கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை!

 2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே …. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்.

நான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை! சாதாரணமாய் நாம் யாரும் அந்த மலையில் ஏறிப் பார்க்க முடியாதக் காட்சிகளை அந்த வீடியோ கொண்டிருந்தது.

மனிதர்களே ஏற முடியாத இந்த மலைகளில் ஏறுபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசித்து பார்த்தேன்!  இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது! கடக்க முடியாத மலைகளையும்  பள்ளத்தாக்கையும் நாம் கடந்து செல்லும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பற்றிதான்!

நீ சாகமாட்டாய் ஆனால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீடு திரும்பி விட்டான். தாவீது மனமொடிவால் செத்தவனைப்போல ஆகிவிட்டான். கர்த்தர் அவனுடைய பிள்ளையை அடித்தார்.

அந்த அருமையான சிறு குழந்தையை தன் வயிற்றில் சுமந்தது பத்சேபாள் தானே! குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே! கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே! அவளது முதல் குழந்தையின் இறப்பு அவளை எப்படி பாதித்திருக்கும்.  பெரும் மன வேதனையும், துன்பமும் பெரிய மலை போல நின்றன் பத்சேபாள் முன்.

இதைப் படிக்கும்போது நான் கவனித்த ஒன்று என்னவென்றால், கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்  என்றது.  கர்த்தர் பத்சேபாளை இன்னும் உரியாவின் மனைவியாகத்தான் பார்த்தார். அவள் தாவீதின் அரண்மனையில் இருந்தது கர்த்தரின் பார்வையில் ஒரு அதிக ஆசை வெறிப்பிடித்த ஒரு ராஜாவின் திருட்டு செயல் போலத்தான் பட்டது.

தாவீது தன்னுடைய பாவத்தை நினைத்து மனம் கலங்கினாலும் அதன் விளைவுகள் பின் தொடர்ந்தன. இங்கு நாம் மறந்தே போகிற ஒரே ஒரு காரியம், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக பத்சேபாளின் இருதயமும்  நொறுங்கிப் போயிற்று என்பதைத்தான்!

பத்சேபாளை தாவீது அழைத்து வர ஆள் அனுப்பிய போது நான் அங்கு இல்லை!  அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை! ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ? அதுவும்  எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவள் அனுபவிப்பது – தன்னுடைய பாவத்தால் மனமொடிந்து செத்தவனைப்போல இருந்த கணவன், கர்த்தரால் அடிக்கப்பட்டு உயிரிழந்த தன்னுடைய முதல் பிறப்பு!

இதைவிட பெரிய மலையை உங்கள் வாழ்க்கையில் பார்த்ததுண்டா?  மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நாம் கடக்கும்போது அவை கடினமாய்த் தோன்றலாம். ஆனால் அவை நம்மை விசுவாசத்தில் உறுதியாக்க, நம்மை அவருடைய வழிப்படுத்த,  கர்த்தர் எடுக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக்கூடாது!

இன்று ஒருவேளை பத்சேபாளைப்போல பெரிய மலையையும், பள்ளத்தாக்கையும் நீ கடந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் உன்னை ஒருவேளை பொன்னை புடமிடுவது போல புடமிட்டுக் கொண்டிருக்கலாம்!

சோர்ந்து போகாதே! இது கர்த்தர் தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கிற சிகிச்சை! 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment