இதழ் 610 அதிகாரம் மாறிப்போச்சே!

1 சாமுவேல் 17:8  அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்துக்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும்.

நான் சிறு வயதில் இந்த தாவீது கோலியாத் கதையை எத்தனை முறை கேட்டிருப்பேன்! அதன்பின்னர் எத்தனையோமுறை இந்தக் கதையை வேதாகமத்திலிருந்து படித்துவிட்டேன். ஆனால் ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு தெரிந்த கதையை வாசிப்பது போல வாசித்துவிட்டு அதன் முக்கிய அம்சங்களை விட்டிருக்கிறேன்.  நான் எப்பொழுதும் கூர்ந்து வாசிக்காத இன்றைய வசனம் எனக்கு மிக முக்கியமான பாடத்தைக் கற்பித்தது.

கோலியாத் எத்தனை கர்வமுடன், ஆணவத்துடன், பெருமையாக ‘நான் பெலிஸ்தன் அல்லவா’ என்பதைப் பாருங்கள்! பின்னர் இஸ்ரவேலரைப் பார்த்து ‘நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா’ என்பதையும் பாருங்கள்!

இத்தனை வருடம் தேவனாகியக் கர்த்தரின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்பட்ட இஸ்ரவேல் மக்கள், தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டதினால், ‘ நாங்கள் தேவாதி தேவனின் சேவகர் இல்லை , இனி நாங்கள் சவுலுக்கு சேவகம் செய்வோம்’ என்ற செய்தியை தங்கள் எதிரிகளுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

அச்சச்சோ! அதிகாரம் கைமாறி விட்டதே! என்ன பரிதாபம்!

இதனால் என்ன நடந்தது பாருங்கள்! இஸ்ரவேலருக்கு இருந்த மதிப்பு சுத்தமாகப் போய்விட்டது. பரலோகத்தின் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டிருந்தவரை இருந்த மதிப்பு, பூலோகத்தின் அதிகாரத்துக்கு கீழேவந்தவுடன் ஓடிப்போய்விட்டது. இஸ்ரவேலரின் தரம் குறைந்து போயிற்று. அவர்களை கோலியாத் வெறும் சேவகர்களாகத்தான் பார்த்தான்!

இங்குதான் கோலியாத் ஒரு பெரியத் தப்பு பண்ணிவிட்டான். அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிட்டார் என்று நினைத்துவிட்டான். ஆனால் கர்த்தரோ வழிதவறிய தம்முடைய பிள்ளைகளைத் தம்மிடம் சேர்க்கும்படியாய் அவர்களுக்காக யாவையும் செய்து கொண்டிருந்தார்.

கோலியாத் நினைத்தான், ‘நான் பெரியவன் ஏனெனில் நான் பெலிஸ்தன், எனக்கு பின்னால் ஒரு பெரிய அதிகாரம் இருக்கிறது, நான் உயரத்திலும், எடையிலும் பெரியவன்’ என்று.

தாவீது அந்த இடத்தில் வந்தபோது அவன் எந்த விதத்திலும் கோலியாத்துக்கு சமம் இல்லாததுபோல் தெரிந்தது. ஆனால் ஒன்று மட்டும் வித்தியாசம்! அவன் சவுலின் சேவகன் அல்ல! தேவாதி தேவனின் சேவகன்!

என்ன அருமையான பாடம்! எத்தனை முறை நம்முடைய முகத்தில் அறைந்தாற்போல கோலியாத் நம்மைப் பார்த்து நாம் இந்த உலகத்தை சார்ந்தவர்கள்தான், நமக்கும் தேவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறான். நாம் தேவனுடைய அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவர்கள் மட்டும் அல்ல, நாம்அவருடைய சுவிகாரப் புத்திரர் என்று அவனுக்குத் தெரியவில்லை! பாவம்!

ஒரு சின்ன சந்தேகம்! நீ என்றாவது உன் வாழ்க்கை கர்த்தரின் அதிகாரத்துக்கு உட்பட்டதை உணராமல் உன் வாழ்க்கைக்கு நீயே அதிபதி என்று நினைத்ததுண்டா?

இன்னொரு சந்தேகம்! தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!  உங்கள் வாழ்க்கையில் யார் இந்த கோலியாத்? நீ பரலோகத்துக்கு சொந்தம் இல்லை, பூலோகத்துக்குதான் சொந்தம் என்று உங்கள் மதிப்பைக் குறைக்கும் அவன் யார்? யார்?

சிந்தியுங்கள்! நம்மை ஏளனப்படுத்தும் கோலியாத்தை முழங்கால்களில் நின்று முறியடிப்போம்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s