1 சாமுவேல் 9:3,6 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற் போயிற்று.ஆகையால் கீச் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக் கொண்டு, கழுதைகளைத் தேட புறப்பட்டு சென்றான்.
அதற்கு அவன்: இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார். அவர் பெரியவர். அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும். அங்கே போவோம். ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
காணவில்லை! சவுல் வீட்டுக் கழுதைகளைக் காணவில்லை!
சவுலின் தகப்பனாகிய கீஸ் அவனை கழுதைகளைத் தேடும் பணியில் அனுப்புகிறான். பல நாட்கள் அலைந்து திரிந்து தேடிய பின்பு, அவற்றைக் காணாத சவுல் வீட்டுக்கு திரும்ப உத்தேசிக்கிறான். திடீரென்று அவனுடைய வேலைக்காரன், அந்தப் பகுதியில் கர்த்தருடைய மனிதன் ஒருவர் இருப்பதாகவும், அவரைக் கண்டால் ஒருவேளைக் கழுதைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகிறான்.
இதை வாசிக்கும் போது கழுதைகளைக் கண்டு பிடிக்கக் கூடவா ஒரு தேவனுடைய மனுஷனைத் தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் சட்டென்றுத் தோன்றியது.ஆனால் அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினர், காடு மேடெல்லாம் அலைந்தனர். கடைசியில் வேறு வழி தெரியாமல் தேவனுடைய மனிதனை நாடினர் என்று பார்க்கிறோம்.
நம்மில் அனேகரைப் போல நானும் ‘இந்த சிறு காரியத்துக்குக் கூடவா கடவுளைத் தொந்தரவு செய்வது’ என்று பலமுறை யோசித்திருக்கிறேன். காணாமற்போனது கழுதைகளாகட்டும், அல்லது வீட்டு சாவிக் கொத்தாகட்டும், இவ்வவளவு சிறிய காரியத்தைக் குறித்து அக்கறை கொள்ள தேவனாகிய கர்த்தர் என்ன அவ்வளவு சிறியவரா என்று யோசிக்கிறோம்!
இவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது,அலங்காரமான வார்த்தைகளால் எழுதப்படாத சில குறுகிய ஜெப விண்ணப்பங்களை என் கண்கள் புதிய ஏற்பாட்டில் கண்டது.
‘ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்’ மாற்கு 9:24
‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ மத்தேயு 14:30
‘ஆண்டவரே நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ லூக்கா 23:42
‘ஆண்டவரே … அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்’ யோவான்: 4:15
மிகக் குறுகிய வார்த்தைகளால் ஆன இந்த சாதாரண விண்ணப்பங்கள் நம்முடைய கர்த்தரின் செவிகளை எட்டாமல் போகவேயில்லை! நம்மைக் கவலைக்குள்ளாக்கும் எந்த சிறிய பிரச்சனையும் நம்முடைய கர்த்தரின் கண்களில் படாமல் போகாது.அது தப்பிப் போன கழுதைகளாகட்டும் அல்லது தவறிப் போன நம் மணி பர்சாகட்டும்.
சிறிய காரியமானாலும் ஜெபிப்பதில் தவறு இல்லை என்ற பெரிய பாடம் நமக்கு இன்று விளங்குகிறது!
சவுலும்,வேலைக்காரனும், காணாமற்போன கழுதைகளும் என்ர இந்தக் கதையில், சவுல் சாமுவேலை சந்திக்க சென்றதில் தேவனாகிய கர்த்தரின் இன்னொரு திட்டமும் இருந்தது என்று பார்க்கிறோம். சாமுவேலிடமிருந்து கர்த்தரின் பெரிய திட்டத்தை அறிந்து கொண்ட சவுல் கழுதைகளை மறந்தே போய்விட்டான். சாமுவேல் தான் கழுதைகள் கிடைத்து விட்டன என்று மலைத்துப் போன சவுலுக்கு சொல்ல வேண்டியிருந்தது!
ஒவ்வொருநாளும் தேவனுடைய சமுகத்தில் நம்முடைய பெரியதும், சிறியதுமான எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும் போது, அவர் எல்லாவற்றையும் தம்முடைய கரத்துக்குள் ஏந்தியிருக்கிறார் என்பது நமக்கு புரியும்கு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
மத்தேயு 4:17
[17]அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.