1 சாமுவேல்:2:26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ பெரியவனாக வளர்ந்து கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்து கொண்டான்.
1 சாமுவேல் 3:10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்கு சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
ஒருநாள் நான் ஒரு அமைதியான புல் வெளியில் அமர்ந்து சிறு பிள்ளைகள் விளையடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இளம் தாய்மார்கள் தங்கள் சிறு குழந்தைகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடந்தனர். என் மனக்கண்களில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அழகிய புல்வெளியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அன்று அந்த அழகிய சூழலில் பல இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கர்த்தராகிய இயேசு ஆசீர்வதிக்கும்படியாக அவரிடம் கொண்டு வந்தனர்.
அங்கிருந்த சீஷர்களோ, அழும் குழந்தைகளும், நெருக்கும் தாய்மார்களும் கர்த்தராகிய இயேசுவுக்கு தொந்தரவாக இருக்கும் என எண்ணி அவர்களை அப்புறப்படுத்தத் துவங்கினர். ஆனால் கிறிஸ்து இயேசுவோ பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றார்.(மத்:19:14)
நாம் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். அன்னாளும் சாமுவேலும் வாழ்ந்த காலத்துக்கு செல்வோம். அன்று பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எந்த மதிப்பும் சமுதாயத்தில் இல்லை, சொத்தில் பங்கு இல்லை! இஸ்ரவேல் மக்களின் தொகை எண்ணப்பட்ட போது பெண்களும், சிறுவர்களும் எண்ணப்படவில்லை! முதல் பிள்ளையாயிருந்தாலொழிய மற்ற சிறுவர்கள் வளரும் பொழுது கூட எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை!
அப்படிப்பட்ட காலகட்டத்தில், பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஆசாரியனான ஏலியிடம், தமக்கு உகந்த ஒரு தாசனை, இஸ்ரவேலின் தீர்க்கதரிசியை, தாம் தெரிந்து கொள்ள ஒரு சிறுவனைத் தேர்ந்து எடுத்திருப்பதாகக் கூறினார்.
அப்படியே தேவனாகியக் கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட குழந்தை தாசனிடம் நள்ளிரவில் பேசி, அவனைத் தம்முடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டு உலகத்துக்கு எடுத்துரைக்கும் உன்னத பணிக்கு அழைத்திருப்பதாக எடுத்துரைந்தார். அதற்கு சாமுவேல், கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்ற உத்தரவில் கர்த்தருடைய சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்தான் என்று பார்க்கிறோம். உலகத்தார் அனைவரும் தம்முடைய சுய விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டிருந்த அந்த இராத்திரியில் ஒரு சிறுவன் தேவனுடைய சத்தத்துக்கு செவி சாய்த்தான்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
அந்தத் தனிமையான இரவில்,பரலோக தேவனின் பிரசன்னத்தில்,அன்னாள் மூலமாய் பரலோகத்துக்கடுத்த காரியங்கள் விதைக்கப்பட்ட சின்ன சாமுவேல்,தன்னுடைய தாய்க்கு தேவன் கொடுத்த வாக்கு தன்னிடம் நிறைவேறுவதை உணர்ந்தவனாய்,தேவனுடைய சத்தத்துக்கு செவி கொடுத்தான்.
அன்னாள் சின்ன சாமுவேலின் உள்ளத்தில் விதைத்த விதை வீணாகவில்லை! நாம் நம்முடைய சிறு உள்ளங்களில் எதை விதைக்கிறோமோ அது ஆழமாக அவர்கள் உள்ளத்தில் வேரூன்றி விடும்!
இன்று உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப் பட்டிருக்கிறதா? உங்கள் பிள்ளைகளை எல்லாவித கலையிலும் தேர்ச்சி பெற செய்ய எத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்? ஆனால் அவர்கள் கர்த்தரின் வழிகளை அறிந்து கொள்ள, கர்த்தரின் வார்த்தைகளை கற்றுக்கொள்ள எத்தனை முயற்சி எடுக்கிறீர்கள்?
அன்னாளைப் போல பரலோகத்துக்கடுத்த காரியங்களை நம்முடைய பிள்ளைகளின் உள்ளத்தில் விதைப்போம்! அன்று கர்த்தரிடம் சிறு பிள்ளைகளைக் கொண்டு வந்த தாய்மார் போல நம்முடைய பிள்ளைகள் கர்த்தாகிய தேவனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று வாஞ்சிப்போம்!
இன்றிரவு கர்த்தர் உங்கள் பிள்ளையிடம் பேசுவாரானால், தன்னிடம் பேசுவதென்று யாரென்று உணர்ந்து, சொல்லும் கர்த்தாவே அடியேன் கேட்கிறேன், உம்முடைய சித்தத்தை செய்யக் காத்திருக்கிறேன் என்று கூறும் நிலையில் உங்கள் பிள்ளையை வளர்த்திருக்கிறீர்களா?
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்