2 சாமுவேல் 11:11 …….நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.
கொள்கைரீதியாக வாழாத எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் வாழத் தகுதியில்லாதவர்க்ள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்! மார்ட்டின் லூதர் கிங் அவர்கள், ‘ ஒரு மனிதனை அளக்கும் அளவுகோலால், அவன் வசதியாக வாழும்போது அல்ல, அவன் கடினமான சோதனைக்குள் செல்லும்போதுதான் அளக்க முடியும்’ என்று கூறிய கூறியது எத்தனை உணமை!
உரியாவின் கொள்கைகள் அவன் கடினமான சோதனையின் மத்தியில் சென்றபோதும் அசைக்கப் படவே இல்லை.
உரியா யுத்தத்தில் இருந்தபோது தாவீது ராஜா அவனுடைய மனைவியான பத்சேபாளோடு உல்லாசமாய் உறவு கொண்டது மட்டுமல்லாமல், அவள் கர்ப்பவதியான செய்தி வந்தவுடன், அந்த செய்தி வெளியே தெரிந்துவிட்டால் ஏற்படுத்தப்போகும் விளைவுகளை நினைத்து, தாவீது அதற்கு முடிவு கட்ட முடிவு செய்தான்.அதனால் யுத்தத்தில் நம்பகமான வீரனான உரியாவை அழைத்து,அவனைத் தன் வீட்டுக்குள் அனுப்ப முடிவு செய்தான். அப்படி உரியா சென்றிருந்தால் அவளுடைய குழந்தைக்கு தகப்பன் உரியா என்றுதானே உலகம் நினைக்கும்.
தாவீது போட்ட இந்தத் திட்டம், கர்த்தராகிய தேவனுக்கும், ராஜாவுக்கும், தன்னோடு யுத்தத்தில் உள்ள மற்ற வீரருக்கும் வாழ்க்கையில் முக்கிய இடம் கொடுக்காத ஒருவனிடம் செல்லுபடியாயிருக்கும்.
இங்கு பிரச்சனை என்னவென்றால் தாவீது தம்முடைய கொள்கையில் விடாப்பிடியாக உள்ள ஒருவனிடம் மாட்டிக்கொண்டான். அவனை வீட்டிற்குள் அனுப்ப முயற்சி செய்த தாவீதிடம் இந்த கொள்கைவாதி, நான் அப்படி செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும், உம்முடைய ஆத்துமாவின் பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான்.
கொள்கைகளை உரியா தான் உடுத்தும் ஆடை போல உபயோகப்படுத்தவில்லை! ஆடைகள் என்றால் களைந்து விடலாமே!
நேர்மையானதையே செய்வேன் ஏனெனில் அதுவே நேர்மையானது! இது எப்படி! அவன் வாழ்ந்த காலம் என்னமோ குறுகியதுதான் ஆனால் அவன் தன்னை வழிநடத்திய தேவனின் பலத்த கரத்துக்குள் அடங்கியிருந்தான் என்பதுதான் உண்மை.
ஏத்தியனான உரியா ஒரு வேறு மதத்திலிருந்து மனம் மாறியவன், கர்த்தரை தன் வாழ்க்கையில் முதலிடமாகக் கொண்டவன், தன்னுடைய வாழ்வின் முடிவு பரியந்தம் கர்த்தருக்கும், ராஜாவுக்கும், தன்னோடு ஊழியம் செய்த சக போர் வீரருக்கும் உண்மையாக வாழ்ந்த ஒரு கொள்கைவாதி!
நம்முடைய சோதனைகளுக்கு மத்தியில், நம்முடைய ஆசாபாசங்களுக்கு மத்தியில் நாம் கிறிஸ்துவுக்காக எடுத்த முடிவில் உறுதியாக உள்ளோமா? ஏத்தியனான உரியாவை எதுவுமே அசைக்க முடியவில்லை! நீயும் நானும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உறுதியான கொள்கைவாதியாக இருக்க ஜெபிப்போம்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்