ரூத்: 1: 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரித்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் நகோமியிடம் கூறிய இந்த வார்த்தைகளை நான் வாசித்த போது, ஒருகணம் நான் நகோமியின் திகைப்பைக் கற்பனைப் பண்ணிப் பார்த்தேன்.
அயல்நாட்டில், பிழைப்பைத்தேடி சென்ற இடத்தில் கணவனையும், இரு குமாரரையும் இழந்த ஒரு விதவை. இப்பொழுது எல்லாவற்றையும் இழந்த பின்னர் பத்து வருடங்களுக்கு முன் விட்டு வந்த தாய் நாட்டுக்கு திரும்பும் போது , அவளுடைய மோவாபிய மருமகள் தன் இரு கரங்களால் அவளை அணைத்து, தன்னுடைய அன்பை மரணம் கூட பிரிக்க முடியாது என்றபோது நகோமியின் முகம் எப்படி பிரகாசித்திருக்கும்! உள்ளம் எப்படி சந்தோஷப்பட்டிருக்கும்!
நகோமி தன்னுடைய பரலோகத் தகப்பனாகிய தேவனுடைய அன்பைத் தன் வாழ்வில் பிரதிபலித்ததைக் கண்ட ரூத் , அவள் மாமியார் மீது அன்பு செலுத்த ஆரம்பித்தாள். அன்பினால் கட்டப்பட்ட அவர்களை மரணம் கூட பிரிக்க முடியாது என்று திட்டமாகக் கூறினாள்.
இத்தகைய அன்பைத் தான் நம்முடைய பரலோகத் தகப்பன் நம் உள்ளத்திலும் விதைத்து, நீர் பாய்ச்சி, வளரச் செய்கிறார். நாம் அவரில் நிலைத்திருக்கும் போது, கர்த்தர் தம்முடைய விலையேறப்பெற்ற அன்பை நமக்குள் விளங்கப் பண்ணுகிறார்.
நம் வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும், சாத்தான் எத்தனை கண்ணிகள் நமக்கு வைத்தாலும், நம்மை கர்த்தருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாது, ஏனெனில் கர்த்தர் நம்மை அளவில்லாமல் நேசிக்கிறார்.
ரோமர் : 8: 36 – 39 ல் பவுல், நம்மை வெளியரங்கமாய்த் தாக்கும் சோதனைகளோ அல்லது உள்ளத்தில் தாக்கும் வேதனையோ எதுவுமே கர்த்தரின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க இயலாது என்பதை இவ்விதமாக விளக்குகிறார்.
” கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவம்ஓ, வியாகுலமோ,துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாச மோசமோ, பட்டயமோ?
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும்,வருங்காரியங்களானாலும்,
உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு, தம்முடைய அன்பினால் என்னைக் கண்டெடுத்ததால், அன்பின் கரம் நீட்டி என்னை இரட்சித்ததால், நான் இன்று அவரை என் முழு உள்ளத்தாலும் நேசிக்கிறேன்!
இப்படிப்பட்ட அன்பை உன் வாழ்க்கையில் நீ விரும்புகிறாயா? வானத்துக்கும், பூமிக்கும் தேவனானவரை உள்ளத்தின் ஆழத்திருந்து நேசிக்கும் அன்பு! கஷ்ட நஷ்டங்களால், அக்கினியால், சோதனைகளால் பிரிக்க முடியாத அன்பு! மரணத்தாலும் பிரிக்க முடியாத அன்பு!
இன்று ரூத், நகோமியைப் பார்த்துக் கூறியது போல நீங்களும், நானும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப்பார்த்து, நமக்காகத் தன் ஜீவனையே ஜீவ பலியாக சிலுவையில் ஈந்தவரைப் பார்த்து, அப்பா நான் உம்மை நேசிக்கிறேன், மரணம் உட்பட எதுவுமே என்னை உம்மைவிட்டுப் பிரிக்க முடியாது, என்று கூறமுடியுமா?
கர்த்தர் உன்னிடம் அன்பை மட்டுமே எதிரபார்க்கிறார்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
I like it