1 சாமுவேல் 24: 12,13 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர்தாமே என் காரியத்தில் உமக்கு நீதியை சரிகட்டுவாராக. உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. முதியோர் மொழிப்படியே ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும். ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
தாவீது சவுலினால் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்று நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சவுலின்மேல் கைபோட தாவீதுக்குத் தருணம் கிடைத்தபோது உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை என்று அவன் கூறுவதை இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பார்க்கிறோம்.
அதுமட்டுமல்ல அவன் சவுலிடம் கர்த்தர்தாமே நீதியை சரிகட்டுவார் என்றும் கூறினான். தாவீதின் இந்த வார்த்தை நீங்களும் நானும் நம்மை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று. நம்மை சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்த்து, நம்மை சுற்றியுள்ளவர்களைப் பார்த்து நாம் எத்தனைமுறை நியாயம் தீர்க்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து ஒருத்தரைப் ப்ற்றி நியாயம் தீர்ப்பது எவ்வளவு குற்றம்!
இதை நன்கு அறிந்த தாவீது, அனைத்தையும் அறிந்த தேவனே நம்முடைய காரியத்தில் நியாயம் தீர்ப்பார் என்று சவுலிடம் கூறினான்.
தாவீது மற்றுமொரு காரியத்தையும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் அல்லது கெட்டவர்களிடத்தில் தான் கெட்ட செயல் பிறக்கும், அல்லது பழிவாங்குதல் பழிவாங்குகிறவர்களிடம் தான் பிறக்கும் என்று முதியோர் மொழி ஒன்றைக் கூறுகிறதைப் பார்க்கிறோம்.
இதைத்தான் கர்த்தராகிய இயேசு மத்:7:20 ல் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்றார்.
நமக்கு தீங்கு இழைப்பவர்களுக்கு நாம் தீங்கு இழைப்பது இந்த உலகத்தில் நடக்கும் செயல்தானே. ஒருவேளை இன்று சவுல் நம்மைத் துரத்துவானானால், நமக்கு தீமை செய்வானானால் நாம் அவனைப்பிடித்து அவனுக்கு சரிக்கு சரியாக தீமை செய்வோம்அல்லவா! நமக்கு நியாயம் வேண்டமா! பழிவாங்கினால்தானே நமக்கு நிம்மதி கிடைக்கும்.
ஆனால் பழிவாங்குதலை நம்முடைய கையில் நாம் எடுத்துக்கொள்வோமானால், நாம் நம்மை மேலுக்கு மேல் புண்படுத்திக்கொண்டு தான் இருப்போம். நாம் மற்றவர்கள் மேல் எய்யும் அம்பு நம்மையும் காயப்படுத்தும்.
பழிவாங்குதல் கர்த்தருடையது! அதைப்புரிந்து கொள்ளாத முட்டாள்தான் பழிவாங்கத்துடிப்பான்!
உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோ யாராவது பெரிய தீங்கு செய்திருக்கிறார்களா? அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் உனக்கு உண்டா? அப்படிப்பட்ட ஒரு சிறிய எண்ணம் கூட உன் ஆத்துமாவை அழித்துவிடும்! ஜாக்கிரதை!
தாவீதைப்பார்! தன் உயிரக்குடிக்க அலைந்தவனைப் பார்த்து உன்னைப் பழிவாங்கமாட்டேன் என்கிறான். இதைத்தான் கர்த்தர் உன்னிடமும் விரும்புகிறார். அவர் உனக்காக யுத்தம் செய்து உனக்கு நீதியை சரிக்கட்டுவார்! அவரிடம் ஒப்புவித்துவிட்டு நிம்மதியாக இரு!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்