2 சாமுவேல் 6: 20 .. சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்
இன்றைய வேத வசனத்தில் மீகாள் தாவீதின் மீது வீசும் கடுமையான வார்த்தைகளைப் பார்க்கிறோம்.
மீகாள் தாவீதை நேசித்து திருமணம் செய்தவள். அவளுடைய தகப்பனாகிய சவுல் தாவீதை வெறுத்தபோதும், அவளுடைய காதல் திருமணத்தால் தாவீது சவுலின் அரண்மனையில் வாழ ஆரம்பித்தான். சவுலின் கண்ணியிலிருந்து தாவீதை ஜன்னல் வழியாகத் தப்புவித்து அவன் உயிரைக் காப்பாற்றியதும் இந்த மீகாளே.
ஆனால் நாம் கடந்த நாட்களில் படித்தது போல், தாவீது தப்பித்து ஓடினவுடன் சவுல் மீகாளுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கிறான். தாவீதும் எப்ரோனில் தனக்கு தேவையான அளவுக்கு மனைவிகளைத் தேடிக்கொள்கிறான். ஆனாலும் தாவீது தனக்கு தருணம் கிடைத்தவுடன் மீகாளை திரும்பிபெறும் முயற்சியை எடுத்து அவளையும் அடைகிறான். அவள் இன்னொருவநின் மனைவி என்பதை சுத்தமாக மதிக்கவே இல்லை.
ஆம்! தாவீது, மீகாள் என்பவர்களின் சரித்திரம் ஒரு கசப்பான கதை. அதனுடைய விளைவுதான் மீகாள் தாவீதின் மீது எறிந்த கற்கள் போன்ற வார்த்தைகள்! தன்னுடைய குடும்பத்தை ஆசீர்வதிக்க ஆவலுடன் உள்ளே நுழைந்த தன்னுடைய கணவனை குறுக்கிட்டு நக்கலான வார்த்தைகளால் வரவேற்கிறாள் அவனுடைய மனைவி நம்பர் 1.
இந்தக் நக்கலும் கேலியுமான வார்த்தைகள் சில நேரங்களில் நம்மை கூறு போட்டுவிடும்! தேள் கொட்டியது போன்ற வார்த்தைகளால் தாவீதின் மகிழ்ச்சி நொறுங்கிப்போனது!
நம்முடைய குடும்பத்தில் இதைப்போன்று நடக்கவில்லையா? நான்கு சுவற்றுக்குள் நாம் பேசும் கேலியும், கிண்டலும், நக்கலுமான வார்த்தைகள் நம்முடைய குடும்பத்தாரின் மனதைக் கிழித்து அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுப்பது போல உள்ளதா?
வார்த்தை ஒரு கொடிய ஆயுதம்! அதை பயன்படுத்தி உன்னை நேசிப்பவர்களை புண்படுத்த வேண்டாம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்