2 சாமுவேல் 11:7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.
இந்த மாய வித்தைகள் செய்பவரைப் பார்த்திருப்பீர்கள். நான் ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து அநேக வித்தைகள் செய்தார். நான் ஈடுபாடு காட்டாமல் உட்கார்திருந்தேன். அவர் என்னிடம் வந்து அவன் கைகளில் இருந்த சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து அதில் ஒரு குறியைப் போட வைத்தார். அந்த சீட்டை அவர் கைகளில் வாங்கி மற்ற சீட்டுகளுக்குள் வைத்து குலுக்கி விட்டார். நான் அந்த சீட்டை அந்த குலுக்கிய சீட்டுகளிலிருந்து உருவுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த போது அவர் நான் கீழே வைத்திருந்த என்னுடைய கைப்பையை திறக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம்! அந்த சீட்டு அதற்குள் இருந்தது!
நானும் சிலரும் சேர்ந்து அவரிடம் போய் இதை எப்படி செய்தார் என்றுகேட்டோம். அவர் அந்த ரகசியத்தை எங்களுக்கு சொல்லாவிட்டாலும், அவர் இந்த தந்திரமெல்லாம் ஒருவரை வார்த்தைகளாலும், செய்கைகளாலும் திசை திருப்பி, அவர்கள் கண்முன் ஒன்று நடப்பது போல நம்பவைத்து அதை வேறு இடத்தில் நடப்பிக்கும் திறமைதான் என்று சொன்னது என் மனதை விட்டு நீங்கவேயில்லை!
தாவீது தன்னுடைய கள்ளத்தனத்தில் யோவாபை கூட்டு சேர்த்து, ஏத்தியனான உரியாவை போர்க்களத்திலிருந்து எருசலேமுக்கு திருப்பி அனுப்பிவிடும்படி கூறியதைப் பார்த்தோம்.
நான் நாளாகம புத்தகத்தில் கூறப்பட்ட பராக்கிரமசாலியான உரியாவின் இடத்தில் இருந்திருந்தால் என் மனதில் பல கேள்விகள் எழுந்திருக்கும். ஏன் என்னை போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்புகிறார்கள்? ஏதாவது தப்பு செய்து விட்டேனா? என் குடும்பம் எப்படியிருக்கிறது? என்றெல்லாம் எண்ணத் தோன்றும்.
அவன் ராஜாவின் முன் வந்ததும் தாவீது கேட்ட கேள்விகள் இன்னும் அவனை குழப்பியிருக்கும். அவனுடைய தந்திரமான வார்த்தைகளால் உரியாவின் கவனத்தை போர்க்களத்திலிருந்து திசை திருப்பி, அவனை மது குடிக்க செய்வதைப் பார்க்கிறோம்.
தாவீதின் இனிமையான வார்த்தைகள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா? சங்கீதங்கள் பாடும் திறமையுள்ள தாவீது எவ்வளவு இனிமையாகப் பேசுகிறான் பாருங்கள்! சேனைத் தலைவனான யோவாப் சுகமாயிருக்கிறானா, யுத்தத்தில் ஜனங்கள் அனைவரும் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்ற கேள்விகளை ராஜாவாகிய தாவீது ஒரு போர்ச்சேவகனிடமிருந்தா தெரிந்து கொள்ள வேண்டும்? யோவாப் இதையெல்லாம் ராஜாவுக்குத் தெரிவிக்காமல் இருந்திருப்பானா?
பாவம் இந்த உரியா! தாவீது தன்னுடன் இனிமையாக பேசுவதின் அர்த்தம் புரியவே இல்லை! அவன் பேச்சு உரியாவை திசை திருப்ப மட்டும்தான் ஆனால் அவன் உள் எண்ணம் வேறு என்று புரியவில்லை! தாவீது அன்று உரியா எல்லாவற்றையும் மறந்து விட்டு தன் மனைவி பத்சேபாளுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
கர்த்தரைப் பிரியப்படுத்தும் இருதயம் கொண்ட தாவீது, ஒருநிமிடம் அடுத்தவனுடைய மனைவியின் மேல் இருந்த இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் இன்று உரியாவிடம் தந்திர வார்த்தைகளைப் பேசி தன்னுடைய இருதயத்தில் மறைந்திருந்த வஞ்சகத்தை எதிரொலிக்கிறான்!
இந்த சம்பவம் தான் ஒருவேளை தாவீதின் குமாரனாகிய சாலொமோனை நீதி:13:3 ல் தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான், என்று எழுதவைத்ததோ என்னவோ!
வாய் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒருவருடைய மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. வஞ்சகத்தை மறைத்து இனிமையாக பேசும் யாரிடமும் ஏமாந்து போகாதே! அப்படி ஏமாற்றப்பட்ட பெண்களையும், ஆண்களையும் பார்த்திருக்கிறேன். ஏமாந்தபின் கண்ணீர் விட்டு பிரயோஜமில்லை! ஏவாளை வாயின்வார்த்தைகளால் வஞ்சித்த சர்ப்பம் போல உன்னை யாரும் இனிமையான வார்த்தைகளால் வஞ்சிக்க இடம் கொடுக்காதே!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்