்டம், நெடுங்காலத் திட்டம் என்று நான் கிறுக்குவதுண்டு. ஆனால் நான் கனவிலும் நினைக்காத கடுங்காற்றும், பூமியதிர்ச்சிகளும், அக்கினிகளும் கூட என் வாழ்க்கையில் இடம் பெற்றிருந்தன! இவைகள் என் திட்டத்தில் இடம் பெறவில்லை ஆனால் வாழ்க்கையில் இடம் பெற்றன. இன்று அவைகளைத் திரும்பிப் பார்க்கும்போது அவை என்னைத் தேவனண்டை மிக நெருக்கமாய் கொண்டு வந்ததைத்தான் உணர முடிந்தது! அவருடைய அன்பையும், பிரசன்னத்தையும், அவருடைய மெல்லிய சத்தத்தையும் அனுபவிக்க செய்தவை அந்த பூமியதிர்ச்சி அனுபவங்கள் தான்!
நகோமியும், எலிமெலேக்கும் தாங்கள் வாழ்ந்த ஊராகிய பெத்லெகேமை விட்டு புறப்பட்டு மோவாபை நோக்கி சென்றபோது அவர்கள் அமைத்த திட்டத்தில் அவர்களுக்கு மோவாபில் நடந்த எதுவுமே இடம் பெறவில்லை. இப்பொழுது பத்து வருடங்களுக்கு பின்னால் நகோமியைத் தவிர யாருமே உயிருடன் இல்லை. யார் இப்படி நடக்கும் என்று நினைத்திருப்பார்கள்! நகோமி இப்பொழுது பெத்லெகேமுக்கு திரும்பிச் செல்ல புறப்பட்டபோது அவள் கணவனும் கூட இல்லை! அவள் பிள்ளைகளும் கூட இல்லை! அவளுடன் இருந்தது இரண்டு மோவாபிய மருமகள்மார் மட்டுமே!
இத்தனை இடிகளும் நகோமியின் தலையில் விழுந்தபோதிலும், கர்த்தர் அவளுடைய மோசமான வாழ்க்கையின் சூழலை உபயோகப்படுத்தி அவளை பரலோக இன்பத்துக்குள் வழிநடத்துவதைப் பாருங்கள்! அவள் வாழ்க்கையில் மரணம் என்ற அலைகள் ஒவ்வொருமுறையும் வந்து அவள் நேசித்த அவள் கணவனையும், இரு குமாரரையும் அவளிடமிருந்து பிரித்த போது, தேவனாகிய கர்த்தரின் கால்த்தடமும் அவள் சென்ற பாதையில் பதிந்திருந்தன!
கர்த்தர் நம்முடைய வாழ்விலும் நேரிடும் கடினமான சூழ்நிலைகளையும், நம்முடையத் தோல்விகளையும் உபயோகப்படுத்தி நம்மை பரலோகப் பாதையில் வழிநடத்துவார். நாம் செல்லும் பாதை ஒரு புதிராக இருக்கலாம்! ஆனால் அவை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்காக அமைத்திருக்கும் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது! அதன் முடிவில்தான் உனக்கு அது தெரியும்!
தேவனுடையப் பாதையில் செல்லத் தெரிந்து கொண்ட நகோமியின் வாழ்வில் கர்த்தர் அவளுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றவில்லை அதற்கும் அப்பாற்பட்டவைகளையும் நிறைவேற்றினார்.
நீ கடந்து வரும் கடினமானப் பாதை தேவன் உனக்காக திட்டமிட்ட பாதை என்று விசுவாசி! நீ விசுவாசித்தால் தேவனுடைய நோக்கம் உனக்கு புலப்படும்! தேவனுடைய நோக்கம் புலப்படும்போது நீ அவரைக் கிட்டி சேர்ந்து அவரை அணைத்துக் கொள்வாய்!
அனுபவம் நிறைந்த ஒரு வில்வித்தைக்காரன் எய்யும் அம்பு, அவன் எய்த நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பாது! உன் வாழ்க்கையும் அப்படித்தான்! நீ உருவாக்கப்பட்டதே தேவனுடைய நோக்கம் உன்னில் நிறைவேறுவதற்காகத்தான்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்