2 சாமுவேல் 11:3 அப்பொழுது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்.
ஒருநாள் தாவீது மதிய நேர ஓய்வுக்குப் பின், தன்னுடைய அரண்மனையின் உப்பாரிகையிலே உலாவிக் கொண்டிருந்தான். அருமையான காற்று! தான் அதிகமாக நேசித்த எருசலேம் நகரத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தாவீதை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை! அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் உல்லாசமாய், அமைதியாய், காற்றோட்டமாய் நடந்தது ஒன்றும் தவறே இல்லை! எத்தனை வருடங்கள் காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், காலம் கழிக்க வேண்டியிருந்தது! சவுலால் அவன் பறவையைப் போல வேட்டையாடப்பட்டான் அல்லவா? இப்பொழுது அவன் எந்தக் கவலையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அரமனையின் மாடியிலே இளைப்பாறிக்கொண்டிருந்த வேளை!
எருசலேம் நகரத்தை நோட்டமிட்ட அவன் கண்களில் குளித்துக் கொண்டிருந்த ஒரு அழகிய பெண் தென்பட்டாள்.அந்த வேளையில் தாவீது இரண்டு முடிவுகளை எடுத்தான். முதலாவது யாரையாவது அனுப்புவது என்று, இரண்டாவது அந்தப் பெண் யாரென்று விசாரிப்பது என்று.
முதலாவது யாரையாவது அனுப்ப முடிவு செய்தான்.
ப்ளாரிடாவில் என்னுடைய நண்பர்கள் வீட்டில் தங்கும் போதெல்லாம் படகில் மீன் பிடிக்க செல்லுவொம். அவர் மீனைக் கவரக்கூடிய தீனியை ஒரு கொக்கியில் வைத்து எறியும் போது பெரிய மீன்கள் கூட மாட்டிவிடும்!
அவ்வாறுதான் தான் கண்ட அந்தப்பெண்ணைத் தன் பிடியில் சிக்க வைக்க தாவீது ஆளை அனுப்பினான். இதை ஏன் ஆணித்தரமாக சொல்கிறேன் என்றால் பத்சேபாள் தாவீதை மயக்கி தன் வலையில் போட எந்த செயலும் செய்யவில்லை! இதை வேதாகமம் தெளிவு படுத்துகிறது.
இங்கு தாவீது பத்சேபாளை தன் கண்களால் கண்டான். அவளை அடைய விரும்பினான். இப்பொழுது அவளைத் தன் வலையில் சிக்க வைக்க ஆள் அனுப்புகிறான்.
நாம் தேவனுடைய வழியில் நடக்காமல் விலக செய்வதற்காக சாத்தான் எப்படியெல்லாம் யோசிப்பான் என்று நம் மண்டையில் ஏறுவதே இல்லை! அவன் யோசித்து செயல் படுத்தும் 4 புள்ளி திட்டம் இதுதான்.
1. நான் கண்களால் கண்பது
2. நான் அதை விரும்புவது
3. நான் அதை அடைய முயற்சிப்பது
4. நான் அதை எனக்குள் அடைவது
இந்த 4 புள்ளித் திட்டம்தானே ஏவாளிடமும் செயல்பட்டது.
எத்தனைமுறை என் கண்கள் அக்கரையைப் பச்சையாகப் பார்த்து அதை அடைய விரும்புகிறது! கர்த்தர் எனக்கு கிருபையாகக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களில் திருப்தியே இல்லை. யாரோ ஒருவர் வாழும் வாழ்க்கை எனக்கு பச்சையாகத் தெரிகிறது. உள்ளத்தில் திருப்தியின்மை என்ற இந்தப் பாவம் அநேக விசுவாசிகளை பாழும் கிணற்றில் தள்ளியிருக்கிறது.
அன்று தாவீது மட்டும் ஆள் அனுப்பி விசாரிக்காமல் இருந்திருந்தால் இந்தக் கதையே மாறியிருக்கும். நாம் யோசேப்பைப் போல தாவீதும் சோதனையை எதிர்த்து வென்றான் என்று அல்லவா படித்துக்கொண்டிருப்போம்.
சாத்தான் மீனுடைய பசியை அறிந்து, தீனியை கொக்கியில் வைத்து காத்துக் கொண்டிருக்கிறான்!
உன்னுடைய பெலவீனம் சாத்தானுக்கு உன்னைவிட அதிகம் தெரியும். உனக்கு எப்படிப்பட்ட வலை விரித்தால் நீ சிக்குவாய் என்று நன்கு அறிவான்.
விரலை நெருப்புக்குள் விட்டு விட்டு அது சுட்டுவிடக்கூடாது என்று நினைப்பது போல சோதனையில் தலையை விட்டு விட்டு பின்னர் ஜெபிக்க முயலாதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்