2 சாமுவேல் 11:9 ஆனாலும் உரியா தன் வீட்டுக்கு போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச்சேவகரோடுங்கூடப் படுத்துக் கொண்டிருந்தான்.
மீன்கள் கண்ணுக்கு படாத வரைக்கும் கொக்கு பரிசுத்தமாய் இருக்கும் என்று ஒரு வங்காள பழமொழி உண்டு.
ஒருவேளை உங்களுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காமல் இருக்குமானால் ஒரு பெரிய கிண்ணத்தில் ஐஸ்கிரீம் உங்கள் பக்கத்தில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஐஸ்கிரீம் என்றாலே நாக்கில் தண்ணீர் வருபவராக இருந்து ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் அதை சாப்பிடக்கூடாது என்று இருக்கும்போது உங்கள் அருகில் வைக்கப்படும் ஐஸ்கிரீம் உங்கள் கண்களுக்கு ஒரு பெரிய சோதனையாகத்தானே இருக்கும்.
நீரில் காணும் மீன் கொக்குக்கு ஒரு சோதனை தானே! இந்த சோதனை சில நேரங்களில் மனிதரூபத்தில் வரும்! சோதனை நண்பரின் ரூபத்திலும் வரலாம்! நண்பரின் மனைவி ரூபத்திலும் வரலாம்!
இந்த வேதம் ஒரு அற்புத புத்தகம். கர்த்தர் நம்மை தம்முடைய கட்டளைகளைக் கொடுத்ததோடு நிறுத்தாமல், உன்னையும் என்னையும் போன்ற தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கையில் வரும் சோதனைகளையும் வேதத்தில் இடம் பெற செய்து நமக்கு பாடம் கற்பிக்கிறார். வேதம் எதையும் மறைக்கவில்லை. சோதனையில் அகப்பட்டு விழுந்து போனவர்கள் பின்னர் அவர்கள் வாஞ்சித்த இரட்சிப்பை திரும்பப்பெற்றவர்கள் என பலரின் வாழ்க்கை சம்பவங்கள் நமக்காக ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளன.
பரலோக பிதாவின் ஆலோசனை இந்த வசனத்தில் கொடுக்கப்பட்டது போல எங்கும் இல்லை என்று நினைக்கிறேன். இஸ்ரவேலின் ராஜா தந்திரமான வார்த்தைகளைப் பேசி, பிரியமான பதார்த்தங்களை வீட்டுக்கு அனுப்பி உரியாவை தன் வீட்டில் போய் மனைவியுடன் சந்தோஷமாக இரு என்று அனுப்பிய போதும் இந்த உண்மையான, கடமை தவறாத வீரன் வீட்டுக்கு செல்லாமல், ராஜாவின் அரண்மனையிலேயே மற்ற ஊழியருடன் தங்கி விடுவதைப் பார்க்கிறோம்.
ஒரு சேனை வீரனுடைய அர்ப்பணிப்பு உரியாவிடம் இருந்தது.தன்னுடைய கவனத்தை திசை திருப்ப விடவேயில்லை. மற்ற வீரர்கள் போர்க்களத்தில் இருந்த போது உரியாவுக்கு ஆசா பாசங்களில் எண்ணம் இல்லை.அனைத்து சேனையும் திரும்பும்போது தான் வெற்றியைக் கொண்டாட முடியும். எந்த சோதனைக்குள்ளும் விழ அவன் தயாராக இல்லை! அது ராஜாவிடமேயிருந்து வந்தாலும் பரவாயில்லை நான் சோதனையில் விழ மாட்டேன் என்ற உறுதியான எண்ணம்! எத்தனை அருமையான குணம்!
பின்னால் நாம் படிப்போமானால் உரியா ஒருதடவை மட்டும் அல்ல மூன்று தடவை சோதனையை சகிக்கிறான். உரியா தன் வீட்டுக்குள் செல்லவே இல்லை! அரண்மனைக்கு வெளியே தங்கி விடுகிறான். எத்தனை மன உறுதி! நாமாயிருந்தால் ராஜாதானே அனுமதி கொடுக்கிறார், நான் ஒன்றும் இதைத் தேடி ஓடவில்லை! அதுவே என்னைத்தேடி வந்தது என்று சாக்கு சொல்லி சோதனைக்குள் விழுந்திருப்போம்!
சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான் (யாக்:1:12)
நாம் சோதனையை எதிர்க்க வேண்டும் என்று உறுதியாயிருந்தால் ஒழிய சோதனையிலிருந்து காத்துக்கொள்ளுமாறு ஜெபிக்க முடியாது. சிந்தித்து ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்