2 சாமுவேல் 11:2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பாரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பாரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு சௌந்தரியவதியாயிருந்தாள்.
ஒருநாள் காலையில் வாசலில் கால் வைக்கும்போது ஏதோ ஒன்று நீளமாக இருப்பதுபோலத் தோன்றியது. அங்கு ஒரு தொட்டியில் சிவப்பு நிற நீளமான பூக்கள் பூக்கும். அந்தப் பூ காய்ந்து மண் கலரில் விழுந்து கிடக்கும். நான் அந்தப்பூ தான் விழுந்து கிடக்கிறது என்று காலை தூக்கி வைத்து தாண்டிப்போய் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வு என்னைத் திரும்பிப் பார்க்க செய்தது. அப்பொழுதுதான் அது பாம்பு என்று உணர்ந்தேன். பின்னர் அதை அடிக்கும்போது அது விரியன் பாம்பு என்று தெரிந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் எச்சரிக்கையோடு உற்றுப்பார்க்காமல் காலை வைப்பதே இல்லை!
நம்முடைய தினசரி வாழ்விலும் நமக்கு எச்சரிக்கைத் தேவை! இன்றைய வேதாகமப்பகுதி தாவீது ‘ஒரு ஸ்திரீயை கண்டான்’ என்று கூறுகிறது. கண்டான் என்ற வார்த்தை எபிரேய மொழியில், ‘ கற்ப்பற்ற, காம வெறிகொண்ட” பார்வையென்ற அர்த்தத்தைக் கொண்டது.
ராஜாவாகிய தான் யுத்தத்துக்கு போகாமல், இஸ்ரவேல் அனைத்தையும் யுத்தத்துக்கு அனுப்பி விட்டு, உல்லாசமாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தாவீதின் கண்கள் எல்லாவற்றையும் கண்டு ஆனந்தமாய் அனுபவித்துக் கொண்டிருந்தன! இன்று அந்தப்பார்வையில் பட்டது ஒரு அழகிய ஸ்தீரி!
தாவீது யார் என்பதை நாம் மறந்துபோக வேண்டாம். அவன் கர்த்தரை நேசித்தவன். தேவனாகிய கர்த்தருடைய இருதயத்தை பின்பற்றும் வாஞ்சை கொண்டவன். அவரால் அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்பட்டவன். தயவும், இரக்கமும் உள்ளவன். வலிமையான ஒரு ராஜா, அவனைக் காண்போருக்கு உற்சாகமளிக்கும் தன்மை கொண்டவன்.
ஆனால்!!!!! 2 சாமுவேல் 11 ல் அவன் ஒரு பெரிய தோல்வியுற்றவன்!
உல்லாசமான மாலை வேளையில் தாவீது தான் நேசித்த எருசலேமில், தன்னுடைய அழகிய அரண்மனையின்மேல் உலாவும்போது அவனுடைய பார்வை அவனை எங்கோ இழுத்து சென்றது. அவன் மட்டும் அந்த இடத்திலிருந்து எழுந்து தன் பார்வையை தேவனாகிய கர்த்தர் பக்கம் திருப்பியிருப்பானாகில் சரித்திரமே மாறியிருக்கும்.
கண்கள் போனபோக்கிலே தன் எண்ணத்தையும், நோக்கத்தையும் தவற விட்ட இந்த ஒரு நொடியை தாவீது தன் வாழ்க்கையில் எத்தனைதரம் நினைத்திருப்பான்! நினைத்து வருந்தியிருப்பான்! அந்த ஒரு நொடி அவனை மேல் நோக்கி பரலோக தேவனைக் காணாமல், கீழ்நோக்கி அழகான ஸ்தீரியை நோக்க செய்தது!
உன்னுடைய வாழ்வில் அந்த ஒரு நொடி உண்டா?
நம்முடைய கண்கள் இன்று எதை அதிகமாக பார்க்கின்றன? நம்முடைய கால்கள் நம்மை எங்கே இழுத்து செல்கின்றன? நம்முடைய ஒவ்வொரு பார்வையையும், ஒவ்வொரு நடத்தையையும் நாம் எச்சரிக்கையோடுதான் எடுத்து வைக்க வேண்டும்! யாருக்கு தெரியும்? நாம் கால் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொண்டிருப்பது வலுசர்ப்பமாயிருக்கலாம் அல்லவா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்