2 சாமுவேல் 6:1,2 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரைக்கூட்டி, கேருபின்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தருடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
வேதம் ஒரு அற்புதமான புத்தகம்! இதை நாம் கதையிலிருந்து கதை என்று போகாமல், இங்கு படிப்பதுபோல முறையாக தொடர்ந்து வாசிக்கும்போது அது ஒரு சரித்திரமாக அல்லாமல் மிகுந்த ஆசீர்வாதமாக அமையும்.
நாம் படிக்க ஆரம்பித்திருக்கும் இந்த அதிகாரத்தை இன்னும் சில நாட்கள் படிக்கலாம், ஏனெனில் இந்த அதிகாரத்தில் நாம் பரிசுத்தராகிய தேவனாகிய கர்த்தரைப் பற்றி பார்க்கிறோம்!
இந்த அதிகாரம் எந்தவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இது தாவீது பத்சேபாளுடன் பாவத்தில் விழுந்த சம்பவத்துக்கு முன்னால் இடம் பெற்றிருக்கீறது. இதைப் படிக்கும்போது, இது மறுபடியும் என்னை தேவனுடைய பரிசுத்தத்தையே என்னுடைய வாழ்வின் மையமாகக் கொள்ளவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டியது.
என்னுடைய சிறு வயதிலிருந்தே எங்களுடைய பாரம்பரிய திருச்சபையில் அமர்ந்து, பரிசுத்த தேவனை ஆராதிக்க விரும்புவேன். ஆலயத்தின் மூன்றாம் மணி அடிக்கும் முன்னரே உள்ளே போய் முழங்கால் போட்டுவிடுவோம். உள்ளே சென்ற பின்னர் யாரிடமும் பேச மாட்டோம், முழங்கால் படியிட்டு ஜெபிப்போம். பரிசுத்த தேவனின் ஆலயத்தில் நாம் எப்படி பரிசுத்தமாய் இருக்கவேண்டுமென்று சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தனர். இப்பொழுது சில ஆலயங்கள் பல மாடர்ன் டெக்னாலஜிகளைக் கொண்டதாய் ஏதோ ஷோ பார்ப்பது போல நடக்கின்றன!
தாவீதின் காலத்தில் என்ன நடக்கிறது பாருங்கள்! ஜனங்கள் பரிசுத்த தேவனை மறந்தே போய்விட்டார்கள். அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்கி போய்விட்டார்கள். அவருடைய பரிசுத்த பிரசன்னத்துக்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் அத்தனையும் பழைய நாகரீகமாகிவிட்டது!
அச்சமயம் தாவீது தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு எடுத்துவர முடிவு செய்கிறான். ஒரு உயர்ந்த உள்ளம் அவனுக்கு. எருசலேம் தேவனை ஆராதிக்கும் ஸ்தலமாக மாற விரும்பினான்.
ஆனால் தாவீது அந்த முடிவு எடுக்கும் முன் அந்தப்பெட்டியை எப்படி எடுத்து வருவது என்று முடிவு செய்யவில்லை. அவர்கள் அதை ஒரு புதிய வண்டியில் ஏற்றி ஆடல் பாடலுடன் கொண்டுவந்தனர்.
இது கேட்க மிகவும் நன்றாகவே இருக்கிறது! மகிழ்சியான கொண்டாட்டம்! தாவீதும் அவனோடிருந்தவர்களும் கர்த்தருடைய பெட்டியை தங்கள் ஊருக்கு கொண்டுவருவதை அவர்களுடைய வழியில் ஒரு பண்டிகையைப்போல கொண்டாட முடிவு செய்தனர்! ஆனால் கர்த்தருடைய வழியைப் பற்றி சிந்திக்கவே இல்லை!
எங்கேயோ ஒரு இடத்தில், அது வனாந்தரத்திலோ அல்லது ஆலயத்திலோ எங்கோ நாம் கர்த்தருடைய பரிசுத்தத்தை மறந்தே விட்டோம். நாம் நிற்பது பரிசுத்தமான ஸ்தலம் என்றே மறந்து விட்டோம். அதை மறக்கும்போது நாம் எதற்காக உருவாக்கப்பட்டோம் என்பதையும் மறந்தே விட்டோம்.
கர்த்தருடைய அன்பையும், கிருபையையும் அனுபவிக்க ஆசைப்படுகிற நாம் அவற்றுக்கு முன்பு அவருடைய பரிசுத்தத்தை அனுபவித்தே ஆகவேண்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்