2 சாமுவேல் 11: 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய் இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்….. நீ யுத்தத்தை பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.
வேதத்தில் நாம் படிக்கிற சில அதிர்ச்சியான சம்பவங்களில் ஒன்றுதான் நாம் படித்துக்கொண்டிருக்கிற உரியாவின் கதையும். நாம் தாவீது, பத்சேபாள், உரியாவின் சரித்திரத்தைத் தொடரும்போது, தாவீது யுத்தத்திலிருந்து செய்தி கொண்டுவந்த ஆளிடம் தன்னுடைய ஆர்மி ஜெனெரல் யோவாபிடம் கூறும்படி சொல்லிய வார்த்தைகள் அவனுடைய இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது.
அந்த ஆள் யுத்தத்தைப்பற்றி சொல்லிய அனைத்தையும், ஏத்தியனான உரியா வெட்டுண்டு செத்தான் என்ற செய்தியையும் கேட்ட தாவீது, சேனையின் தலைவனான யோவாப் யுத்தத்தைக்குறித்து வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லியனுப்புகிறான். அதுமட்டுமல்ல உரியாவின் மரணத்தை ஒரு போரில் ஏற்ப்பட்ட சாதாரண மரணம் போல காண்பிப்பதற்காக, போரில் பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும் என்று சொல்கிறான்.
இந்த இரக்கமற்ற வார்த்தைகளை நாம் சிந்திக்கும்போது, எபிரேய மொழி இந்த வார்த்தைகளை சிங்கம் தன் இரையை விழுங்குவதற்கு சமமான வார்த்தையால் விளக்குகிறது. இத்தனை கொடுமையான வார்த்தைகளைத் தான் தாவீது உபயோகப்படுத்துகிறான். அவன் இருதயம் கல்லாகி விட்டது போலும்!
தன்னைப்பற்றியும், தன்னுடைய குடும்பத்தையும் பற்றி சிந்திக்காமல், கர்த்தருக்காகவும், ராஜாக்காகவும், தன்னுடன் போரில் உள்ள சக ஊழியருக்காகவும் தன்னை ஒப்படைத்திருந்த ஒரு உத்தம ஊழியனுக்கு கிடைத்த பரிசு இதுதான். தாவீது பேசுவதைப் பார்த்தால் ஏதோ உரியா போய் தவறான இடத்தில், தவறான வேளையில் நின்றுவிட்டதால் வெட்டுப்பட்டது போல அல்லவா உள்ளது!
அசுத்த ஆவியால் அலைக்கப்பட்ட சவுலை இளகிய மனதோடு தன்னுடைய இசை திறமையால் அமைதிப்படுத்திய அந்த தாவீதா இப்பொழுது ஒரு கொலையை இரக்கமேயில்லாமல் சாதாரண மரணம் போல வர்ணிக்கிறான்! இந்தக் கொலையைப்பற்றி அவன் உள்ளம் சிறிது கூட கலங்கவே இல்லை!
தமிழில் சுரணையற்ற என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமக்கு ஏதாவது அடி பட்டால் அந்த இடத்தில் தோல் தடித்து சுரணையில்லாமல் இருக்கும். நம்முடைய எலும்பை பாதுகாக்க தோல் தடித்து விடும். சில நேரங்களில் நம்முடைய காயப்பட்ட இதயம் கூட இப்படி சுரணையில்லாமல் போய்விடுகிறது. அப்படித்தான் தாவீதுக்கும் ஆகிவிட்டது. ஆனால் இந்த நிலமை எவ்வளவு ஆபத்தானது தெரியுமா!
இதை எப்படி குணப்படுத்துவது?
எசேக்கியேல்: 36:26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
இதைக் குணப்படுத்தும் ஒரே வைத்தியர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் மட்டுமே! சுரணையற்ற, இரக்கமற்ற இருதயத்தை மாற்ற கர்த்தர் உன்னை அழைக்கிறார். உன்னுடைய உள்ளத்தில் ஏற்பட்ட காயம் உன்னை கசப்பாக்கி, சுரணையற்று போக செய்திருக்கலாம். கர்த்தராகிய இயேசு உன் காயத்தை ஆற்றி, உன் கடினமான இருதயத்தை எடுத்துப்போடு மென்மையான இருதயத்தைத் தருவார். கர்த்தரை நோக்கி ஜெபிப்போமா!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்