1 சாமுவேல் 31:1-6 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்…..சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள். அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி….. நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் குத்திப்போடு என்றான். அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் தன் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
சவுல் ஒரு திறமைசாலி! நேர்முகமான நோக்கம் கொண்டவன்! எல்லாவற்றுக்கும் மேலாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்! ஆனால் என்ன நடந்தது அவன் வாழ்க்கையில்? அவனுடைய முடிவு எப்படியாயிற்று பாருங்கள்!
அவனுடைய வாழ்க்கையை சற்றுத் திரும்பி பார்ப்போமானால், அவன் அமலேக்கியருடன் செய்த யுத்தத்தில் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனது நமக்கு ஞாபகத்துக்கு வரலாம். அங்கிருந்து அவன் ஒரேயடியாக சறுக்கிக் கீழே வந்து கொண்டிருந்தான்!
சவுல் வெகு சீக்கிரமாகவே மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளானான். ஏனெனில் அவன் தன்னை மிகப்பெரியவனாகக் கருதினான். அந்த எண்ணம்தான் அவனை கீழே தள்ளிவிட்டது.
ஏதேன் தோட்டத்தில் இருந்த ஆதாமும் ஏவாளும்தங்களுக்கு கடவுளைவிட அதிகமாக எல்லாம் தெரியும் என்று எண்ணியதுபோல, சவுலும் எண்ணினான்! நான்கூட சிலவேளைகளில் முட்டாள்தனமாக அவ்வாறு எண்ணியதுண்டு! அந்த எண்ணம் எப்பொழுது வரும் தெரியுமா? என் வாழ்க்கையில் எல்லாமே சுமூகமாக செல்லும்போதுதான்! அந்த சமயத்தில், நான் எல்லாவற்றையும் எளிதாக செய்துவிடுவேன், என் வாழ்க்கையை என்னால் நடத்த முடியும் என்று எண்ணியிருக்கிறேன்!
அப்படியாக நினைத்த சவுல் ஒருநாள் பெலிஸ்தியர் பாளையம் இறங்கியதைக் கண்டவுடன் நடுங்கிப் போய்விட்டான்!
இப்படி என்றாவது உங்கள் வாழ்க்கையில் நடந்தது உண்டா? உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் மாலுமி, எல்லாமே நன்றாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று வீசிய ஒரு புயல்! உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று உணர்ந்து என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நடுங்கிய அந்த வேளை!
கடைசியில் சவுல் என்ற திறைமைசாலி, கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவன், சாமுவேலால் அபிஷேகிக்கப்பட்டவன் எப்படி முடிவடைகிறான் என்று பாருங்கள்! ஒருகாலத்தில் ந்மிர்ந்து நின்ற இஸ்ரவேலின் முதல் ராஜா, இன்று பட்டயத்தின் மேல் விழுந்து தன் வாழ்வை முடிக்கிறான்! தேவனை மறந்ததால் சவுல் மரணத்தை ஆதாயமாக்கினான்.
கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அவரை நாம் ஏமாற்றுவதாக நினைத்தால், நாம் அவரையல்ல, நம்முடைய ஆத்துமாவைத்தான் ஏமாற்றுகிறோம் என்பதை மறக்கவேண்டாம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்