ரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “
இன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன!
“நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது!
நம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்!
நாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால் பிரசிங்கிப்பதை நிச்சயமாக விசுவாசிப்பார்கள்! “
ஒரு நிமிடம் என்னோடு கூட நகோமியின் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்.
முதலாவதாக, நகோமியின் மகன் இருவரும் யூதகுலத்துப் பெண்களை மணக்கவில்லை. அவர்கள் மணந்தது புறஜாதியினர் என்று யூதரால் ஒதுக்கப்பட்ட மோவாபியப் பெண்கள். இன்றைய முறையில் சொல்வோமானால் அவர்கள் இருவரும் அவிசுவாசிகள்
தெரிந்து கொள்ளப்பட்ட ஜனத்தையும், கோத்திரத்தையும் சேராதவர்களை பெத்லேகேம் ஊரார் ஒருவேளை ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால் நகோமி தன் மருமக்களை நோக்கி பெத்லெகேமுக்கு போகலாம் என்றவுடனே அவர்கள் இருவரும் அவள் சொல்லுக்கு கீழ்ப்படிந்தனர் என்று பார்க்கிறோம்.
இந்த இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கையிலும் இது எத்தனை முக்கியமான முடிவு என்று பாருங்கள்! அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு, தங்கள் உறவினரை விட்டு, நண்பர்களை விட்டு, தங்களுடைய பண்பாடுகளையும், பாரம்பரியங்களையும் விட்டு, முன் பின் தெரியாத யூதருடைய நாட்டுக்கு, மோவாபியராகியத் தங்களைப் புறஜாதியார் என்று கீழ்த்தரமாய் நோக்குகிற மக்களண்டைக்கு போகப் புறப்பட்டனர்.
இந்த முடிவை அவர்கள் எப்படி எடுத்தனர்? யாரோ பெரிய ஊழியக்காரரின் பிரசங்கம் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டார்களா? பெரிய கன்வென்ஷன் கூட்டத்துக்கு போய் கைத்தூக்கி ஒப்புக்கொடுத்தார்களா? இல்லவே இல்லை! தங்களுடைய அருமை மாமியார் நகோமியின் வாழ்க்கையே அவர்களுக்கு பிரசங்கமாய் அமைந்திருந்தது! அவள் பிரதிபலித்த அன்பு, தயவு , பண்பு இவைகள் நிறைந்த வாழ்க்கை, அவர்களை நகோமியண்டைமட்டும் அல்ல, அவளுடைய தேவனிடத்திலும் கிட்டி சேரச் செய்தது.
சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்பவர்கள், மற்றவர்கள் பாவிகள் நாங்கள் தான் நீதிமான் என்று பேசிவிட்டு பின்னர் அதற்கு எதிர்மாராக வாழ்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவர்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னால் எப்படி சாட்சியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்.
ஆனால் நகோமியின் வாழ்க்கை மோவாபியரான தன் மருமக்களுக்கு முன்பு ஒரு பிரசங்கமாகவே அமைந்திருந்தது. அவளுடைய மலர்த் தோட்டத்தில் மலர்கள் இருந்தன! அவற்றில் நறுமணம் இருந்தது! அவள் விதைத்த அன்பு, தயவு என்ற விதைகள் அவளுடைய நன்னடத்தை என்ற நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று, பத்தும் நூறுமாய் பலன் கொடுத்தன.
அன்பும் தயவும் மற்றவர்களை தன்னிடமாய் இழுக்கும் என்று உணர்ந்திருந்த இந்த மாமியார் மோவாபை விட்டுப் புறப்பட்டு பெத்லெகேமுக்கு திரும்பிய போது தனித்து செல்ல நேரிடவில்லை! அவளுடைய மருமக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டு அவளோடு புறப்பட்டு சென்றனர்.
இன்று நம்முடைய வாழ்க்கை நம் குடும்பத்தினருக்கு ஒரு பிரசங்கமாக இருக்கிறதா? அல்லது மாய்மாலமாக இருக்கிறதா?
கர்த்தராகிய இயேசுவே நாங்கள் உம்மைப் பிரசங்கிக்க உதவி தாரும் ஆனால் வெறு வார்த்தைகளால் அல்ல எங்கள் வாழ்க்கையின் மூலமாகவும், எங்கள் சாட்சியின் மூலமாகவும்…. என்று ஜெபித்த அன்னை தெரெசாவின் ஜெபம் இன்று நம்முடையதாகட்டும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்