1 சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்.
சாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம்.
ஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா! பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா? இது என்றுமே புரியாத பரம இரகசியம்!
ஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப் படிக்கலாம் என்று யோசிக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நாம் அவரை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள மட்டும் அல்ல, அவர் சவுல், தாவீது, சாலொமோன் போன்றவர்களோடு நடந்து கொண்டதை நாம் புரிந்து கொள்ளவும் முடியும்.
மானாது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (சங்:42:1 )
என்று தாவீது கதறிய சத்தம் எனக்கும் கூட பொருந்தும். எத்தனைமுறையோ, அப்பா உம்மைப் பற்றி எனக்கு கற்றுத் தாரும், உம்மை இன்னுமாய் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்று கேட்டிருக்கிறேன்.
எனக்கு மட்டும் அல்ல உங்கள் ஆவலும் இதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். யாத்திராகம புத்தகத்தில் மோசே கர்த்தரை நோக்கி,
உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நாம் உம்மை அறிவதற்கும்,…உம்முடைய வழியை எனக்கு அறிவியும். (யாத்:33:13) என்றான்.
தேவனோடு அதிக நெருக்கமாயிருந்த மோசேயே தேவனைப் பற்றி அறிய, அவரைப் பற்றி புரிந்து கொள்ள ஆவலாயிருந்தால் நாம் எம்மாத்திரம்?
நம்முடைய குறைந்த புத்தியால் தேவனைப்பற்றிய முழு இரகசியத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதென்றாலும், யாக்கோபு 4:8 ல்
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்ற வாக்கின் படி, நாம் அவரைக் கிட்டி சேருவோம்.
அவரை அறியாதிருந்தால் உண்மையாய் சேவிப்பது எப்படியாகும்? ஆண்டவரே உம்மண்டை இன்னும் கிட்டி சேர உதவி தாரும் என்று ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்.