2 சாமுவேல் 13: 11 – 13 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில் அவன் அவளைப்பிடித்து அவளைப்பார்த்து: என் சகோதரியே நீ வந்து என்னோடே சயனி என்றான். அதற்கு அவள் வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதி கெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்.
அன்று அழகிய ஏதேன் தோட்டத்தில் பகலிலே குளிர்ச்சியான வேளையில் தேவன் என்றும் செய்வதுபோல தன்னுடைய நண்பர்களாகிய ஆதாமோடும் ஏவாளோடும் உலாவும்படி வந்தார். அவருடைய சத்தத்தைக் கேட்ட இருவரும் தேவனுடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் மரங்களுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டனர். கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்றார் என்று வேதம் ஆதியாகம 3 ல் கூறுகிறது.
இது சாதாரண கேள்விஅல்ல! கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் தம்மைவிட்டு விலகியிருக்க என்ன காரணம் என்று கேட்கிறார். ஏனெனில் நாம் அவரோடு நெருங்கி வாழவே அவர் ஆசைப்படுகிறார். ஆனால் மிகவும் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால் அன்றிலிருந்து ஏதேனின் வாழ்க்கை மாறிவிட்டது! ஆம்! ஏனெனில் அன்றுதான் குற்ற உணர்வு, வெட்கம், மரணம் என்ற வார்த்தைகள் முதலில் உலகத்துக்குள் வந்தன!
அன்றிலிருந்து இன்றுவரை நாமும் நம்முடைய சுய இச்சையின்படி வாழும்போது ஆவி, ஆத்துமா மட்டுமல்ல சரீரத்திலும் அதன் பலனை அனுபவிக்கிறோம்.
இன்று தான் விரும்பியதை அடைய ஏமாற்று வழியைக் கைக்கொள்பவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு தாவீதின் குமாரனான அம்னோன் என்னும் ஒரு தலைகனம் பிடித்த , இச்சையை அடக்க முடியாத, தன்னுடைய அரசகுமாரன் என்ற நிலையை உபயோகப்படுத்தி சற்றும் எதிர்பாராத வேளையில் தன்னுடைய சகோதரியக் கற்பழித்த ஒரு வாலிபனைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
தாமாரின் நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன் என்ற வார்த்தைகள் தான் நாம் இன்று சிந்திக்கப்போகிறோம்!
வெட்கம் என்பது அவமானம் மட்டும் அல்ல மற்றவர்களின் கண்களில் கேவலமும் கூட. வெட்கத்தையும் அவமானத்தையும் சுமந்தவர்களுக்குத்தான் அதன் வேதனை தெரியும். ‘அவ ஒரு மாதிரியான பொண்ணு’ அவளோடே பழகாதே என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? சில நேரங்களில் யாரோ ஒருத்தரால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கும் இந்தப் பட்டம் கிடைத்து விடுகிறது அல்லவா?
அது ஏதேன் தோட்டமாயிருக்கட்டும், அல்லது அண்ணனே தங்கையைக் கற்பழித்த அம்னோனின் அறையாக இருக்கட்டும், அங்கே அவர்கள் அனுபவித்த வெட்கத்தையும் அவமானத்தையும் இன்றும் சுமக்கும் அநேகர் உண்டு!
வெட்கத்தோடு அவமானத்தோடு, நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று கசப்போடு வாழும் உங்களுக்கு ஒரு நற்செய்தி! நாம் எந்த அவமானத்தையும் வெட்கத்தையும் சுமந்து கூனி குறுகி வாழ வேண்டாம்! இதற்காகத்தான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தார்.
லுக்கா 8: 43-48 ல் சொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உதிரப்போக்கினால் பலவருடங்களாக பெரும்பாடு பட்டவள். அந்தக் காலத்தில் எந்த நோயும் தேவனுடைய சாபத்தால் வந்தது என்று நினைக்கப்பட்டது. இதை விட அதிக அவமானம் அந்தப் பெண்ணுக்கு என்னவென்றால் உதிரப்போக்கு காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டனர். அவர்களை யாரும் தொடவேக் கூடாது. அது தீட்டாகிவிடும். சற்று யோசித்துப் பாருங்கள்! பன்னிரண்டு வருடமாக உதிரப்போக்கினால் அவள் எல்லோராலும் ஒதுக்கி வைத்து விடப்பட்டிருந்தாள்! குடும்பத்தின் எந்த காரியங்களிலும் பங்கு இல்லை! தேவாலயத்துக்கு கூட செல்ல முடியாது. அவள் மனநிலை எப்படியிருந்திருக்கும்? அந்த ஊருக்கே அவளுடைய பிரச்சனை தெரிந்திருக்கும். அந்தப் பொண்ணா என்று ஊரில் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவளைப்பற்றி பேசியிருப்பார்கள். எத்தனை அவமானம்! வெட்கத்தால் கூனி குறுகியிருந்த ஒரு பெண் அவள்!
ஆனாலும் இந்தப்பெண் கூட்டத்துக்குள் போய் கர்த்தராகிய இயேசுவைத் தொட எந்த வெட்கமும் அவமானமும் தடையாய் நிற்க முடியவில்லை. என்ன ஆச்சரியம்! தொட்ட மாத்திரத்தில் சுகமடைந்தாள்! அவள் அனுபவித்த வெட்கம், அவமானம், தீண்டாமை எல்லாமே ஒரு கணத்தில் ஓடிப்போய் விட்டது!
உன்னுடைய கடந்த காலத்தில் நடந்த வெட்கமும் அவமானமும் உனக்கு எந்தத் தகுதியும் இல்லை, நீ வாழவே தகுதி இல்லை , நீ தொலைந்து போ என்று சொல்லலாம்! நம்மை பயத்திலேயே இருக்க செய்வது தான் பாவத்தின் வேலை!
ஆனால் வெட்கம்தான் முடிவு இல்லை! கர்த்தராகிய இயேசுவைத் தேடி விசுவாசத்தில் அவரைத் தொடும்போது அவர் விடுதலையளிக்கிறார். தாமாரின் இடத்தில் இருந்த அனுபவம் உண்டா? வெட்கமும் அவமானமும் பயமும் உங்களை விடாமல் துரத்துகிறதா? கர்த்தராகிய இயேசு மாத்திரம்தான் உன்னை விடுவிக்க முடியும்! தாமதியாதே!
கர்த்தர்தாமே இந்த வார்த்தை மூலமாக உன்னை ஆசீர்வதிக்கட்டும்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்