ரூத்: 1:18 “அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.”
நான் சிறியவளாக இருந்தபோது யாரோ ஒருவர் மூலமாக நான் கற்றுக்கொண்ட ” நமக்கு கர்த்தர் ஒரு வாயும், இரண்டு செவிகளும் கொடுத்திருப்பது நாம் குறைவாய் பேசவும், நிறைய கேட்கவும் தான்” என்ற பேருண்மை என் மனதில் என்றும் தங்கி விட்டது.
என்னுடைய வாழ்நாளில் இந்த உண்மை என்னை பல இக்கட்டான சம்பவங்களில் காப்பாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடன் வேலை செய்த பெண்களின் துன்பங்களுக்கு செவிசாய்க்கவும் அதிகமாக உதவியிருக்கிறது. அவர்கள் மனந்திறந்து பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருப்பதே அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நம்முடைய சமுதாயத்தில் குறைகளை செவிசாய்த்து கேட்பவர்கள் மிகவும் குறைவு பட்டு விட்டனர். எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் தன்னிடம் வரும் நோயாளிகளோடு பேசவே மாட்டார். அவர்களே தங்கள் குறைகளைத் தங்கள் வாயால் சொல்லி முடிக்கும்வரை அமைதியாகக் காத்திருப்பார். அவர்கள் கூறி முடித்தபின் தனக்கு வேண்டிய அதிகமான கேள்விகளைக் கேட்பார். முதலில் அவர்களுக்கு அமைதியாக செவிசாய்த்ததால் பின்னர் அவரோடு பேச அவர்களும் கஷ்டப்படுவதில்லை.
ரூத் முதலாம் அதிகாரத்தில் நாம் நகோமி ரூத்தைப் பார்த்துத் தன் சொந்த தேசமாகிய மோவாபுக்கு திரும்பிப்போகும்படி பலதடவைக் கூறுகிறதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் நகோமி பேசுவதை நிறுத்திவிட்டு ரூத்துக்கு செவிசாய்க்க ஆரம்பித்தாள். இந்த இடத்தில் நகோமி என்ற தாய் தான் பேசாமல் அமைதியாக இருப்பதே நலம் என்று உணர்ந்தாள்.
நகோமியிடம் நாம் பார்க்கும் இந்த குணநலன் இன்று நம்மிடம் காணப்படுகிறதா? நம்முடைய மன வருத்தங்களை நாம் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் நமக்கு செவிகொடுத்தால் நமக்கு எவ்விதமான நிம்மதி கிடைக்கிறது? நாம் மற்றவர்களுடைய துன்பங்களுக்கு செவிசாய்க்கிறோமா?
நம்முடைய மனதின் பாரங்களுக்கு செவிசாய்க்கும் நல்ல நண்பராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். அவரிடம் பேசும்போது நம் பாரத்தை இறக்கிவிட்டது போல இருக்கிறது அல்லவா? கர்த்தராகிய இயேசுவைப் போல, நகோமி என்ற தாயைப் போல நாமும் நம் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் செவி சாய்த்து அவர்களுடைய தேவைகளை நிவிர்த்தி செய்ய கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக!
குறைகளுக்கு செவிசாய்ப்பதும், மற்றோரின் மனதின் காயங்களை கட்டுவதும் கர்த்தர் கொடுக்கும் ஒரு ஈவு!
அன்பு செலுத்துதலின் முதல் கடமை செவி கொடுப்பது!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்