1 சாமுவேல் 24:19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
நாம் ஒவ்வொருநாளும் தாவீது வனாந்திரத்தில் சவுலினால் வேட்டையாடப் பட்டதைப் படித்துக் கொண்டு வந்தோம்.
தாவீதின் இந்த வனாந்திர வாழ்க்கையில் அவனுடைய இன்னொமொரு அற்புத குணாதிசயம் வெளிப்படுகிறது. கர்த்தர் அவனைத் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று அழைத்தது இதனால்தானோ என்னவோ! அவனைத் துன்பப்படுத்தினவர்களை நேசிக்கும் குணம்! கர்த்தராகிய இயேசுவின் குணமல்லவா அது!
நானும் ஒவ்வொருநாளும் என்னை ஏமாற்றினவர்களை, தவறாகப் பேசியவர்களை மன்னிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் அது எவ்வளவு கஷ்டமானக் காரியம் என்று நான் அடிக்கடி உணருவதுண்டு.
மறுபடியும் இரண்டாவது முறையாக சவுலும் தாவீதும் சந்திக்கின்றனர். இங்கும் தாவீதின் கரம் ஓங்கியிருக்கிறது. ஏனெனில் அவன் சவுலைநெருங்கியபோது அவனைக் கொல்லாமல், அவன் எவ்வளவு நெருங்கியிருந்தான் என்று காண்பிப்பதற்காக சவுலின் சால்வையின் நுனியை கத்தரித்துக்கொண்டு அவனைப் போகவிட்டிருந்தான். ஆதலால் சவுல் அவனைப் பார்த்து, இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக என்றான்.
மத்தேயு 5: 43 -45 ல் கர்த்தராகிய இயேசு நமக்கு இதைதான் ஞாபகப்படுத்தினார்.
உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவை பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
ஒரே ஒரு கேள்வி உங்களிடம்!! நாம் நம்முடைய சத்துருக்களை சிநேகிக்கும்போது அவர்களுக்கு நன்மை செய்யும்போது சவுல் கூறியதுபோல நமக்குக் கர்த்தர் நன்மை செய்வார் என்று எண்ணியா செய்கிறோம்?
கர்த்தராகிய இயேசு தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள்!
இப்படிச் செய்வதினால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
நம்முடையப் பரலோகப்பிதாவின் உலகத்தில் நம்முடைய சத்துருக்களை நேசிப்பதுதான் சரியான காரியம்! நாம் நம்மை துன்புறுத்துவோரை மன்னிக்கும்போது கர்த்தருடைய கிருபையைப் பெறுகிறோம். ஏனெனில் நாம் செய்யும் இந்த காரியத்தினால் கர்த்தர் மகிமைப்படுவார். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நாம் பரலோக தேவனின் புத்திரர் என்று வெளிப்படும்.
இயேசுவானவர் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று கூறியது உன் வாழ்வில் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? சிந்தித்துப் பார்!
இன்று நீ யாரையாவது மன்னிக்கவேண்டியிருக்கிறதா? உனக்கு தீமை செய்த யாருக்காவது நன்மை செய்யவேண்டியதிருக்கிறதா?
நீ இன்று கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அதை செய்யும்போது இந்த உலகம் நீ தேவனாகிய கர்த்தரின் பிள்ளை என்பதைப் புரிந்துகொள்ளூம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்