1 சாமுவேல் 8:4-5 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்தில் வந்து,
இதோ நீர் முதிர்வயதுள்ளவரானீர். உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை. ஆகையால் சகல ஜாதிக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்றார்கள்.
சமீபத்தில் நான் பலகாரத்தை ஒரே மாதிரி வெட்டுகிற ஒரு பிளாஸ்டிக் உபகரணத்தை வாங்கினேன். அதற்குள் மாவை வைத்து அழுத்தினால் அது ஒரே மாதிரி, ஒரே டிசைனில் அந்த மாவை அழுத்திக் கொடுக்கும். இது ஒன்றும் புதிதானதல்ல, நாம் எப்பொழுதும் உபயோகப் படுத்தும் அச்சுதான்.
நாம் செய்யும் பலகாரம் ஒரே அளவில், ஒன்றைப் போலவே மற்றொன்றும் காணப்பட வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல, ஆனால் நம் வாழ்க்கையிலும் நாம் மற்றவர்களைப் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பது தவறு தானே!
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள் மற்றவர்களுடைய ஆடை, அலங்காரங்களைப் பார்த்து தானும் அப்படி மாற ஆசைப் படுகிறார்கள். ஒரே அச்சில் வார்த்த மாவு போல எல்லோரும் மற்றவர்களுடைய வழியில் செல்கிறார்கள்!
இந்த வேதாகமப் பகுதியில், இஸ்ரவேல் மக்கள் அந்தத் தவறைத்தான் செய்வதைக் காண்கிறோம். தங்களை சுற்றியுள்ள சகல நாடுகளையும் பார்த்து விட்டு தங்களுக்கும் அவர்களைப் போலவே ராஜா வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆனால் சாமுவேல் இப்படியாக மற்றவர்களைப் போல வாழ ஒருநாளும் ஆசைப்படவும் இல்லை, தன் வாழ்க்கையை மற்றவர்களைப் போன்ற செல்வாக்கு, விக்கிரக ஆராதனை, சிற்றின்பம் என்ற அச்சுக்குள் செலுத்தவும் இல்லை.
அன்றைய நாளில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கைத்தரம் சாமுவேலை ஒரு துளியும் மாற்றவில்லை. சிறு பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய தாய் அன்னாளால் கர்த்தருக்குள் வழிநடத்தப் பட்ட அவன், தன் முதிர் வயது வரை கர்த்தரின் உத்தம ஊழியனாகவே வாழ்ந்தான்.
சாமுவேலின் பிள்ளைகளோ உலகத்தார் போன அச்சுக்குள் தங்கள் வாழ்க்கையை செலுத்தி, தங்களுக்கு கர்த்தர் அளித்த நியாதிபதி என்ற உன்னத அந்தஸ்தைப் பயன் படுத்தி பணம் சம்பாதித்தனர்.
அவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து பார்த்த இஸ்ரவேல் புத்திரர், யோவேலையும், அபியாவையும் உதறித் தள்ளி விட்டு தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தும்படி சாமுவேலைக் கேட்டனர். கர்த்தரின் வழியை விட்டு விட்டு , உலகத்தார் போகும் பாதையில் செல்ல ஆசைப்பட்டனர் என்று பார்க்கிறோம்.
சரி, சரி! இஸ்ரவேல் புத்திரர் மேல் குற்றம் கண்டுபிடிக்கும் நாம் எத்தனைதரம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்திப்போம்!கர்த்தருடைய ஜனம் என்ற விசேஷமான அடையாளத்தை விட்டு விட்டு இஸ்ரவேல் புத்திரர் உலகத்தை பின்பற்ற விரும்பியது போல நாமும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தை உதறிவிட்டு உலகத்தை பின்பற்றுகிறோம் அல்லவா?
உலகத்துக்கு ஒத்த வேஷம் நாம் தரிக்கும்போது நாம் கிறீஸ்துவுக்குள் அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கை நமக்கே நன்கு தெரியும்.
எங்க ஆபீஸ்ல வேலை செய்யணும்னா இப்படிதாங்க வாழணும் என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது! உங்களுக்குத் தெரியுமா செத்த மீன் தான் எதிர்நீச்சல் அடிக்காது என்று!
இன்று உங்கள் நிலைமை என்ன?
கிறிஸ்துவுக்கு சாட்சியாக, அவருடைய பிள்ளை என்ற உயர்ந்த அடையாளத்தோடு தனித்து நிற்கும் துணிவு நமக்கு வேண்டும்! நாம் வேலை செய்கிற இடத்திலும், நம் குடும்பத்திலும், நாம் வாழும் சமுகத்திலும் சிறு சிறு காரியத்தில் கூட நாம் கிறிஸ்தவர் என்று உலகம் அறிந்து கொள்ள வேண்டும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்