2 சாமுவேல் 11: 11 ….. பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில்…..நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன்
நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தோடு வாழத்தானே ஆசைப்படுகிறோம்? சிலருக்கு வாழ்வில் உயருவதே நோக்கம், சிலருக்கு பிள்ளைகளைக் குறித்த நோக்கம். என் வாழ்க்கையில் நோக்கமே இல்லை, நான் எதையும் பற்றிக் கவலைப்படாமல் எனக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவரை நான் இதுவரைப் பார்த்தது இல்லை.
வாழ்க்கையில் ஒரே நோக்கத்தைக் குறிக்கோளாக வைத்து வாழ்ந்த ஒரு மனிதனின் உதாரணம் நமக்கு வேண்டும் என்றால் அது உரியாவாகத்தான் இருக்க வேண்டும். நாம் நேற்று பார்த்தவிதமாக உரியாவின் வாழ்க்கையில் தேவனுக்கும் அவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கும் முதலிடம் இருந்தது. தாவீது அவனை பாதை மாறி வீட்டுக்குப் போய் களித்து இருக்கத் தூண்டிய போது அவன் மனதில் முதலில் பட்டது கர்த்தருடைய பெட்டிதான்.
அவன் சரியான ஒரு காரியத்துக்கு முதலிடம் கொடுத்தவுடன், அவனுடைய வாழ்க்கையில் ஒரு நோக்கம் கிடைத்தது. அது சுய நலனுக்கான நோக்கம் அல்ல! தனக்கு அப்பாற்பட்ட ஒரு நோக்கம்! இதைத்தான் இன்றைய வேதாகமப் பகுதியில் உரியா வெளிப்படுத்துகிறான்.
உரியா ஒரு கானானியன் என்றும், வேறு மதத்திலிருந்து மனம் மாறியவன் என்றும் நமக்கு நன்கு தெரியும். ஏத்தியனான அவன் இஸ்ரவேலின் தேவனைத் தன்னுடைய தேவனாக ஏற்றுக்கொண்டிருந்தான். ஏதோ அறை குறை மனதோடோ அல்லது ஏதோ லாபத்துக்கோ அல்ல, முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தான்.
அதனால் தான் அவன் ராஜாவாகிய தாவீதிடம் தான் யுத்தகாலத்தில் தன் வீடு திரும்புவதில்லை என்று திடமாகக் கூறினான். அதனுடைய காரணம் என்ன தெரியுமா? பெட்டியும், இஸ்ரவேலும், யூதாவும் கூடாரங்களிலே தங்கியிருக்கும்போது தான் எப்படி வீடு செல்ல முடியும் என்பதே.
இங்கு உரியா ஒரு அருமையான காரியத்தை பதிவு செய்கிறான். உங்களுக்கு நினைவு இருக்கிறதா? தாவீது ராஜாவானபோது யார் இஸ்ரவேலை ஆள்வது என்று 12 கோத்திரங்களுக்குள்ளும் சண்டை இருந்தது. சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை அபிஷேகம் பண்ணியிருந்தாலும் சவுலின் குமாரன் ஒருவன் ஏழு வருடம் அரசாண்டதைப் பார்த்தோம். கோத்திரங்கள் பிரிந்து யூதாவும், இஸ்ரவேலும் கசப்பாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இங்கு இப்பொழுது உரியா இஸ்ரவேலும், யூதாவும் இணைந்து கூடாரங்களில் தங்கியிருப்பதை நமக்கு சுட்டி காட்டுகிறான். வெளியே உள்ள எதிரியைத் தாக்க உள்ளே உள்ள கசப்பு எல்லாம் ஓடிவிட்டன! இப்பொழுது ஒரே நோக்கம் எதிரியை முறியடிப்பதுதான்.
நம்முடைய வாழ்க்கையில் இந்த பரலோகத்துக்கடுத்த நோக்கம் உண்டா? அவருக்காக எந்த வேளையிலும் வேலை செய்ய நாம் ஆயத்தமா? நமக்குள்ளே உள்ள பிரிவினைகளையும், வேறுபாடுகளையும் ஒதுக்கி விட்டு, நாம் கிறிஸ்தவர் என்ற ஒரே நாமம் தரித்து அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் எப்படியிருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். நம்மை சுற்றி பிரிவினை என்ற சுவரையல்லவா எழுப்பியுள்ளோம்!
இந்த ஒரே நோக்கம் தான் ஏத்தியனான உரியாவை, தன் சுய விருப்புகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, யூதாவும், இஸ்ரவேலும் இணைந்து செய்த யுத்தத்தை மட்டும் நோக்க செய்தது.
நீயும் நானும் உரியாவைப் போல தேவனுடைய ஊழியத்தையே நம்முடைய தலையான நோக்கமாக வைத்து வாழ்கிறோமா? சிந்தித்து ஜெபியுங்கள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்