2 சாமுவேல் 13: 6 – 7 அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.
அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான்.
தேவனுடைய கட்டளையை மீறி பல பெண்களை மணந்த தாவீதின் வீட்டில் பல பிள்ளைகள் வளர்ந்தனர். எத்தனை பிள்ளைகள் என்று நமக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் பெண் பிள்ளைகள் எண்ணிக்கையில் வர மாட்டனர். நமக்குத் தெரிந்த ஆறு மனைவிகளுக்கு குறைந்தது பன்னிரண்டு பிள்ளைகளாவது இருந்திருக்கலாம். இது மிகக் குறைந்த எண்ணிக்கைதான். நிச்சயமாக இதைவிட பெரிய எண்ணிக்கை உள்ள பிள்ளைகள் அங்கு தாவீதை அப்பா என்று அழைத்திருப்பார்கள்.
ஒரு மனிதன் பல வேலைகளை செய்ய தாலந்துகள் உள்ளவனாக இருந்தாலும், பல மனைவிகளையும், பலருக்குப் பிறந்த பிள்ளைகளையும் சமாளிப்பது சுலபமல்ல! அதிலும் தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. அவனுடைய வேலைகளுக்கு மத்தியில் பிள்ளைகளுக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருப்பான்? ஒருவேளை என்னுடைய கணிப்பு தவறு என்று நினைப்பீர்களானால் இன்றைய வேதாகமப் பகுதியைப் பார்க்கலாம்.
அம்னோன் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் ஆசைப்பட்டான் என்று பார்த்தோம். அவன் இச்சையினால் ஏக்கம் பிடித்து மெலிந்து போவதைப்பார்த்த அவனுடைய உறவினனும் நண்பனுமான யோனதாப் அவனை ஒரு கள்ள நாடகம் ஆடும்படி திட்டம் போட்டுக் கொடுக்கிறான். ராஜாவின் குமாரனாகிய அவன் எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்று தந்திரவாதியான அவன் தூண்டி விடுகிறான்.
இந்த இடத்தில் பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்கத்தவறிய தகப்பனாகிய தாவீது உள்ளே வருகிறான். அம்னோனின் உள்நோக்கத்தைக் காணத் தவறிய இந்தத் தகப்பனால் அவனுடைய மகளாகிய தாமாருக்கு மிகவும் கொடுமையான காரியம் நடக்கிறது.
யோனதாப் திட்டம் வகுத்தபடியே உள்ளே வந்த தாவீது, அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொல்லி தாமாருக்கு செய்தி அனுப்புகிறான். என்ன பரிதாபம்! பிள்ளைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தகப்பன்! ஒருவேளை தாவீது ஒரு மனைவியோடு வாழ்ந்திருந்தால், தன்னுடைய பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிட்டிருப்பான். இப்படிப்பட்ட ஒரு சோகமான சம்பவம் வேதத்தில் இடம் பெற்றிருக்காது!
ஒரு நல்ல தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளின் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்தும். ஒரு கெட்ட தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளை அம்னோனைப்போலத்தான் நடத்தும்.
இன்று எவ்வளவு நேரம் உங்கள் பிள்ளைகளோடு செலவழிக்கிறீர்கள்? பிள்ளைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்களுடைய நல்ல செல்வாக்கு பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துகின்றதா? உங்களுடைய சாட்சியின் மூலம் உங்கள் பிள்ளைகளை பரம தகப்பனாகிய தேவனின் அரவணைப்புக்குள் வழிநடத்தியிருக்கிறீர்களா?
கர்த்தர்தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்