2 சாமுவேல்: 11:15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு அவனைவிட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.
எனக்கு மிகப்பிடித்த ஒரு ஆங்கில மாத இதழ் உண்டு. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஆந்திராவில் இருந்தபோது யாரிடமாவது சொல்லியனுப்பி சென்னையிலிருந்து இந்த இதழை வாங்குவேன். அதிலிருந்து சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காட்டப்படுகிற வாழ்க்கையே வேறு. ஒரு உயர்ந்த வாழ்க்கையை வரையறுத்துக் காட்டும் மாத இதழ்.
அப்படிப்பட்ட இதழில் காட்டப்படும் வாழ்க்கையைப் போலத்தான் ஆரம்பித்தது பத்சேபாளின் வாழ்க்கையும். ராஜாவின் மிகச்சிறந்த வீரர் பட்டியலில் இடம்பெற்ற ஒரு மாபெரும் வீரனோடுதான் அவளுடைய திருமணம் நடந்தது. பத்சேபாளும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் அல்ல. அவள் ராஜாவுக்கு அறிவுறை கொடுக்கும் ஒரு பெரியவரின் பேத்தி. அந்த வருடத்தில் எல்லோராலும் பேசப்பட்ட திருமணமாய் கூட இருந்திருக்கலாம்.
ஆனால் என்ன பரிதாபம்! உரியாவும், பத்சேபாளும் தங்கள் திருமண வாழ்க்கையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்குமுன்னரே உரியாவும், பத்சேபாளும் அக்கினிக்குள் தள்ளப்பட்டனர்.
உரியா ஒரு கொள்கைவாதி, கர்த்தராகிய தேவனுக்கும் அவருடைய உடன்படிக்கை பெட்டிக்கும் முதலிடம் கொடுத்தவன், ராஜாவின் எந்த தந்திர வார்த்தைகளும், மாயாஜாலமும் அவனைத் தன் முடிவை மாற்ற செய்ய முடியவில்லை என்று பார்த்தோம். அவன் வேறு மதத்திலிருந்து மனம் மாறியவனாயிருந்தாலும் தேவனையும், ராஜாவையும், தன்னுடன் இருந்த சக சேவகரையும் அதிகமாக நேசித்தவன் என்று பார்த்தோம்.
ஆனால் இன்றைய வசனம் கூறுகிறது அப்படிப்பட்ட ஒரு விசுவாசி மும்முரமாய் நடக்கிற போரிலே வெட்டுண்டு சாகும்படி மற்றவர்கள் பின்வாங்கி அவன் மட்டும் தள்ளப்படுவதைப் பார்க்கிறோம். உரியாவைப்போன்ற விசுவாசிக்கு வந்த பரீட்சையைப்பாருங்கள்!
ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்!
உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? எல்லோரும் பின்வாங்கி உங்களை மட்டும் வேதனை என்ற போர்க்களத்தில் தனியாக விட்டதுண்டா? உங்கள் பலருடைய வாழ்க்கையில் இப்படி நடக்கிரது என்று எனக்குத் தெரியும்.சிலருக்கு பணப்போராட்டம்! சிலருக்கு கேன்ஸர் போராட்டம்! சிலருக்கு தோல்வியடைந்த திருமணம்! உரியாவைப்போல உங்களில் பலரும் இந்த யுத்தக்களத்தில் தனித்து நிற்கிறீர்கள் அல்லவா? எத்தனை போராட்டம்? உங்களை சுற்றி எத்தனை எதிரிகள்! ஆனால் உதவி செய்ய யாருமே இல்லை என்று புலம்புகிறீர்கள் அல்லவா!
ஏசாயா 53 ல் மேசியாவும் நமக்காக இப்படியாக அடிக்கப்படுவதைப் பார்க்கிறோம்! அவர் தனித்துதான் இந்த யுத்தத்தில் தள்ளப்பட்டார். தனிமையில் எல்லாவற்றையும் அனுபவித்தார். ஆனால் அந்த இம்மானுவேல் நம்மோடு இன்று இருக்கிறார். கலங்க வேண்டாம்! நீ தனித்து இல்லை! உன்னைத் தாங்கி சுமக்கும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார்!
நான் சிறுவயதில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூவரின் கதையையும் கேட்டபோது (தானி 3:25), என் கண்கள் விரிந்தன! அவர்களோடு நான்காவதாக கர்த்தர் இருந்தார்.
புயலடிக்கும் உன் வாழ்க்கையில் கிறிஸ்து கூட இருப்பானால் உனக்கு பயமே வேண்டாம்! அவரை நம்பு!! அவர் உன்னோடு இருப்பேன் என்று வாக்களித்ததை விசுவாசி! அவர் உன் கரம் பற்றி நடத்துவார்! உனக்கு வெற்றியளிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
உங்களுடை இதழ்கள் ஒவ்வொன்றும் ஆசிர்வாதமாயுள்ளது கர்த்தர் கூடயிருப்பார் ஆமென்