2 சாமுவேல் 11:11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியே பாளயமிறங்கியிருக்கையில் நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும் என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.
தாவீதைப் பற்றியே படித்துக் கொண்டிருக்கும் நாம் உரியாவைப் பற்றி ஏன் சற்று படிக்கக்கூடாது என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால் உரியா என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டான்.
அவன் பெயர் உரியா! வேதத்தில் எழுதப்பட்ட விளக்கத்தின் படி பத்சேபாளின் கணவனாகிய அவன் ஏத்தியர் என்ற சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன்.
உரியா இஸ்ரவேலில் வாழ்ந்தாலும் அவனுடைய முன்னோராகிய ஏத்தியர் கானானியர். ஆபிரகாம் காலத்திலேயே இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள். இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைந்தவுடன் கானானை சுத்திகரிக்கும்படியாக உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இஸ்ரவேல் மக்களுக்கு உதவி செய்த சில பழங்குடியினர் அங்கேயே தங்கவைக்கப் பட்டனர்.
தாவீது இஸ்ரவேலின் ராஜாவானபோது அநேக கானானியர் அங்கு வாழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது. இந்தக் கானானியர் இஸ்ரவேலின் சம்பந்தம் பண்ணியது மட்டுமல்ல இஸ்ரவேலின் தேவனையும் வணங்கினர். அவர்கள் உண்மையான இஸ்ரவேலராகவே கருதப்பட்டனர்.
இப்படியாகத்தான் உரியாவின் குடும்பத்தினரும் உண்மையான இஸ்ரவேலராக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று நம்புகிறேன். நீங்களும் நானும் சொல்கிற வார்த்தையில் இவர்கள் வேறு மதத்திலிருந்து ‘மனம் மாறியவர்கள்’.
உரியா என்ற பெயருக்கு அர்த்தம் நமக்கு இதை இன்னும் விளக்குகிறது. உரியா என்றால் ‘ கர்த்தர் என் வெளிச்சம்’ என்று அர்த்தம். அந்தப் பெயரை அவனுக்கு அளித்த அவனுடைய பெற்றோரோ அல்லது மூதாதையரோ கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் அறிவேன் என்று பறைசாற்றிய இன்னொரு கானானியப் பெண்ணான ராகாப் தான் என் நினைவுக்கு இப்பொழுது வருகிறது!
இந்தப் பின்னணியில் நாம் பத்சேபாள் மணந்த உரியாவின் வாழ்க்கையைப் பற்றி படிக்கப் போகிறோம். இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு உரியாவின் வாழ்க்கையின் நான்கு அம்சங்களைக் காட்டுகிறது.
1. முதலாவது உரியா கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டிக்குத் தன் வாழ்வில் முதல் இடம் கொடுத்திருந்தான். அவனைப் பொறுத்தவரை ராஜாவும், அவன் தேசமும் கர்த்தரின் பெட்டிக்கு பின்னர்தான் இடம் பெற்றனர்.
2. இரண்டாவது அவன் தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டவன். அவன் தாவீதை நோக்கி, இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களில் தங்கியிருக்கும்போது தனக்கும் அதுதான் சரி என்று நினைத்தான்.
3. உரியா தன்னுடைய வேலையில் உண்மையும் உத்தமுமானவன். யோவாபின் நம்பிக்கையைப் பெற்ற போர்வீரன். மற்ற வீரர்களுக்கு அவனுடைய உதவி தேவைப்பட்ட போது அங்கு இருப்பான்.
4. உரியா அசைக்க முடியாத கொள்கைசாலி. அவன் தாவீதிடம்,நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்று திட்டவட்டமாகச் சொல்கிறதைப் பார்க்கிறோம். ராஜாவே அவனை மாற்ற முயன்றாலும் உரியாவிடம் அது செல்லவில்லை.
இந்த ஒருவசனத்தில் இந்த கானானிய , வேறு மதத்திலிருந்து மனம் மாறிய உரியா , ஒரு வெளியாள் கர்த்தரின் நிழலில் வந்தவன், இஸ்ரவேலர் அல்லாத உங்களையும் என்னையும் போன்றவன், அவன் நம்பி வந்த வானத்தையும் பூமியையும் படைத்த தேவனுக்கும், தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முதலிடம் கொடுப்பதைப் பார்க்கிறோம்.
உரியாவின் வாழ்க்கை நமக்கு ஒரு முன் மாதிரியாக இல்லையா! தேவனுடைய ரூபமாக நாம் மாறும் நாள்வரை யாராலும், எதுவாகிலும் நம்முடைய விசுவாசத்தை அசைக்காமல் நாம் உரியாவைப் போல கர்த்தரையே முன்வைத்து, அவரையே நேசித்து நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்று ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்