1 சாமுவேல்: 25:18 அபொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளைதும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருனூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள் மேல் ஏற்றி
அபிகாயில் என்ற இந்த அழகும், அறிவும் வாய்ந்த பெண் தன்னுடைய ஊழியக்காரன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை எடை போட்டு, தன்னுடைய கணவன் நாபாலின் புத்திகெட்ட செயலால் விளையப்போகும் தீங்கை உணர்ந்து சற்றும் தாமதியாமல் செயலில் இறங்குகிறாள் என்று இன்றைய வேத பாகம் குறிக்கிறது.
அவள் தன்னுடைய ஊழியக்காரரின் உதவியுடன் தாவீதுக்கும் அவனோடிருந்த மனிதருக்கும் பெரிய விருந்து பண்ணுவதைப் பார்க்கிறோம். ஆம் மிகப்பெரிய விருந்து! அவள் குடும்பத்தாரோடு தாவீதுக்கு ஏற்பட்ட பகையைத் தீர்க்க அவள் தன்னால் முடிந்த பெரிய விருந்தைப் பண்ணுகிறாள். தாவீது தங்களுக்கு செய்த தன்னலமற்ற உதவியை நினைத்து அவள் உள்ளம் நன்றியால் நிரம்பிற்று.
தாவீதும் அவனோடிருந்தவர்களும் பட்டயத்தை அறையில் கட்டிக்கொண்டு நாபாலுக்கு சொந்தமானவைகளை அழிக்க தயாராக இருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்!
அபிகாயில் தன்னுடைய தாவீதுக்காக ஆயத்தம் பண்ணின மிகப்பெரிய விருந்துடன் அவனை நோக்கி புறப்படுகிறாள். ஐந்து ஆடுகளை அடித்து சமையல் பண்ணி, இருனூறு அப்பங்களை சுட்டு, ஐந்துபடி பயற்றை வறுத்து, திராட்சை ரசம், திராட்சை வத்தல், அத்திப்பழ அடைகள் என்று வகை வகையான சாப்பாடு! அவளுடைய இந்தப் பெருந்தன்மையும், பரந்த உள்ளமும் பாராட்டத்தக்கவை தானே! இதை செய்வதற்கு அவளுக்குள் எந்தத் தயக்கமும் இல்லை!
இதைப்படிக்கும் போது எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு விலை உயர்ந்த பரிமள தைலத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் ஊற்றி தன்னுடைய நன்றியைத் தெரிவித்த மரியாள்தான் என் ஞாபகத்துக்கு வருகிறாள். அவள் தன் செயலில் காட்டிய நன்றி இன்றும் படிப்போரின் உள்ளங்களைத் தொடுகிறது. அப்படித்தான் அபிகாயிலின் செயலும் தாவீதின் உள்ளத்தைத் தொட்டது. அவன் உள்ளம் மாறியது, அவன் கோபம் தணிந்தது! எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய பட்டயம் கீழே இறங்கியது.
அபிகாயில் போன்ற ஒரு சூழ்நிலை நமக்கு வந்தால் என்ன செய்திருபோம்?
ஒரே ஒரு காரியம் நம் சிந்தனைக்கு! இன்று எத்தனை மன வருத்தங்கள், கோபம், விரோதம், பழிவாங்குதல் இவற்றை நம் மத்தியில் பார்க்கிறோம்! இவைகள் நம் குடும்பங்களில் மட்டும் அல்ல திருச்சபைகளையும் விட்டு வைக்கவில்லையே! அபிகாயிலைப் போல ஒரு அன்பின் விருந்து ஒருவேளை சில மன தர்க்கங்களை மாற்றலாம் அல்லவா? துப்பாக்கி குண்டுகளைப் போல வீசப்பட்ட வார்த்தைகளைக் கூட இந்த அன்பு மாற்றிவிடும்!
நாம் இன்று முயற்சி செய்யலாமே! நம்முடைய குடும்பத்தில், திருச்சபையில் அன்போடு நாம் தாராளமாய் பரிமாறும் செயல் , தாவீது அபிகாயிலைப் பார்த்து கூறியதைப்போல, ‘ உன்னை இன்றையதினம் என்னை சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகியக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ ( 25:32) என்று நம் பகையை விலக்கலாமே!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்